sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (17)

/

குற்றம் குற்றமே! (17)

குற்றம் குற்றமே! (17)

குற்றம் குற்றமே! (17)


PUBLISHED ON : மார் 24, 2024

Google News

PUBLISHED ON : மார் 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக கூறப்படும், 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர் கிருஷ்ணராஜின் மகனை பற்றி விசாரிக்க, மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றான், தனஞ்ஜெயன். 27 ஆண்டுகளுக்கு முன், நடந்தது எதுவும் தனக்கு தெரியாது என்றும், குழந்தையை கண்டெடுத்து இல்லத்தில் சேர்த்த துப்புரவு பணியாளர் தற்சமயம் உயிருடன் இல்லை. ஆனால், அவரது விலாசத்தை பழைய பதிவேட்டிலிருந்து, இரண்டு நாட்களில் தேடி எடுத்து தருவதாக உறுதியளித்தார், அங்கிருந்த அலுவலர்.

தனஞ்ஜெயனின் அக்கா சாந்திக்கு, வரன் வந்திருப்பதாக தரகர் வந்து சொல்ல, தனஞ்ஜெயனுக்கு போன் செய்து, உடனே வீட்டுக்கு வர சொன்னாள், அவனது அம்மா. அந்த தரகரை அனுப்பியது, தாமோதர் தான் என்பது, அவர் போனில் பேசிய போது தெரிந்தது.

தாமோதரின் கேள்வி, புரோக்கர் வையாபுரியை கிசுகிசு குரலுக்கு மாற்றியது.

''ஐயா, கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்ச மாதிரிதாங்க.''

''முடிஞ்ச மாதிரி இல்ல, முடிச்சு காட்டுற.''

''நான் என்னங்க பண்ண முடியும்? விவரமா எடுத்துச் சொல்லலாம். மத்தபடி, பத்து நாளைக்குள்ள கல்யாணம்ன்னா திகைக்குறாங்க. ரொம்ப ஏழை குடும்பம். நகை நட்டுன்னு ஒண்ணும் கிடையாது. இப்ப தான் பையனுக்கு நல்ல வேலை கிடைச்சு, கொஞ்சம் நிமிர்ந்திருக்காங்க.''

''அதெல்லாம் மேட்டரே கிடையாது. கட்டுன புடவையோட அந்த பொண்ணு வந்தா போதும். எல்லா செலவும் பையன் வீட்டுதுன்னு அழுத்தமா சொல்லு.''

''அப்படி சொன்னா, பையன் பக்கம் ஏதோ கோளாறுன்னு நினைக்க மாட்டாங்களாய்யா? அப்படி சொன்ன மாப்பிள்ளைங்க, பல பேர் இருக்காங்க. அப்படி சொன்னாலே சந்தேகம் தான் வருது.''

''இதோ பார், உன் கமிஷன், ஐந்து லட்சம் ரூபா. அது ஒண்ணும் சும்மா வந்துடாது. நீ ஆண்டு பூரா அலைஞ்சாலும் இவ்வளவு சம்பாதிக்க முடியாது. அப்புறம் உன் இஷ்டம்.''

''கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. பையனுக்கு, நிஜமாலுமே கல்யாணம் நின்னு போச்சா?''

''சந்தேகமா இருந்தா விசாரிச்சுக்கோ, விலாசம் தரேன்.''

''இல்லீங்க, இங்க பெண்ணோட அண்ணன் ரொம்ப விபரமானவனுங்க. அதான்...''

''அவன் விசாரிப்பான்னு எனக்கும் தெரியும். என் குறியும் அந்த பொண்ணு இல்ல, அவன் தான்.''

''உங்க போட்டியில, நாளைக்கு நான் நாறிடக் கூடாதுங்க.''

''உனக்கு எதுவும் ஆகாது; நான் உறுதி தரேன். மளமளன்னு பேசி முடி,'' என்று சொல்லி, போனை, 'கட்' செய்தார், தாமோதர்.

திரும்பி வந்தார், புரோக்கர் வையாபுரி.

அவரை ஒரு மாதிரிப் பார்த்தான், தனஞ்ஜெயன்.

''பையனோட அப்பா தான் பேசினாரு, சம்மதிச்சுட்டாங்களான்னு கேட்டாரு. பத்து நாளைக்குள்ள கல்யாணம்ங்கிறது தான் இடிக்குது; குறைஞ்சது ஒரு மாசமாவது தேவைன்னு, நான் சொன்னேன்,'' என்று, தனஞ்ஜெயனை சமாளிக்கத் துவங்கினார்.

