/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
திருப்பதி சென்று திரும்பி வந்தால்...
/
திருப்பதி சென்று திரும்பி வந்தால்...
PUBLISHED ON : ஏப் 14, 2024

சத்யன் சாருக்கு சற்று படபடப்பாய் தானிருந்தது.
'கிருஷ்ணா அவ்வளவு வலிந்து கூப்பிடுகிறானே...' என்று, நெகிழ்ந்து போய்த் தான், அந்தப் பயணத்திற்கு ஒத்துக்கொண்டார்.
அதுவும், ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பை யாராவது நழுவ விடுவரா? 35 ஆண்டு கால, ஆசிரியர் உத்தியோகத்திற்குப் பின், ஓய்வு பெற்று, காலை வேளையில், காய்கறி வாங்கச் சென்று கொண்டிருந்தார். இடிப்பது போல், காரை அருகில் நிறுத்தி, கீழிறங்கிய அந்த இளைஞன், பரபரப்பான தெருவென்றும் பாராமல், அவரது காலைத் தொட்டு வணங்கினான்.
முதலில், அவன் யாரென்று தெரிந்து கொள்ள சிரமமாகத்தான் இருந்தது. பள்ளியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரிடம் படித்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அதில் ஒருவனாக இருக்குமோ?
''சார்... யாருன்னு தெரியலையா? நான் தான் கீச்சு. உங்க ஸ்டூடண்டு,'' என்றான்.
அவனது குரல், கீச் கீச்சென்று தான் இருக்கும். அதனாலேயே, கிருஷ்ணா என்று கூப்பிடாமல், அவனை எல்லாரும், கீச்சு என்று கூப்பிடுவர்.
ஆனால், அதே கீச்சு, இப்போது ஆறடி உயரத்திற்கு, கரகரவென்ற கம்பீரமான குரலுடனும், மிடுக்கான உடையுடனும் இருப்பவனை, அவரால் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு பெரிய நிலையில் இருக்கிறான் என்பதை, அவன் இறங்கி வந்த விலையுயர்ந்த கார், அவருக்கு உணர்த்தியது.
தன்னையும் அறியாமல் மரியாதையுடன், ''கீச்சு, கிருஷ்ணாவா... எப்படி இருக்கீங்க?'' என்றார்.
''என்ன சார், என்னைப் போய் மரியாதையாக கூப்பிடறீங்க. நான் உங்களோட கீச்சு தான். திருப்பதிக்கு போறேன். நாளைக்கு உங்களையும் கூட்டிட்டு போகப் போறேன்,'' என்று சொல்லி, காரில் அழைத்து வந்து, வீட்டில் இறக்கி விட்டான்.
மனைவி போய் சேர்ந்ததிலிருந்து ஒற்றையாய் வாழ்பவருக்கு, பிக்கு பிடுங்கல் ஏதுமில்லை. தன் ஒரே மகளிடம் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியது தான்.
'உங்களை எப்படி தனியாக அனுப்புவது? கூட்டம் அதிகமாக இருக்கும். நாள் முழுக்க வரிசையில் நிற்கணும்; உங்களால முடியாது. அதுக்கு, தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்குப் போகலாமே...' என்றனர், மகளும் - மருமகனும்.
''கிருஷ்ணாவுக்கு அங்கிருக்கும் உயரதிகாரியைத் தெரியுமாம். எல்லா ஏற்பாடும் செய்திருக்கிறான். காத்திருக்காமல் தரிசனத்தை முடித்து, அன்றைக்கே திரும்பி விடலாம் என்று கூறினான்,'' என்று சொல்லி, ஒருவழியாக மகளை சம்மதிக்க வைத்தார்.
''உங்க ஸ்டூடண்ட் செலவழிக்கிறான்னு நீங்க பர்சைத் திறக்காம இருந்தா, நமக்குத்தானே அசிங்கம். போகிற வழி செலவுக்கு வெச்சுக்குங்க,'' என்று, கையில் பணத்தை திணித்தாள், மகள்.
மறுநாள் காலை, காரில் வந்து அழைத்து போனான், கிருஷ்ணன்.
பூந்தமல்லியில், ஹோட்டல், 'ஹைவே'யில் காலை உணவு. சாப்பிட்டவுடன் பில்லுக்குப் பணம் கொடுக்கலாம் என்று பர்சை எடுத்தார்.
அவரிடமிருந்து பில்லைப் பிடுங்கிய கிருஷ்ணன், ''வேணும்னா உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிறேன் சார்,'' என்று சிரித்தபடியே, பணத்தைச் செலுத்தினான்.
வாய் வார்த்தையாக அப்படிச் சொன்னான் என்று, அவர் நினைத்தது தவறாகப் போயிற்று.
திருத்தணி தாண்டியவுடன், பெட்ரோல் பங்க்கில் வண்டி நின்றது. பாத்ரூமிற்குப் போவதாக கூறி, இறங்கிப் போனான், கிருஷ்ணன்.
தயங்கியபடி அவரருகில் வந்தான், டிரைவர்.
''பெட்ரோல் போடணும். மிஷின்ல, கார்டு வேலை செய்யலை,'' என்று, அவரிடமிருந்து 3,000 ரூபாய் வாங்கிப் போனான்.
அங்கு மட்டுமா, கீழ் திருப்பதியிலும், ஏதோ காரணம் சொல்லி, கையிலிருந்த பாக்கி பணத்தையும் வாங்கிக் கொண்டு போனான், டிரைவர்.
