PUBLISHED ON : ஏப் 14, 2024

திரைப்படம் தயாரிக்க முடிவெடுத்த, எம்.ஏ.வேணுவிடம், 'நால்வர் என்ற நாடகம் நடக்கிறது; நல்ல கதை. அதை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் படம் ஆக்கலாம்...' என்றனர், நண்பர்கள்.
நாடகத்தை பார்த்தார், வேணு. நாடகத்தின் கதை, அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதுமட்டுமில்லை, அதில் நடித்த, ஏ.பி.நாகராஜனின் நடிப்பும் மிகவும் பிடித்தது.
நாடகம் முடிந்தவுடன், ஒப்பனை அறைக்கு சென்று, நாகராஜனை பார்த்தார்.
நாடகத்தை திரைப்படம் ஆக்குவதாக சொன்னதுடன், நாகராஜனையே அத்திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும் என்றார், வேணு.
அதற்கு ஒப்புக் கொண்டார், நாகராஜன்.
தான் ஆரம்பித்த, 'சங்கீதா பிக்சர்ஸ்' மூலம், 'நால்வர்' நாடகத்தை திரைப்படமாக்கினார், வேணு. அந்த திரைப்படத்தின் இயக்குனர், வி.கிருஷ்ணன்.
கோவை, 'பட்சிராஜா பிலிம்ஸ்' சார்பில், கவிஞர் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளையின், 'மலைக்கள்ளன்' நாவலை, திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்படத்திற்கு, கருணாநிதி, கதை, வசனம் எழுத வேண்டும் என்று விரும்பினார், பட்சிராஜா பிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலு.
கதை எழுதிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, காங்கிரஸ்காரர். எனவே, அவர் எழுதிய கதைக்கு, தி.மு.க.,காரரான, தான் வசனம் எழுதுவது அவ்வளவு சரியாக இருக்காது என, மறுத்து விட்டார், கருணாநிதி.
திரைப்படத்தின் கதாநாயகனான, எம்.ஜி.ஆர்., தலையிட்டு, கருணாநிதியை வசனம் எழுத சம்மதிக்க செய்தார். இந்த விஷயத்தை இவ்வளவு விரிவாக சொல்வதற்கு, பின்னணி உள்ளது.
மலைக்கள்ளன் திரைப்படத்தில், கதாநாயகன் எம்.ஜி.ஆர்., தான், மலைக்கள்ளன். அவரைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக, ஏ.பி.என்., தான் முதலில் நடிப்பதாக இருந்தது.
ஆனால், கருணாநிதியை வசனம் எழுத ஏற்பாடு செய்த, எம்.ஜி.ஆர்., அதற்கு கைமாறாக, காவல்துறை அதிகாரியாக நடிக்க, தன் அண்ணன் சக்கரபாணிக்கு சந்தர்ப்பம் தருமாறு கேட்டார். எம்.ஜி.ஆரின் கோரிக்கையை, பட்சிராஜா அதிபரால் மறுக்க முடியவில்லை. இந்த விஷயத்தை, ஏ.பி.நாகராஜனிடம் எப்படி சொல்வது என்று விழித்தார்.
அந்த பொறுப்பையும் தானே ஏற்று, ஏ.பி.நாகராஜனிடம் பேசுவதற்காக, கோவையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார், எம்.ஜி.ஆர்.,
இந்த விஷயத்தை முன்னரே கேள்விப்பட்ட, நாகராஜன், எம்.ஜி.ஆரை பார்க்க மறுத்து விட்டார். நாகராஜனை பார்க்காமலே திரும்பினார், எம்.ஜி.ஆர்., முடிவில், படத்தில், காவல்துறை அதிகாரி பாத்திரத்தில், சக்கரபாணி தான் நடித்தார்.
அடுத்து, மாங்கல்யம் படத்தை தயாரித்தார், எம்.ஏ.வேணு. இப்படத்திற்கு கதை, வசனம், ஏ.பி.நாகராஜன். இப்படத்தின் இயக்குனர், கே.சோமு. திரைப்படத்தில், நாகராஜனும் நடித்திருந்தார்.
கதைபடி, கதாநாயகன், மருத்துவம் படித்துவிட்டு, தன் கிராமத்துக்கு வருகிறான். அங்கு, அவர் வீட்டில் வேலை செய்யும் ஏழை பெண்ணை காதலிக்கிறான். அதற்கு, தடைகள் பல உருவாகின்றன.