''ஒரு மாசம்ன்னு நான் சொல்லவே இல்லையே?'' அவரை சற்று திகைக்க வைத்தான், தனா.

''இல்ல தம்பி, நானாகத்தான் அப்படி சொன்னேன்.''

''அது எப்படி, நீங்க அப்படி சொல்லலாம். கல்யாணம்கிற போர்வையில எவ்வளவு தப்பு நடக்குது தெரியுமா?'' தனாவின் குரலில் நல்ல காத்திரம்.

''இவங்க, நல்ல குடும்பம் தம்பி. நீங்க நல்லா விசாரிச்சு பார்த்துக்கலாம்.''

''விசாரிக்காம இருப்பேனா... நீங்க, அவங்களை பற்றிய தகவல் கொடுத்துட்டு போங்க. உங்களுக்கு, நான் அப்புறமா போன் பண்றேன்.''

''சாயந்தரம் தான் நேர்லயே வர்றதா சொல்றாங்களே... அப்ப அவங்ககிட்டயே பேசிடலாமே?''

''என்ன புரோக்கரே, நல்ல கமிஷன் தர்றேன்னாங்களா. ரொம்ப துடிக்கிறீங்க,'' தனஞ்ஜெயன் கேட்டதும், வாயடைத்துப் போன புரோக்கர், அவர்கள் பற்றிய தகவல்களை தந்து விட்டு புறப்பட்டார்.

அவர் விலகவும், அவனை ஒரு மாதிரி பார்த்தாள், சுசீலா அம்மா.

''என்னம்மா, ஏன் அப்படி பார்க்கற?''

''பெரிய இடம், தானா தேடி வர்றாங்க...'' என்று இழுத்தாள்.

''அப்ப, உனக்கு இந்த இடம் பிடிச்சுடிச்சா?''

''நான் அப்படி சொல்லலடா. அவங்க இடத்துல இருந்து பாரு. ஒரு நல்ல காரியத்துக்காக வந்துட்டு, அது நடக்காம திரும்பிப் போனா, நல்லாவா இருக்கும்?''

''முதல்ல அதெல்லாம் எவ்வளவு உண்மைன்னு தெரிய வேண்டாமா?''

தனஞ்ஜெயன் கோபமாக கேட்க, அதுவரை அமைதியாக இருந்த குமார், ''டேய், 25 ஆண்டுக்கு முன் தொலைஞ்சு போனவனையே தேடப் போறோம். இது ஒரு மேட்டரா? கிளம்புடா, கையில இருக்குற தகவல்களை வெச்சு, கல்யாணம் நடக்க இருந்ததா? அந்த பொண்ணு, நிஜமா ஓடிப் போயிட்டாளான்னு எல்லாத்தையும் கேட்டுருவோம்.

''இந்த காலத்துல எந்த பொண்ணுடா அப்பா - அம்மா பார்க்கிற பையனை கட்டிக்கிறாங்க. 'கெட் டு கெதரே' ஒரு சாதாரண விஷயமாயிடுச்சேடா?'' என்ற குமாரின் கேள்வி, தனாவை அசைத்தது.

''சரி கிளம்பு. அதையும் பார்த்துடுவோம்,'' என்று சொல்லி, இருவரும் புறப்பட்டனர்.

தனாவை விட ஒரு வயது மூத்த அக்காவான சாந்தி, அவனை மிக ஏக்கமாக பார்த்தாள். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள், ஏக்கங்கள்.

கல்யாணம் நடப்பதாக இருந்த மண்டபத்துக்கு தான், முதலில் இருவரும் சென்றனர்.

''ஆமாம் சார், கல்யாணம் நின்னு போய் ஒரே கசா முசாவாயிடிச்சு. எங்க மண்டபத்துல, இப்படி எல்லாம் இதுக்கு முந்தி நடந்ததே இல்லை,'' என்றார், மேனேஜர்.

அடுத்து, ஓடிப் போன பெண்ணின் அப்பாவுக்கு போன் செய்தான்.

''என் தலையில இடியை இறக்கிட்டு போயிட்டா சார், அந்த கழுத. என்னால வெளியில தலை காட்ட முடியலை,'' என்று கதறி, குமுறினார்.

அதன்பின், மாப்பிள்ளை வேலை செய்வதாக சொல்லப்பட்ட, 'ஐடி' நிறுவனத்தை, 'கூகுளு'க்குள் புகுந்து தேடிப் பிடித்ததில், அந்த நிறுவனமும் பொய் இல்லை என்பது தெரிய வந்தது.

