sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 14, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு —

நான், 45 வயது பெண். திருமணமாகி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனக்கு ஒரு மகன், மகள். நான், இல்லத்தரசி. கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நடுத்தர வர்க்க குடும்பம் தான். எனக்கு, பெற்றோர் இல்லை.

வயதான மாமனார், மாமியார், நாத்தனார், குடும்பத்துடன் கிராமத்தில் வசிக்கின்றனர்.

மகன், கல்லுாரியில் பி.காம்., பட்டப்படிப்பு முதலாமாண்டு படிக்கிறான். மகள், மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்தபோது, திடீரென்று தற்கொலை செய்து இறந்து விட்டாள். என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

நாங்கள் இருவரும் தோழிகள் போல் தான் பழகினோம். அவளது பிரிவிலிருந்து என்னால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. எனக்குள் தாழ்வு மனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் அலை மோதுகின்றன.

மகனுக்கு, நல் வாழ்க்கையை அமைத்து தர முயல்கிறேன். ஆனால், அவ்வப்போது மனதளவில் சுணக்கம் ஏற்பட்டு, 'யார் எப்படியாவது போகட்டும்...' என்று இருந்து விடுகிறேன்.

இச்சமயத்தில், வீட்டில் சமைப்பது, துவைப்பது என்று எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறேன்.

இதனால், கணவரும், மகனும் அதிகம் பாதிக்கின்றனர். இதை உணர்ந்தாலும், என்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் தவிக்கிறேன்.

கொஞ்ச நாட்களுக்கு கிராமத்துக்கு சென்று தங்கி வரலாம் என்றால், கணவரது வேலை மற்றும் மகனின் படிப்பு பாதிக்குமே என்ற கவலை ஒரு பக்கம்.

அக்கம்பக்கத்தினருடன் பேசுவதோ, 'டிவி' பார்ப்பதோ எதிலும் ஈடுபாடு இல்லை. ஒருமுறை மனநல ஆலோசகரை சந்தித்து, என் பிரச்னையை கூறினேன். அவர், சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து, ஏதாவது ஒரு பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்.

ஆனாலும், இது எதுவும் பலன் அளிக்கவில்லை. கணவரும், மகனும் மிகவும் கவலைப்படுகின்றனர். நான் என்ன செய்தால், என் பிரச்னை தீரும்.

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு சகோதரிக்கு —

நீ செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம்:

* மகளின் தற்கொலையை தினம் தினம் மரணத்தணிக்கை செய்யாதே. காதல் தோல்வியா, பெற்றோரின் மீது அதிருப்தியா, கல்லுாரி தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா, நீண்ட நாள் சுகவீனமா, தற்கொலையை விளையாடி பார்த்தாளா, சகோதரனுடன் சண்டையா மற்றும் உயிர்தோழி பிரிவா?

எதனால் தற்கொலை செய்து கொண்டாள் என, ஆராயாதே. தேவையற்ற ஆராய்ச்சி மன பதற்றத்தை, நிம்மதியின்மையை பரிசளிக்கும். உன்னுடைய ஆராய்ச்சி, மகளை உயிருடன் கொண்டு வந்து விடுமா?

* உன் குடும்பத்தில், மாமனார், மாமியார், கணவர், மகன் இருக்கின்றனர். இறந்தது மகள் மட்டும் தான். மகளின் மீதான பாசத்தை இரண்டாக பிரித்து, மகன் மற்றும் கணவர் மீது கூடுதல் பாசம் செலுத்து.

* தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் உடனிருந்து கொல்லும் சத்ருக்கள். மகளின் தற்கொலைக்கு நீ எந்தவிதத்திலும் காரணம் இல்லை. சினிமாவிலும், விஞ்ஞான புதினங்களிலும் தான், காலப் பயணம் போய் தற்கொலையை தடுக்க முடியும். கூட்டிலிருந்து பட்டுப்புழு வெளியேறி வண்ணத்துப்பூச்சியாய் பறப்பது போல, சோக விலங்குகளை உடைத்து, வெளியே வா.

* மகள் வயது உறவுக்கார பெண்களை வீட்டுக்கு வரவழைத்து, விருந்து உபசரி. தற்கொலை செய்து கொண்ட மகளின் தோழிகளுடன் அளவளாவி புத்திர சோகத்துக்கு, வடிகால் அமை.

* ஒருமுறை குடும்பத்துடன் திருப்பதி போய் வா, திருப்பம் நேரும்.

* கணவர், மகனுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, சுற்றுலா சென்று வா.

* மகளின் நினைவு நாளில், அனாதை இல்லம், முதியோர் இல்லம் சென்று, ஒருநாள், 'ஸ்பான்சர்' செய்.

* இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் மகனுக்கு திருமணம் செய்து வை. மருமகளை, மகள் போல பாவி. இளைய மகனின் குழந்தையாகக் கூட, மகள் மீண்டும் பிறக்கலாம்.

* நீ சுணங்கி நின்றால் உன் குடும்பமும் வாடும். இப்படி வாட செய்வதை, அருமை மகள் விரும்ப மாட்டாள்.

* நேரம் கிடைக்கும் போது, சொந்த கிராமத்துக்கு கணவர், மகனுடன் சென்று வா. நகைச்சுவை கதைகளை படி.

* ஏழை கல்லுாரி பெண் ஒருத்தியின் கல்விச் செலவை ஏற்று, படிக்க வை.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us