கிருஷ்ணன், அதைக் கண்டு கொள்ளாமலிருந்தது, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
பர்ஸ் இடுக்கில் சொருகிய நைந்து போன, 100 ரூபாயை அவன் பார்த்திருந்தால், அதற்கும் வேட்டு வைத்திருப்பான். பெருமாள் உண்டியலில் போட அதுவாவது இருக்கிறதே என்று பெருமூச்சு விட்டார்.
மகளிடம் சொன்னால், நீங்க வாத்தியாரா இருந்தபோது, அவனுக்கு பண்ணினதுக்கு மொத்தமா பழி வாங்கிவிட்டதாக, சிரிக்கப் போகிறாள்.
எதுவுமே நடக்காதது போல், கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் தன்னுடைய சாதனைகளைப் பற்றி பேசியபடி வந்தான், கிருஷ்ணன்.
அவன் சொன்னதெல்லாம் அவர் காதில் எங்கே விழுந்தது?
'வாங்கிய பணத்தைச் சரியாக திருப்பிக் கொடுத்து விடுவானா? நாமாக கேட்டால் சரியாக இருக்குமா?' காலியான பர்ஸ் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்.
மலையை அடைந்ததும், தேவஸ்தான அதிகாரியே நேரில் வந்து அழைத்துப் போனார். 'கிருஷ்ணா பசையுள்ள ஆள் தான்...' என்ற நம்பிக்கை வந்தது.
இருப்பினும், 'இவ்வளவு பணக்காரன் எதற்காக என்னிடமிருந்து பணத்தை வாங்கி செலவு செய்ய வேண்டும். அடுத்தவர் செலவில் போக வேண்டுமென்று ஏதாவது வேண்டுதலா...' என்ற கேள்விகள், மூளையைப் பிராண்டின.
கிருஷ்ணா சொன்னபடி, அவர்களை மட்டும் தனியாக சன்னிதிக்கு அழைத்து போய், நிதானமாகத் தரிசனம் செய்ய வைத்தனர்.
சத்யன் சாருக்கு கண்கள் நிறைந்தன. ஏழுமலையானைத் தரிசிக்க நாம் திட்டமிட வேண்டாம்; அவனே தான் நடத்தித் தருகிறான்.
பக்தர்களின், 'ஏடுகுண்டலவாடா... வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா...' என்ற கோஷங்களில் மனது கரைந்து, வெளியில் வந்தார்.
காரில் ஏறும்போது, கைகளில் இரண்டு லட்டு, வடைகளை அவர் கைகளில் திணித்தான், கிருஷ்ணா.
''சார், தரிசனம் நல்லபடியா இருந்ததா?'' என்றான்.
அவர் கைகளைக் கூப்பியதும், அவன் பிடித்துக் கொண்டான்.
''ராமஜயம், கிருஷ்ண சகாயம்ன்னு சொல்வாங்க. இந்த கிருஷ்ணனோட சகாயத்தில், திவ்யமா ஒரு தரிசனம் கிடைத்தது,'' என்றார்.
''பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி, என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிடாதீங்க,'' என்றான், கிருஷ்ணா.
திரும்பி வரும் வழியில், இரவு சாப்பாட்டை முடித்தனர். இம்முறை, கிருஷ்ணாவே பணம் கொடுத்தான்.
நல்ல தரிசனம். திவ்யமான சாப்பாடு என்று மனது நிறைந்ததில், காரிலேயே துாங்கிப் போனார்.
கண்களைத் திறக்கும்போது, அவர் வீட்டு வாசலில் கார் நின்று கொண்டிருந்தது.
''இவ்வளவு சீக்கிரத்தில் வீட்டுக்கே வந்தாச்சா,'' என்று சொல்லி, இறங்கினார்.
''அவ்வளவு நேரம் துாங்கியிருக்கீங்க சார்,'' என்றான், கிருஷ்ணா.
மறக்காமல், லட்டு பிரசாத பையை, கையில் கொடுத்தான்.
''கீச்சு... என்னோட வேண்டுதலுக்கு, பெருமாளே மனமிறங்கி, உன்னை அனுப்பி வெச்சார்னு நினைக்கிறேன். நல்லா இருப்பா,'' என்றார்.
''அப்படில்லாம் ஒண்ணும் இல்லை. கூட என் மனைவி தான் வர்றதா இருந்தது. கடைசி நிமிடத்தில், ஒரு தடங்கல். அவளால வர முடியலை. அப்பத்தான் உங்களை பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் சார்,'' என்றபடி, ஒரு வெள்ளைக் கவரை நீட்டினான்.
''என்னப்பா இது?'' என்றவர், பிரித்து பார்த்தார். உள்ளே, 500 ரூபாய் நோட்டுகளும் சில, 100 ரூபாய்களும் இருந்தன.
''டிரைவர், உங்ககிட்ட அப்பப்ப வாங்கிய பணம் தான் சார். இது, உங்க கையில் இருந்தால், ஒவ்வொரு தடவையும் நான் கொடுக்கிறேன்னு மல்லுக்கட்டுவீங்க. ஒரு தடவையாவது கொடுக்கலேன்னா, உங்களுக்கு மனசு சங்கடமாக இருக்கும்.
''என் செலவில் கூட்டிக்கிட்டுப் போனோம்கிற ஆத்ம திருப்தி எனக்கு கிடைக்காது. அதனால தான், உங்ககிட்ட இருக்கிற பணத்தையெல்லாம் வாங்கி வெச்சுக்கிட்டேன். பிறகு பார்ப்போம். நான் வரேன் சார்,'' கைகளைக் கூப்பி விடைபெற்று, வண்டியில் ஏறினான்.
பேச வார்த்தைகளின்றி, சிலையாக நின்றிருந்தார், சத்யன்.
எச். என். ஹரிஹரன்