மாப்பிள்ளையின் அமெரிக்க முகவரியை, தெரிந்த ஒரு அமெரிக்க நண்பரிடம் கொடுத்து விசாரிக்க சொன்ன போது, அவரும் உறுதிப்படுத்தினார்.

இதற்கு மேல் ஆராய எதுவுமில்லை என்ற நிலையில், காருக்குள்ளிருந்த தனாவும், குமாரும் ஒரு முடிவுக்கு வரத் துவங்கினர்.

''என்னடா, அதான் எல்லாம் தெளிவாகிடுச்சே. பையன் வீட்ல, பெண் பார்க்க வரச்சொல்ல வேண்டியது தானே?''

''உம் சொல்லிடுவோம். அப்படியே நம்ம, 'டூட்டி'யையும் கொஞ்சம் பார்த்துடுவோம்.''

''இந்த கல்யாண விஷயம் தெரிஞ்சா, கார்த்திகா மேடம் தான் சந்தோஷப்படுவாங்க. 'முதல்ல கல்யாணத்த முடியுங்க. அப்புறமா அண்ணனைத் தேடலாம்'ன்னு தான் சொல்வாங்க,'' என்று குமார் சொன்னது, அப்படியே நடந்தது.

கார்த்திகாவை பார்த்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர் சங்கரலிங்கம் வீட்டு முகவரியை நெருங்கி விட்டது வரை சொன்னதும், ''முதல்ல, உங்க சிஸ்டர் கல்யாணத்தை பாருங்க. இன்று முதல், உங்க ரெண்டு பேருக்கும், 10 நாள் இல்ல, 15 நாள் விடுமுறை. அப்படியே, ஆபீஸ்ல கேஷியர்கிட்ட போய், கல்யாண செலவுக்குன்னு, 10 லட்சம் ரூபாயை வாங்கிக்குங்க,'' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சியளித்தாள்.

''மேடம், உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசு.''

''பாராட்டெல்லாம் அப்புறம், முதல்ல கல்யாணம். போய் கல்யாண வேலையை பாருங்க. பணம் பத்தலேன்னா கவலைப்பட வேண்டாம். நாங்க இருக்கோம்.''

''உண்மையில், என் சிஸ்டர் ரொம்ப கொடுத்து வெச்சவ.''

''அதுல என்ன சந்தேகம், என்கிட்ட எத்தனை கோடி இருந்து என்ன பிரயோஜனம். என் அண்ணன் யாருன்னே இந்த நிமிஷம் வரை எனக்கு தெரியாதே? ஆனா, உங்க சிஸ்டர் அப்படி இல்லையே... தனஞ்ஜெயன்கிற ஒரு புத்திசாலி அண்ணன் அவங்களுக்கு இருக்காரே?'' என்று சொல்லி, கண்கலங்கி விட்டாள் கார்த்திகா.

''மேடம் கலங்காதீங்க. இன்னும் பத்து நாள்ல, என் அக்கா கல்யாணம் மட்டுமில்ல, உங்க அண்ணனையும் நான் கண்டுபிடிப்பேன். இது சத்தியம்,'' என்று உணர்ச்சிவசப்பட்டான், தனஞ்ஜெயன்.

அதை அங்கீகரித்து, ''ஆல் தி பெஸ்ட்,'' என்று கை குலுக்கினாள், கார்த்திகா.

அவன் புறப்படவும், ''ஒன் மினிட்...'' என்று தடுத்தாள்.

''எஸ் மேடம்.''

''அந்த விவேக்கால புதுசா எதாவது பிரச்னை?''

''இந்த நிமிஷம் வரை எனக்கு தெரிஞ்சு இல்ல மேடம். ஆனா, நிச்சயம் சும்மா இருக்க மாட்டான். அவன் அமைதியா இருக்கான்னா, பெருசா ஏதோ செய்யப் போறான்னு தான் அர்த்தம்.''

''இந்த கல்யாணத்துல, அவன் எதாவது கலாட்டா செய்துடுவானோன்னு எனக்கு பயமா இருக்கு, தனா.''

''எனக்கும் தான் மேடம். கல்யாணத்தை நடத்த விடாம பண்ணலாம். என் அக்காவை பற்றி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட தப்பா சொல்லலாம். அவ்வளவு ஏன், கல்யாண வீட்ல வெடிகுண்டே கூட வைக்கலாம். நானும் அதை எல்லாம் யோசிச்சுட்டேன்.''

