
முன்கதைச் சுருக்கம்: தனஞ்ஜெயனை, தன் வலையில் சிக்க வைக்க திட்டமிடுகிறார், தாமோதர். தன் கூட்டாளியான ராமகிருஷ்ணனின் மகனுக்கு, தனஞ்ஜெயனின் அக்காவை திருமணம் செய்து வைக்க மூளையாக செயல்படுகிறார்.
மலேஷியாவில், சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள, ராமகிருஷ்ணன் பற்றி, இன்டர்நேஷனல் போலீசிடம் கூறிவிடுகிறான், அவரது ஏஜென்ட் ஒருவன். தான் நிச்சயம் கைதாகி விடுவோம் என்ற பயத்தில், தாமோதருக்கு போன் செய்கிறார்.
'ஹார்ட் அட்டாக்' வந்ததாக நடித்து, தான் சொல்லும் மருத்துவமனையில் சேர்ந்து விட சொல்கிறார், தாமோதர். தனஞ்ஜெயனை தங்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்க செய்ய, இந்த கல்யாணம் நடந்தே தீரணும் என்று கூறி, துல்லியமான திட்டம் வகுத்துக் கொடுக்கிறார், தாமோதர்.
தனாவைத் தொற்றிய பீதி, குமாரையும் தொற்றிக் கொண்டது. சில வினாடிகள் இருவரும் மவுனமாய் அடுத்து என்ன செய்யலாம் என்பது போல யோசித்தனர். அவர்களின் தேக்கம், அம்மா சுசீலாவை தேடி வந்து, கேள்வி கேட்க வைத்தது.
''என்னப்பா, புதுசா எதாவது பிரச்னையா? ஹாஸ்பிடலுக்கு போகாம இங்கேயே நின்னுட்டீங்க?''
''ஒண்ணுமில்லம்மா... அடுத்து என்ன செய்யிறதுங்கிறதுல தான் ஒரு சின்ன குழப்பம், அவ்வளவு தான்.''
''இல்ல, ஒரு போன் வந்தது. அதுல இருந்துதான் இந்த தடுமாற்றம். நீ, ஆரம்பத்துலயே சொன்னியே உன் முதலாளியோட எதிரின்னு, அவனா?'' கச்சிதமாக கேட்டாள், அக்கா சாந்தி.
''ஆமாம், சாந்தி... அவன் தான். அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு தான் யோசிக்கறேன்.''
''இந்த கல்யாணம் பற்றி, அவனுக்கு தெரியுமா?''
''தெரிஞ்சு தான் பேசினான்; வழக்கம் போல மிரட்டினான்.''
''அது எப்படி, இங்க நாம இன்னும் பேசியே முடிக்கல. அதுக்குள்ள அவனுக்கு எப்படி தெரிஞ்சது?''
''அவன் ஆட்கள், நம் குடும்பத்தை கவனிச்சிட்டே இருக்காங்கம்மா.''
''இது என்னடா கொடுமை, இப்படி கூடவா ஒரு எதிரி இருப்பான்?''
''அம்மா, நீ பதட்டப்படாத, அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும்.''
''போலீசுக்கு போகப் போறியா? சொல்லு நானும் வரேன்.''
''போலீஸ் பக்கமே போக முடியாதும்மா. போனா ஆயிரம் கேள்விங்க வரும். அதுக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில என், எம்.டி., இப்ப இல்ல.''
''வேற எப்படி சமாளிப்ப?''
''எப்படியாவது சமாளிச்சிடுவேம்மா, நீ பதட்டப்படாத. குமார் புறப்படு, நாம முதல்ல ஆஸ்பத்திரிக்கு போவோம். மிச்சத்தை அங்க போய் பேசிக்குவோம்.''
இருவரும் புறப்பட்டனர். அவர்கள் விலகவும், அழத் துவங்கினாள், சாந்தி.
''நீ ஏன்டி அழற, கல்யாணம்கிறது ஏற்கனவே தீர்மானமான ஒண்ணுடி. இந்த பையன் தான் உன் புருஷன்னு இருந்தா, இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்,'' என்றாள், சுசீலா.
''என் கல்யாணத்தை நினைச்சு அழலம்மா. தனாவை நினைச்சு தான் கவலைப்படறேன். இன்ஜினீயர், டாக்டர்ன்னு எவ்வளவோ படிப்பும், வேலையும் இருக்கச்சே, இவனுக்கு ஏன் இப்படி ஒரு வேலை?
