PUBLISHED ON : மார் 31, 2024

கோவை மாவட்டம், அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன் என்பதே, ஏ.பி.என்., என்ற மூன்று எழுத்துக்கான விரிவாக்கம்.
ஏ.பி.நாகராஜனின் தந்தை, பரமசிவம். அம்மா பெயர், லட்சுமியம்மாள். பிப்., 28, 1928ல் பிறந்தார், நாகராஜன். பெற்றோர், இவரது இளம் வயதிலேயே இறந்து விட்டனர். அதனால், வறுமையில் வாடினார்.
சேலத்தில் இருந்த பாட்டியின் வீட்டில் சேர்க்கப்பட்டார். பாட்டியோ, நாகராஜனின் தாய் மாமன்களின் ஆதரவில் இருந்து வந்தார். அங்கும் பிரச்னை எழ, நாகராஜனை நாடக குழு ஒன்றில் சேர்த்து விட்டார், பாட்டி.
நாகராஜனின் கலைப்பயணம் அங்கிருந்து தான் துவங்கியது.
ஏ.பி.நாகராஜனை, தன் வளர்ப்பு பிள்ளையாய் தத்து எடுத்துக் கொண்டாள், கலைத்தாய்.
உலகம் எனும் நாடக மேடையில், காலமகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டில், யாரை, யாருடன், எங்கே, எப்போது சேர்ப்பது என்பதே, அந்த விளையாட்டின் விதி.
காரைக்குடியில், டி.கே.எஸ்., நாடக குழுவின் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள தேவாங்கர் அச்சகத்தை சேர்ந்த நண்பர் சங்கரன் மூலம், டி.கே.எஸ்., குழுவுக்கு வந்து சேர்ந்தான், 9 வயது சிறுவனான, நாகராஜன்.
பெண் வேடத்துக்குரிய குரலும், தோற்றமும் நிறைந்து இருந்ததால், அவனிடம் தனி கவனம் செலுத்தினார், டி.கே.எஸ்., அவனுக்கு, நாடகத்தில், பால சீதை வேடம் கொடுத்தார்.
பின்னர், சக்தி கிருஷ்ணசாமியால் நடத்தப்பட்ட, சக்தி நாடக சபாவிலும் பணியாற்றினார், நாகராஜன். இவருடன் நாடக மேடையில் நடித்தவர்களில், சிவாஜி கணேசனும், எஸ்.எஸ்.ஆரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடக நடிகராக இருந்த, ஏ.பி.நாகராஜன், பெண் வேடத்தில் மிக நன்றாக நடிப்பார். ஒருமுறை, நாகராஜன், பெண்ணாக நடிக்கும் போது, கதாநாயக நடிகர் அவருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.
அந்த நாடகத்தை பார்க்க வந்த, கதாநாயக நடிகரின் மனைவிக்கு சந்தேகம் வந்து விட்டதாம். அதன்பின், நாகராஜன் என்ற ஒரு ஆண் தான், பெண் வேடத்தில் நடித்தார் என்று தெரிந்ததும், சந்தேகம் தீர்ந்து, நிம்மதி அடைந்தாராம்.
சத்தியவான் சாவித்ரி கதையை, 'விதியின் வெற்றி' என்ற பெயரில், நாடகமாக எழுதி அரங்கேற்றினார், ஏ.பி.என்.,
இந்த கதையின் அடிப்படையே, மரணமெனும் இயற்கை விதியை மாற்றி, எமனிடம் வாதாடி வெற்றி பெற்று, சாவித்ரி, தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டு வருவது தான். அதற்கு, 'விதியின் வெற்றி' என, அருமையான பெயரை சூட்டினார். இது, அவரது ஆழ்ந்த அறிவையும், கலை நயத்தோடு பொருள் பொதிந்து பெயர் சூட்டும் அறிவையும் காட்டுவதாக இருந்தது.