''எப்பவும் போல ரொம்பவே எச்சரிக்கையா யோசிச்சுருக்கீங்க. இதுல எது நடந்தாலும் எல்லாமே கெட்டுடும். என்ன செய்யப் போறீங்க?''

''வைரத்தை வைரத்தால தான் மேடம் அறுக்க முடியும். இப்பவே என்ன பண்ணப் போறேன்னு பாருங்க,'' என்ற தனஞ்ஜெயன், தன் மொபைல் போனிலிருந்து விவேக்கை அழைத்தான்.

போனை, 'ஸ்பீக்கரில்' போட்டான்.

''ஹலோ மிஸ்டர் விவேக், நான் தனஞ்ஜெயன் பேசறேன்.''

''தெரியுது. எனக்கு போன் பண்ற அளவு உன்கிட்ட துணிச்சல் இருக்கிறதை நினைச்சு, நான் சந்தோஷப்படறேன். என்ன விஷயம்?''

''என் சிஸ்டருக்கு, இன்னும், 10 நாள்ல கல்யாணம். நீ அதை மோப்பம் பிடிச்சு தெரிஞ்சு சொல்றதுக்கு முன், நானே சொல்லிடறது நல்லதுன்னு தோணிச்சு. அப்புறம் அந்த கல்யாணத்தை நிறுத்த, நீ என்னவெல்லாம் செய்வேன்னும் யோசிச்சு பார்த்தேன். கடைசியா கல்யாண மண்டபத்துல குண்டு வைக்கிற அளவுக்கு கூட நீ போவேன்னு நான் நம்பறேன்.

''அதனால, 'ரிஜிஸ்டர் ஆபீஸ்'ல, கல்யாணத்தை முடிச்சு, ஸ்டார் ஹோட்டல்ல விருந்துன்னு முடிவெடுத்திருக்கேன். இங்கெல்லாமும், நீ எதாவது செய்து, கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கலாம். ஏன், மாப்பிள்ளையையே கூட கடத்த முயற்சிக்கலாம்.

''தாராளமா செய். இதுல எது நடந்தாலும், என் பதிலடி ரொம்ப மோசமா இருக்கும். அதே சமயம், கல்யாணம் நல்லபடியா நடந்தே தீரும். நீ, என்னை கண்காணிக்கிற மாதிரியே, நானும் உன்னை கண்காணிக்க துவங்கிட்டேன்.

''அமைதியா ஒதுங்கி போயிட்டா, அது உனக்கு நல்லது. இல்ல, நிச்சயம் உன் உடம்புல ஒரு கையோ, காலோ இருக்காது. இது உதார் இல்ல... சவால்,'' என்று கூறி, போன் இணைப்பை துண்டித்தவனை, பிரமிப்போடு பார்த்தாள், கார்த்திகா.

''என்ன மேடம்?''

''எப்பவும் அவன் தான் மிரட்டுவான். ஆனா, இப்ப நீங்க மிரட்டி இருக்கீங்க. இது எந்த வகை தந்திரம், தனா?''

''சைக்காலஜில இதுக்கு, 'மைண்ட் பிரேக் பார்மட்'ன்னு பேர் மேடம். ஒரு வகையில எதிரி என்ன செய்வாங்கன்னு யோசிச்சு, அதை முன்பே சொல்லிட்டா, எதிரிக்கு அது அதிர்ச்சியை கொடுக்கிறதோட, குழப்பத்தையும் உண்டாக்கும். நிச்சயம் வேற வழிகளை தான் யோசிப்பான்.''

''அந்த வேற வழியும், நமக்கு ஆபத்து தானே?''

''அது தவிர்க்க முடியாத ஆபத்து. நாமளும் சந்திச்சு தான் தீரணும். என்ன செய்யறது, புலி வாலைப் பிடிச்சுருக்கேன்?'' என சகஜமாகத்தான் சொன்னான், தனஞ்ஜெயன்.

ஆனால், கலங்கினாள், கார்த்திகா.

அப்பா தாமோதரிடம், தனஞ்ஜெயன் மிரட்டலாய் பேசியதை, விவேக் சொன்னதும், சிரித்தபடியே, ''இந்த கல்யாணம் நடக்கணும்டா, விவேக். ஏன்னா, இதை நடத்துறதே நான் தான். மாப்பிள்ளையும் யாரோ இல்லை... நம்ப ஆளுடா,'' என்றார்.

வாயைப் பிளந்தான், விவேக்.

— தொடரும்.இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us