''இவன் முதலாளி, இவனை ஒரு கவசமா பயன்படுத்தறாரு. இவனும் அதுக்கு சம்மதிச்சு போராடிகிட்டிருக்கான். கிட்டத்தட்ட ஒரு படிச்ச அடியாள்மா இவன். இது நல்ல வேலையே இல்லை. அதை நினைச்சேன், அழுகை வந்துடுச்சு.''
''புரியுது, நல்லா புரியுது. இப்படி ஒரு வேலையே வேண்டாம். வரட்டும் இன்னைக்கு இரண்டுல ஒண்ணு பார்த்துடறேன்,'' என்ற ஒரு தீர்மானத்தோடு முடித்தாள், சுசீலா.
தனாவும், குமாரும் ஆஸ்பத்திரிக்குள் வரவும், மாப்பிள்ளை மோகனும், அவன் அம்மா ரஞ்சிதமும், இருவரையும் டாக்டரின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
ரஞ்சிதத்தின் கண்களில் கண்ணீர். மோகனிடம் போலியான ஒரு சோகம். டாக்டர் அவர்களை பார்த்து, தீர்மானமான குரலோடு பேசத் துவங்கினார்...
''மிஸ்டர் ராமகிருஷ்ணனுக்கு வந்திருக்கிறது, 'சிவியர் அட்டாக்!' 50 - 50 தான் வாய்ப்பு. உடனடியாக ஆபரேஷன் பண்ணலாம்ன்னா, 'சுகர், பிரஷர்' இருக்கு. இப்ப அவருக்கு மருந்து மாத்திரையை விட மனசுக்கு இதமா எதாவது நடக்கறது தான், முதல் மருந்து. அவரும், கல்யாணம், கல்யாணம்ன்னு முனங்கிக்கிட்டே இருக்காரு.
''ஆமா, யாருக்காவது கல்யாணம் நடக்க வேண்டியிருக்கா... அது நின்னு போயிடிச்சா... அந்த அதிர்ச்சியில தான், 'அட்டாக்' வந்திருக்கா?''
டாக்டரின் கேள்வி, ரஞ்சிதத்தை வேகமாக முன் வந்து பேச வைத்தது.
''ஆமாம் டாக்டர், இதோ என் ஒரே மகன் மோகன்...'' என ஆரம்பித்தவள், அவன் கல்யாணம் முதலில் நின்றதில் துவங்கி, இறுதியில் சாந்தியை பெண் பார்த்திருப்பது வரை, சொல்லி முடித்தாள்.
''நீங்க சொன்னதிலிருந்து ஒரு விஷயம் புரியுது. இந்த கல்யாணமும் நின்னுடுமான்னு மிஸ்டர் ராமகிருஷ்ணன் நினைச்சிருக்கார். அதோட எதிரொலி தான் இந்த, ஹார்ட் அட்டாக்.''
''இருக்கலாம் டாக்டர், எனக்கு இப்ப அவர் குணமானா போதும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யுங்க.''
''நான் தான் முதல்லயே சொன்னேனே, மனதுக்கு இதமா இப்ப ஒரு விஷயம் நடக்கணும். அப்புறம் தான் ஆபரேஷன், மாத்திரை மருந்து எல்லாம்.''
''அப்படின்னா...''
''நீங்க இப்ப நிச்சயம் பண்ணியிருக்கிற கல்யாணத்தை ஏன் இப்பவே நடத்தக் கூடாது?'' டாக்டர் சொல்லவும் விக்கித்துப் போனான், தனா.
''என்ன சொல்றீங்க டாக்டர்... நல்ல நாள், முகூர்த்த நேரம், கல்யாண விருந்துன்னு எதுவுமில்லாம ஒரு கல்யாணமா?''
''அதை எல்லாம் உங்க சவுகரியத்துக்கு அப்புறமா வெச்சுக்குங்க. இது ஒரு உயிரை காப்பாத்த, நான் காட்டுற வழி. ஒருவேளை என்னால காப்பாத்த முடியலேன்னாலும், அவர் திருப்தியோட கண்ண மூடுவாருல்ல.''
''டாக்டர்...''
''புரியுது சார், நீங்க தயங்குறது எனக்கு நல்லா புரியுது. கல்யாணம்கிறது ஒரு பொண்ணு வாழ்க்கையில, 'கிரேட் அக்கேஷன்!' அதை ஒரு ஆஸ்பத்திரியில், வார்டுக்குள்ள நடத்தறதா? கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது தான். ஆனா, ஒரு உயிரை காப்பாத்த இப்போதைக்கு இதை விட்டா வேற வழியே இல்லை.''
