
பா - கே - ப
இந்த வாரம், குட்டிக் குட்டி தகவல்கள் மட்டும்...
மொத்தமே, 27 தீவுகள் கொண்ட லட்சத் தீவுக்கு, அந்த பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா?
கிழக்கிந்திய கம்பெனியின் கோனாரிலுள்ள சர்தார் அலிராஜா என்பவருக்கு, 18 ம் நுாற்றாண்டில், இந்த தீவை, லட்சம் ரூபாய்க்கு விற்றதால், இது, லட்சத் தீவு என்று பெயர் பெற்றது.
சல்வார் கமீஸ் என்ற வார்த்தை, நாம் அறிந்தது தான். கமீஸ் என்பது மேல் சட்டை. இது, வட மாநில சொல் என்று நினைக்கிறீர்களா?
அது, பிரெஞ்சு மொழி சொல். சிப்பாய்கள் அணியும் மேல் சட்டைக்கு, பிரெஞ்ச் மொழியில், 'கமீஸ்' என்று குறிப்பிடுவர்.
சீனாவில், வெள்ளை நிறமும்; துருக்கியில், நீல நிறமும்; எகிப்தில், மஞ்சள் நிறமும்; நம் நாட்டில், கறுப்பு நிறமும், துக்க சின்னங்களாக கடைப் பிடிக்கப்படுகின்றன.
இறந்தவர்களின் உடலை பாதுகாக்க, பிரமிடுகள் அமைக்கப்பட்டன என்று நினைப்போம். ஆனால், பாபிலோனியா, ஆஸ்திரியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் வழிபாட்டுத்தலமாகவும், வானியல் ஆய்வு மையமாக இருக்கும் பொருட்டும் பிரமிடுகள் கட்டப்பட்டன.
இன்றைய டாக்டர்கள், வெள்ளை நிற கோட் அணிந்து கொள்வதை போல, பண்டைக்கால டாக்டர்கள், மான் தோலை அணிந்து கொண்டனர்.
'வல்கரோ' எனப்படும், ஒட்டும் பட்டை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? விண்வெளி வீரர்கள், தங்களது உடைகளில் பயன்படுத்த எளிதான ஜிப் வைக்கும்படி கேட்டனர். அதற்கான தீர்வு தான், வல்கரோ கண்டு பிடிக்கப்பட்டது.
திருமணம் செய்து கொள்ள பயப்படுவதும், ஒருவித வியாதி என்கின்றனர். அதற்கு, 'கேமோபோபியா' என்று குறிப்பிடுகின்றனர்.
கி.மு., 161ல் ஆட்சி புரிந்த சிங்கள மன்னன், துட்ட கமனு புகழ் வாய்ந்தவன். அதே கால கட்டத்தில், வடக்கு பகுதியில், ஏலேல சிங்கன் என்ற வீரதீர பராக்ரமம் நிறைந்த மன்னன், நல்லாட்சி புரிந்து வந்தான்.
இவன் ஆட்சிக் காலத்தில், மக்கள் இன்புற்று வாழ்ந்தனர். மன்னனை, தெய்வமாக மதித்து போற்றினர், மக்கள். தமிழர்களின் தலைவனாக திகழ்ந்தான். இவன், 44 ஆண்டுகள் ஆண்ட, சோழ மரபினன். கடலில் கலங்கள் செலுத்துவதில் வல்லவன். கடற் பயணிகளையும், வியாபாரி களையும் பாதுகாத்து வந்தான். மக்களின் காவலனாக திகழ்ந்தான்.
கடலில் பயணம் செய்யும்போது, இடர் வராமலிருக்க, இவன் பெயரை சொன்னால், துணிவு பிறக்கும். தீமை அகலும் என்ற நம்பிக்கை, கடலோடிகளிடம் நிலவியது. அதனால், கலம் வலிக்கும் போது, பணியாளர்கள் அனைவரும், 'ஏலேலோ ஐலசா' என்று குரல் எழுப்பி, மகிழ்ச்சியுற்றனர். முதன் முதலில், புத்துணர்ச்சியை கொடுக்கும் சொல்லான, 'ஏலேலோ ஐலசா' என்று முழக்கமிட்டவர்கள், தமிழர்களே!
