
கடந்த, 1881ல், மெட்ரிகுலேஷன், 1884ல், பி.ஏ., பட்டம் பெற்றார், கோபாலகிருஷ்ண கோகலே. பூனாவில் மாதம், 30 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியராக இருந்து கொண்டே சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
கடந்த, 1902ல், வைஸ்ராயின் கீழ், சட்டசபை உறுப்பினரானார். 13 ஆண்டுகள் இப்பணியை சிறப்பாக செய்தார். கோகலேவின் திறமைக்கான பரிசாக, 1904ல், பட்ஜெட்டை தயாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டது, ஆங்கிலேய அரசு.
இந்தியா - இங்கிலாந்து பொருளாதார வரவுகள் பரிசீலிக்க, ஒரு குழு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில், இக்குழு முன் விரிவான சாட்சியம் அளித்தார், கோகலே.
'இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி ராணுவ செலவுக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இவற்றுக்கே செல்கிறது. இதனால், சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பணம் செலவழிக்க முடிவதில்லை.
'இந்த நிலை மாற வேண்டும். ஏழைகளாய் உள்ள, அடிப்படை வசதியற்ற இந்தியர்களின் நிலையை, பிரிட்டிஷ் அரசு அறிய வேண்டும். இந்த நிலை மாற வழி வகை செய்ய வேண்டும்...' என்று உறுதியாக கூற, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிர்ந்தனர்.
வானதி பதிப்பக வெளியீடான, டி.கே.எஸ்.கலைவாணன் தொகுத்த, 'நுாற்றாண்டு கண்ட நாடக வேந்தர்' என்ற நுாலிலிருந்து:
சென்னை கடற்கரையில், பாரதியாரின், 80ம் ஆண்டு நினைவு விழா நடந்தது. விழாவில், பாரதியார் பாடல்களை பாடினார், சங்கீத மேதை ஒருவர். ஆனால், பாரதியின் பாடலிலேயே இணைந்து கிடக்கும் உணர்ச்சி பாவத்தை கொன்று விட்டு, சங்கீதத்துக்கே முதன்மை தந்து, பாடினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது.
எரிச்சலுடன், 'அட, அந்த ஆளை முடிச்சுக்க சொல்லிட்டு, நம்ம சண்முகத்தைக் கூப்பிட்டு பாடச் சொல்லுங்க...' என்று கூட்டத்தை நடத்தியவர்களிடம் கூறினார்.
அதன்பின், டி.கே.சண்முகம் மேடை ஏறி, உணர்ச்சி பொங்க, பாரதியாரின் பாட்டை பாடினார்.
டி.கே.சண்முகம் நடத்திய நாடகங்களில் மிகவும் பிரபலமானது, 'அவ்வையார்!' அவ்வையாராக நடிப்பதற்கு பொருத்தமாக, தன்னுடைய இரு முன் பற்களை அகற்றி விட்டார். முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே வைத்து, டி.கே.எஸ்., நாடக மன்றம் தயாரித்த, 'அப்பாவின் ஆசை' என்ற நாடகத்துக்கு நிகரான ஒரு மேடை நாடகம் இதுவரை வரவில்லை.
முதலில் மாதத்திற்கு, 13 நாடகங்கள் நடத்தினார். ஆனால், கம்பெனியில் நடிப்பவர்கள் மற்றும் மற்றவர்களின் எண்ணிக்கை 100 - 200 என, உயர்ந்ததும், திங்கட் கிழமை தவிர எல்லா நாட்களிலும் நடிக்க ஆரம்பித்தனர்.
* டி.கே.எஸ்., வீட்டில், 7,500 புத்தகங்களை கொண்ட நுாலகம் இருந்தது. பின்னாளில், அந்த புத்தகங்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப்பட்டது
*டி.கே.எஸ்.,சின், 'அவ்வையார்' நாடகம், எஸ்.எஸ்.வாசனால், அவ்வையார் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றி கண்டது. இதில், கே.பி.சுந்தராம்பாள், அவ்வையாராக நடித்திருந்தார். ஆனால், சண்முகத்துக்கு தான், 'அவ்வை சண்முகி' பட்டம்.
நடுத்தெரு நாராயணன்