
எஸ். ராஜம், திருச்சி: தப்பு செய்யும் அரசு ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்வதால், அவர்கள் திருந்தி விடுவரா என்ன?
உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான், தவறு செய்யும் மற்ற அரசு ஊழியர்கள் திருந்த, வழி கிடைக்கும்!
ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு: 'மோடி, 10 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்...' எனக் கேட்கும், இவர்களின், 38 எம்.பி.,கள் என்ன செய்தனர் என்பதை, வெள்ளை அறிக்கையாக தரலாமே...
இவர்களது எம்.பி.,கள், தொகுதிக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லை என்பதை வெள்ளை அறிக்கையாக கூற முடியுமா என்ன?
* ஐ. சுப்பிரமணியன், ஆவரைகுளம்: திராவிட மாடல் அரசு, பொது நுாலகங்களில், 'தினமலர்' நாளிதழுக்கு தடை விதித்து விட்டது. ஆனால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், முதலில், 'தினமலர்' நாளிதழை ஆவலோடு தேடுகின்றனர். 'தினமலர்' நாளிதழ் இல்லாததால், நுாலகத்தை விட்டு விரைவில் வெளியேறி விடுகின்றனரே... ஏன்?
நடுநிலை நாளேட்டை மட்டுமே விரும்புகின்றனர், அவர்கள்... இப்போது, கடைகளில் சென்று வாங்குகின்றனர். 'தினமலர்' இதழின், 'கேஷ் சேல்' இப்போது அதிகரித்திருக்கிறது. 'தேங்க்ஸ் டூ' திராவிட மாடல் அரசு!
* பி. அனுமந்த்ரா, சென்னை: தி.மு.க.,வில் அமைச்சராகும் தகுதி பலருக்கு இருந்தும், மீண்டும் மீண்டும், குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தவர்களையே, மந்திரியாக்க, முதல்வர் துடிப்பது ஏன்?
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மந்திரிகள், முதல்வர் பாக்கெட்டை நிறைத்தவர்களாக இருக்கக் கூடும்... புதியவர்களுக்கு அது தெரியாதே!
ஆர். பாலகிருஷ்ணன், மதுரை: நேரத்தை எப்படி செலவிடுவது?
சாப்பிடுவதற்கும், துாங்குவதற்கும் மட்டும் நேரம் ஒதுக்குங்கள். மற்ற நேரமெல்லாம் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்து, அதை நோக்கியே விடாப்பிடியாக தேடிச் சென்று கொண்டிருங்கள்!
டி. நேரு, திருச்சி: நான், கண்ணியமாக இருக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?
எதிலும் நேர்மை, எதிலும் நியாயம், எதிலும் நாணயம். கடமையை செய்ய வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும்; கண்ணியம் கிடைத்து விடும்!
க. கதிரேசன், சென்னை: அரசியல்வாதிகள் எல்லாம், சினிமா நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு, மக்களிடம் நடிக்கின்றனரே!
நடிகர்களுக்கு ஒரு படத்திற்கு சில கோடி ரூபாய் தான் சம்பளம்... ஆனால், இந்த அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடித்து விட்டால், பல கோடி ரூபாய், மக்கள் பணம், அவர்கள் மடிக்கு வந்து விடுமே... அதனால், சினிமா நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடிக்கின்றனர்!