
தஞ்சாவூர் மாவட்டம், பாலுார் என்ற ஊரிலிருந்த ஒரு பணக்காரர், காமராஜரை சந்தித்து, ஒரு பெருந்தொகையை, கட்சிப் பணிக்காக வைத்துக் கொள்ளுமாறு கொடுக்க வந்தார்.
'உன் உதவிக்கு நன்றி...' என கூறிய காமராஜர், 'நீ, என் கட்சிக்காக கொடுக்கிற பணத்தை நான் வாங்கிக் கொண்டால்,
அது சுயநலமாகி விடும். நீ, எனக்கு உதவி செய்ய நினைத்தால், உங்கள் ஊரில் உள்ள பிள்ளைகள் படிக்கிற மாதிரி, ஒரு பள்ளிக்கூடம் கட்டு. அது உங்க தலைமுறைக்கெல்லாம் தர்ம காரியமாக இருக்கும்...' என்று சொல்லி, பணம் வாங்காமல் திருப்பி அனுப்பினார்.
காமராஜர் பேச்சை கேட்டு, திரும்பி சென்ற அப்பணக்காரர், பாலுாரில் மட்டுமல்ல, அதை சுற்றியுள்ள நான்கு ஊர்களிலும் பள்ளிக்கூடம் கட்டினார்.
'ஒரு ஆண்டு பதவியில் இருந்தால் கூட, ஒன்பது வீடுகள் வாங்குகிற இக்காலத்தில், ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்தும், ஒரு வீடு கூட வாங்காத தலைவராக திகழ்ந்தவர், காமராஜர்...' என்று, புகழாரம் சூட்டினார், கண்ணதாசன்.
ஒருசமயம், அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாட்ஷாவிடம், தற்பெருமை அடித்துக் கொள்ளும் நண்பர் ஒருவர் வந்து, அவரை பற்றியே வெகு நேரம் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
கேட்டு வெறுத்து போனார், பெர்னாட்ஷா. அவரது பேச்சை துண்டிக்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் இருந்த பெர்னாட்ஷா, எப்படி நண்பரிடமிருந்து மீள்வது என சிந்தித்தார்.
பெர்னாட்ஷாவை பார்த்து, 'உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்தவர். உங்களையும், என்னையும் தவிர வேறு எவருமில்லை. என்ன சொல்கிறீர்...' என்றார், நண்பர்.
'உலகில் ஒரு விஷயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் உங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாத அந்த ஒரு விஷயம் எனக்கு தெரியும். ஆகவே, எல்லா விஷயங்களும், நம் இருவருக்கும் தெரியும்.
'எனக்கு தெரிந்த அந்த ஒரு விஷயத்தையும், நான் உங்களுக்கு சொல்லி விடுகிறேன். எல்லாமே உங்களுக்கு தெரிந்ததாகி விடும்...' எனக் கூறி, 'நீங்கள் ஒரு போர் அடிக்கும் பேர்வழி என்பதே எனக்கு தெரிந்த ஒரு விஷயம்...' என்றார், பெர்னாட்ஷா.
பெருமை பேசிக் கொண்டிருந்த நண்பர், உடனே இடத்தை காலி செய்தார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, 'ஹிந்தியை வெறுக்கலாம். ஆனால், அதை கற்பதால் கேடு ஒன்றும் இல்லை...' என்று சொல்லிக் கொண்டிருந்தார், ராஜாஜி.
ஒருசமயம், ஒரு திருமண வீட்டிற்கு வந்திருந்த ராஜாஜியை, அங்கு வந்திருந்த தமிழறிஞர்கள் பலர் சந்தித்தனர்.
அவர்களில் ஒருவர், 'நமக்கு தேவையற்ற ஹிந்தி பற்றி, தாங்கள் கொண்டிருக்கும் அபிப்ராயம் தவறானது...' என்றார்.
'இதோ பாருங்கள், வெளியில் நாம் சென்று வர, கால்களுக்கு காலணி தேவைப்படுகிறது. அதற்காக அவற்றை நாம் வீட்டுக்குள் போட்டு நடப்பதில்லை. அதுபோல தான், ஹிந்தியை வைத்துக் கொள்ள வேண்டும்.
'அதாவது, வெளி மாநிலங்களுக்கு மட்டும் ஹிந்தியை பயன்படுத்திக் கொள்வோம். நம் மாநில தேவைகளை தமிழிலேயே செய்து கொள்வோம். ஆகவே, காலணிகளை போல தேவைக்கேற்ப நாம் ஹிந்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்...' என்றார், ராஜாஜி.
கேள்வி கேட்டவரும், மற்ற அறிஞர்களும் அமைதியாகினர்.
- நடுத்தெரு நாராயணன்