மயிரிழையில் உயிர் தப்பினர் என்கின்றனரே, அந்த மயிரிழை என்பதன் அளவு தெரியுமா? ஒரு அங்குலத்தில், ஐம்பதில் ஒரு பாகமே, ஒரு மயிரிழை என்பதாகும்.
வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் பழக்கம், 1463ல், தபால் கொடுப்பதற்கு வசதியாக, பாரீஸ் நகரத்தில் தான் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
முதன் முதலாக, காசோலை எழுதும் வழக்கம், செப்., 10, 1281ல் ஏற்படுத்தப்பட்டது. அந்த முதல் காசோலையை, இங்கிலாந்து மன்னன் முதலாம் எட்வர்ட் எழுதினார்.
போலந்து நாட்டில், ரீ மார்ட் என்பவர், புத்தகங்கள் சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார். இவரிடமுள்ள, பழமொழி புத்தகம் ஒன்றின் எழுத்துகள், 24 காரட் தங்கத்தால் ஆனது.
அமெரிக்க குடியரசு தலைவர் மாளிகை, ஏன் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது? 1812ல், பிரிட்டிஷ் ராணுவம், அதைத் தீக்கிரையாக்கிற்று. கருமையான வடுக்களை மறைக்க, வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. அதன்பின், நுாற்றாண்டுகளாக அவ்வண்ணமே மாற்றமின்றி தொடர்கிறது.
இந்தியாவில், 'பின்கோட்' எனப்படுவது, அமெரிக்காவில், 'ஜிப்கோட்' என்று குறிப்பிடப்படுகிறது.
நம் ஊரில், மாலை சூரியன் இளஞ்சிவப்பாக பார்த்திருப்போம். அண்டார்டிகாவில், பச்சையாக தெரியும்.
பிரசவத்துக்கு மயக்க மருந்தாகப் பயன்படும், ஈதர் திரவம், முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட ஆண்டு, 1848. விக்டோரியா மகாராணியின், ஏழாவது பிரசவத்திற்கு குளோரபார்ம் மருந்து, 1853ல் பயன்படுத்தப்பட்டது.
போலீஸ் கான்ஸ்டபிள் என்று கூறுவதுண்டு. கான்ஸ்டபிள் என்ற வார்த்தையின் பின்னணி தெரியுமா? அது, முதலாம் உலகப்போர் தொடர்பானது.
ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தில், குதிரைப்படைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த படையை தன் மேற்பார்வையில் வைத்திருக்கும் மூத்த அதிகாரிகளை, 'கவுன்ட் ஆப் தி ஸ்டேபல்ஸ்' என்பர்.
ஸ்டேபல் என்றால், குதிரை லாயம். பிரெஞ்சு மொழியில் இதை, கம்ஸ் ஸ்டேபிளி என்பர். இதுதான் காலப்போக்கில், கான்ஸ்டபிள் ஆகிவிட்டது. இது, உயர் அதிகாரம் பொருந்திய ஒரு பதவி. பின், எப்படி அதிகார நிலையில் கீழே உள்ள ஒருவரை, போலீஸ் கான்ஸ்டபிள் என்கிறோம்?
குதிரைப்படையில் பின்னர், பல பிரிவுகள் உண்டாயின. அவற்றில் உயர் பதவியை, ைஹ கான்ஸ்டபிள் என்று குறிப்பிட்டனர். கீழான பகுதியை, பாரிஸ் கான்ஸ்டபிள் என்று குறிப்பிட்டனர். பாரிஸ் என்றால், மிக மிகச் சிறிய நிலப்பகுதி.
பிரிட்டனில், பின்னர் கீழ் மட்ட அதிகாரியை, பி.சி., என்று குறிப்பிட்டனர். இப்போது கூட இந்தியாவில், பி.சி., என்று கூறுவதன் விரிவாக்கம், போலீஸ் கான்ஸ்டபிள் அல்ல, பாரிஸ் கான்ஸ்டபிள் என்பதாகும்.
நாக்கை பார்த்து, 'நாங்க, 32 பேர் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை இறுக்கி அழுத்தினால் நீ காலி...' என்று சொல்லிச்சாம், பல்.
தபடியே, 'நான் தனி ஆளு தான். ஆனா, நான் ஒரே வார்த்தை மாத்திப் பேசினா, நீங்க, 32 பேரும் காலி. எப்படி வசதி?' என்றதாம், நாக்கு.