''வேணும்ன்னா, மாலை மாத்திக்கட்டும். தாலி கட்டுறத, நல்ல முகூர்த்த நாளா பார்த்து வெச்சுக்கலாமே!''
''செய்யுறத முழுசா செய்யுங்க. 'ரிசப்ஷனை' விமரிசையா கொண்டாடிட்டு போங்க. உறவுக்காரங்க கேட்டா, நடந்ததை சொல்லுங்க. நிச்சயம் பாராட்டத்தான் செய்வாங்க.''
டாக்டர் அழுத்தம் கொடுத்ததும், தனாவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், குமாருக்குள், ஒரு மின்னல்.
தனாவுடன் தனியே ஒதுங்கியவன், ''தனா, ஒரு விதத்துல இது நல்ல சந்தர்ப்பம்தான்டா. அந்த, விவேக்க கொஞ்சம் நினைச்சு பாரு. அவன் எப்ப எதை செய்வான்னு தெரியாத நிலையில, பயந்துகிட்டே நல்ல நாள் பார்க்கிறதுக்கு இது எவ்வளவோ மேல்டா.
''டாக்டர் சொன்ன மாதிரி, 'ரிசப்ஷனை' பிச்சு உதறிடுவோம். அதையும், 'ஸ்டார் ஹோட்டல்'ல வெச்சு, ஏ.ஆர்.ரஹ்மானையோ இல்ல இளையராஜாவையோ வெச்சு, 'மியூசிக் ஈவென்டு'ம் நடத்துவோம். எல்லா குறைகளும் அதுல மறைஞ்சுடும்டா,'' என்று குமார் சொல்ல, ஒரு தெளிவு தனாவிடம்.
''டாக்டர், நான் இப்பவே போய் அம்மா, தங்கச்சின்னு எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துடறேன். குமார், நீ போய் ஒரு நல்ல தாலிச் சங்கிலி வாங்கிட்டு வந்துடு. மறந்துடாம மாலையும் வாங்கிட்டு வந்துடு,'' என்ற மறு நொடி புறப்பட்டனர், குமாரும், தனாவும்.
மாப்பிள்ளை மோகன் முகத்தில் அப்பாடா என்று, நிம்மதிப் பெருமூச்சு. கச்சிதமாய் தாமோதரும் அப்போது அவனைக் கூப்பிட்டார்.
''என்ன மோகன், நான் சொன்னபடி தானே எல்லாம் நடந்துகிட்டிருக்கு?''
''ஆமாம் அங்கிள். டாக்டர் போட்ட போடுல, அந்த தனாவால எதையும் பேச முடியல. வீட்டுக்கு போய் எல்லாரையும் கூட்டிட்டு வர போயிருக்கான். அதிகபட்சம், இரண்டு மணி நேரத்துல, இந்த ஆஸ்பத்திரில, ஐ.சி.யு., வார்டுலயே எங்க கல்யாணம் நடந்துடும்.''
''சபாஷ்... கல்யாணம் நடந்த அடுத்த நிமிஷமே, நீ எதாவது கோவிலுக்கு கிளம்பிடு. அந்த கேப்ல உன் அப்பாவை என் ஆட்கள் தங்களோட, 'கஸ்டடி'க்கு கொண்டு வந்துடுவாங்க.''
''அங்கிள், அப்பா போலீஸ்கிட்ட மாட்டிக்க கூடாது. நான் உங்களை தான் நம்பியிருக்கேன்.''
''அந்த தனஞ்ஜெயனை மடக்கிற விஷயத்துல, நானும், உன்னைத்தான் நம்பியிருக்கேன். நீ, உன் பெண்டாட்டியை படுத்துற பாட்ல, அந்த தனஞ்ஜெயன் எங்க கால்ல வந்து விழணும்.''
''அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், அங்கிள்.''
''குட்... இதே மன உறுதியோட சொல்றபடி கேள். அப்பதான் உன் அப்பா மட்டுமில்ல நானும், தப்பிக்க முடியும். உன் அப்பா, போலீஸ்ல சிக்கிட்டா அவ்வளவு தான். நம்ப எல்லார் கதையும் முடிஞ்சிடும். அந்த கிருஷ்ணராஜும், 'அப்ரூவர்' ஆகி, நம்மை எல்லாம் வசமா சிக்க வெச்சிருவான்.''
''அது மட்டும் நடந்துடவே கூடாது, அங்கிள்.''
''திரும்பவும் சொல்றேன். எல்லாமே, நீ இப்ப அந்த தனாவோட அக்கா சாந்தி கழுத்துல தாலி கட்டுறதுல தான் இருக்கு.''