அதேபோல், நாடகத்தில், சாவித்ரி, எமனை தொடர்ந்து செல்லும்போது, தீப்பாலம் வரும். அந்த தீப்பாலத்தை அருமையாக அமைத்திருந்தார், நாகராஜன். தீப்பிடித்து எரியும் ஒரு பாலத்தில், எமனும், சாவித்ரியும் செல்வது போன்ற காட்சியை தத்ரூபமாக உருவாக்கியது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வசதி ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கலை நயத்தோடு காட்சிகளை உருவாக்கும், ஏ.பி.என்.,னின் கலைத் தன்மைக்கு இது ஒரு சான்று.
அதேபோன்று, அந்த நாடகத்தில், சத்தியவானாக நடித்த தசரதனையே, சாவித்ரியாகவும் நடிக்க வைத்தார். நாடகத்தில் இரட்டை வேடமென்பதும், அதுவும் ஒருவரே பெண் - ஆணுமாக நடிப்பது அதுவரை இல்லாத புதுமை. அதிலும் முன்னோடியாக இருந்தவர், நாகராஜன்.
அந்த நாடகத்தில் சத்தியவானாகவும், சாவித்ரியாகவும் நடித்த தசரதன், பின்னாளில், ஏ.பி.என்.,னின் பல படங்களுக்கு இயக்குனராக பணிபுரிந்து, அவரது இறுதி காலம் வரை நிழல் போல் தொடர்ந்தார்.
பால பருவத்திலிருந்தே, நாடக மேடையில் சிறந்து விளங்கிய நாகராஜனுக்கு, ஒரு கட்டத்தில் அதில் பெரிய அளவுக்கு முன்னேற்றமில்லை என்ற சலிப்பு ஏற்பட்டது. நாடக மேடை தொடர்புகளிலிருந்து தன்னை விடுவித்து, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' திரைப்பட நிறுவனத்தில், உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார்.
மழை விட்டாலும் துாவானம் விடாது என்பர். அதற்கேற்ப, அவர், நாடக மேடையை விட்டு தன்னை விலக்கிக் கொண்டாலும், சக நடிகர்கள் நடிக்கும் நாடகங்களை பார்ப்பதை விடவில்லை.
ஒருமுறை நாடகம் பார்க்க சென்றபோது, தசரதன் நடித்துக் கொண்டிருந்த நாடக குழுவான, 'பாலமுருகன் பாய்ஸ் நாடக குழு'விலிருந்த நாடக வாத்தியார், திடீரென விலகியதால், தள்ளாடிக் கொண்டிருந்தது, நாடக நிறுவனம்.
அந்த நாடக குழுவை, மதுரை, வாலாபுரம் என்ற ஊரை சேர்ந்த ரங்கசாமியும், அவரது சகோதரர் ராமசாமியும் நடத்திக் கொண்டிருந்தனர். தங்களின் நாடகங்களை உடன் இருந்து நடத்த, அனுபவசாலி யாராவது இருந்தால் நல்லது என்று நினைத்தனர்.
அதனால், தசரதனும், கவிஞர் தஞ்சை ராமய்யாதாசும், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தில், உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த, ஏ.பி.நாகராஜை சந்தித்தனர். 'பாலமுருகன் பாய்ஸ் நாடக குழு'வின் நிலைமையை எடுத்துச் சொல்லி, அதை ஏற்று நடத்த வேண்டும் என்று, கேட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் நாடக மேடைக்கு திரும்ப முடிவெடுத்தார், ஏ.பி.நாகராஜன்.
நாடக மேடைக்கு வந்தவுடன், பழைய நாடகம் வேண்டாம். புது நாடகம் நடத்தலாம் என்று முடிவு செய்தார், நாகராஜன். அதற்காக, 'மச்ச ரேகை' என்ற புது நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தஞ்சை ராமய்யாதாஸ்.
நாகராஜனின் வருகைக்கு பின், 'பாலமுருகன் பாய்ஸ் நாடக குழு'வுக்கு புது வேகம் கிடைத்தது. 'மச்ச ரேகை' நாடகம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின், 'பகடை பன்னிரெண்டு, பொன்முடி, சரஸ்வதி சபதம்' போன்ற நாடகங்களையும் நடத்தினர், அக்குழுவினர்.
இன்பமும், துன்பமும் இயற்கையின் நியதி என்பதற்கு ஏற்ப, நாடகக் குழு சந்தித்த நெருக்கடி...
— தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.
கார்த்திகேயன்