நீங்கள், என்னை காதலித்தாலும், நான், உங்களை காதலித்தாலும், நம் இருவரின் காதலும் நிறைவேறுவதில் நிறைய தடைகள் உண்டாகும் என்ற யதார்த்தத்தை எடுத்துச் சொல்கிறார், அப்பெண்.
சொன்னபடியே, அவள் அந்த வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். ஆனாலும், அவள் நம்பிக்கை இழக்காமல் அவை எல்லாவற்றையும் மீறி, கதாநாயகனை கண்டுபிடித்து, அவனை கைப்பிடிக்கிறாள். மாங்கல்யம் என்று பெயரிடப்பட்டதால், மங்கலமான நாதஸ்வர இசையுடன், படம் துவங்கும்.
தேவர் பிலிம்ஸ் அதிபர், சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர், கோவையில் இருக்கும்போதே, ஏ.பி.நாகராஜனுக்கு பழக்கம் உண்டு. சிலரை, பங்காளியாக சேர்த்துக் கொண்டு, 'பார்வர்ட் ஆர்ட் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து, ஒரு சொந்த படமும் எடுத்தார், தேவர்.
'பார்வர்ட் ஆர்ட்'சில் எடுத்த, நல்ல தங்காள் திரைப்படத்திற்கு, கதை, வசனம் எழுதியவர், நாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் நடிக்கவும் செய்தார்.
நாடறிந்த இந்த கதை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் நடந்த உண்மை சம்பவம். இக்கதை, ஒப்பாரி பாடலாக, வில்லுப் பாட்டாக, நாடகமாக நடைபெற்று, மக்களிடையே பிரபலமானது.
அதன்பின், தனியாக திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து, சொந்த படம் எடுக்க நினைத்தார், தேவர். தனக்கு நெருக்கமான திரைப்படத் துறை நண்பர்கள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் கலந்து கொண்ட நாகராஜன் தான், தேவர் பெயரிலேயே அத்திரைப்பட நிறுவனத்தை ஆரம்பிக்கலாம் என்றார். அதன்படி தான், 'தேவர் பிலிம்ஸ்' ஆரம்பிக்கப்பட்டது.
டவுன் பஸ்சையும், அதன் முதலாளி, அந்த நிறுவனத்தின் மேலாளர், அதில் வேலை செய்யும் நடத்துனர் மற்றும் இரு காதல் ஜோடிகளை மையமாக வைத்து சுழலும் கதை, டவுன் பஸ்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, 'சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவர் வீடு திரும்பல...' என்ற பாடல், மிகவும் பிரபலம்.
இந்த படமும், ஏ.பி.என்., கதை, வசனத்தில் உருவானது தான். இப்படத்தின் கதைப்படி, அண்ணன் படித்தவன், கல்யாணமானவன். தம்பி, படிக்காதவன். ஆனால், அண்ணன் மீது உயிரையே வைத்திருப்பான்.
வேலைக்கு போன இடத்தில், சந்தர்ப்பவசத்தால், அண்ணன் மீது கொலைப் பழி விழுகிறது. சிறை செல்கிறார், அண்ணன். அண்ணன் குழந்தைகளையும், அண்ணியையும் காப்பாற்றுகிறான், தம்பி. இதில், அண்ணனாக நடித்திருந்தார், ஏ.பி.என்., தம்பியாக, டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார்.
வி.கே.ராமசாமியை கதை எழுத சொன்னார், ஏ.பி.என்.,
சிவாஜி கணேசனும், ஏ.பி.என்.,னும் இணைந்த முதல் திரைப்படம், நான் பெற்ற செல்வம். இப்படத்தின் பாடல்களை, கவிஞர் கா.மு.ஷெரிப் எழுதியிருந்தார். பாடல்கள் அருமையாக அமைந்தது.படப்பிடிப்பு துவங்கும்போது,ஏ.பி.என்.,னுக்கு குழந்தை பிறந்தது. எனவே, இத்திரைப் படத்திற்கு, நான் பெற்ற செல்வம் என, பெயரிட்டார். கதைப்படியும், அப்பெயர் பொருத்தமானதாகவும் இருந்தது.'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா... நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்...' போன்ற, இப்படத்தின் பாடல்களை இன்று கேட்டாலும், மனதை உருக்கும்.
— தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.- கார்த்திகேயன்