''அதிகபட்சம், இரண்டு மணி நேரத்துல முடிஞ்சுடும், அங்கிள். அந்த தாலி கட்டுற வீடியோவும் உங்களுக்கு, 'வாட்ஸ் அப்'ல வரும் பாருங்க,'' மாப்பிள்ளை மோகன் குரலில் ஒரு பெரும் உற்சாகம்.
தனஞ்ஜெயன், சொன்னதை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து விட்டாள், சுசீலா. மணப்பெண்ணான சாந்தியிடமும் ஒரு தயக்கம்.
''அம்மா, யோசிக்கல்லாம் நேரமில்லை. சாந்திக்கு வேகமா அலங்காரம் பண்ணுங்க. இந்த கல்யாணம் நடக்கறதுல தான், நம்ப சம்பந்தி ராமகிருஷ்ணன் உயிரே இருக்கு.''
''என்னடா நீ, கல்யாணம்கிறது என்னன்னு நினைச்ச. உடனே நடக்கற காரியமா? முகூர்த்தகால் நட்டு, பொண்ணை புதுப் பொண்ணாக்கி, முகூர்த்த நேரம் பார்த்து, ஊர், உறவு பார்க்க நடக்கிறதுக்கு பேர்தான்டா கல்யாணம்.''
''எனக்கு அதெல்லாம் தெரியாது பாரு. அதான், சம்பந்தி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கார்ன்னு சொல்றேன்ல.''
''அது இல்லடா... ஒருவேளை கல்யாணம் நடந்து, அவர் பிழைச்சுட்டா சரி. இல்லேன்னு வை. இவ வந்த நேரம், ஒரு உயிர் போயிடிச்சுன்னு சொல்ல மாட்டங்களா?''
''அது எப்படி சொல்வாங்க, அவங்கதானே வேகமா கல்யாணம் நடக்கணும்ன்னு ஆசைப்படறாங்க.''
''அதுமட்டுமில்லம்மா, நமக்கும் ஒரு எதிரி இருக்கான். அவன் எப்ப எதை செய்வான்னு தெரியாது. அதை எல்லாம் வெச்சு பார்த்தா, இப்படி நடக்கிறதுலேயும் ஒரு நல்லதுதாம்மா இருக்கு.''
தனஞ்ஜெயன் அழுத்திச் சொல்லவும் அதற்கு மேல், சுசீலாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் கல்யாண முகூர்த்த புடவையையே எடுத்து வந்து கட்டி விட்டாள். இருக்கிற நகைகளை எல்லாம் அணிவித்தாள். தங்கைகள் ஸ்ருதியும், கீர்த்தியும் பாவாடை தாவணிக்கு மாறி, தலை நிறைய பூவையும் வைத்துக் கொண்டனர்.
அப்படியே போய் அப்பா படத்தின் முன், விளக்கேற்றி வணங்கி, புறப்பட்டனர். அபார்ட்மென்ட்டில் பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
குமாரும், தாலி சங்கிலி, மாலை என்று வாங்கிக் கொண்டு வந்து சேர, தகவல் அறிந்து கார்த்திகாவும், தன் படகு காரில் வந்து சேர்ந்தாள்.
மாப்பிள்ளை மோகனுக்கும், ஆஸ்பத்திரி அறை ஒன்றில், அலங்காரம் நடந்து முடிய, பட்டு வேட்டி, சட்டையுடன் அவனும் தயாரானான்.
ஆஸ்பத்திரி டாக்டரே, அய்யருக்கு போன் செய்து வரவழைத்திருந்தார்.
''ஒரு ஆச்சரியம் பாருங்க, இப்ப அபிஜித் முகூர்த்தம். இப்படி ஒரு நேரம் அபூர்வமா தான் வரும்,'' என்று புகழ்ந்து கொண்டிருந்தார்.
ஒரு வழியாக எல்லாரும் ஒன்று சேர்ந்த நிலையில், தாலி கட்டும் அந்த முக்கிய நேரமும் வந்தது.
ஐ.சி.யு., வார்டில், ராமகிருஷ்ணன் படுக்கை அருகில், மோகனும், சாந்தியும், மாலையும் கழுத்துமாக நின்றனர். அய்யரும் தாலியுடன் மந்திரம் கூறத் துவங்க, 'ஆக்சிஜன் மாஸ்க்'குக்கு நடுவில், அதை ஒரு வகை குரூரத்தோடு பார்த்தபடி இருந்தார், ராமகிருஷ்ணன்.
— தொடரும்- இந்திரா சவுந்தர்ராஜன்