
பா - கே
ஒருநாள் மாலை...
அலுவலகத்தில், டீ கடை பெஞ்ச் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
'பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறையும் விட்டாச்சு... வெளியூர் எங்காவது அழைத்துச் செல்லும்படி, பசங்க ஒரே ரகளை செய்றாங்க...' என்று அலுத்துக் கொண்டார், அன்வர் பாய்.
'எனக்கும் இதே பிரச்னை தான் பா... தேர்தல், 'ரிசல்ட்' எல்லா கலாட்டவும் முடியட்டும், அடுத்த ஆண்டு பார்த்துக்கலாம்ன்னு, என் பேர பசங்கக்கிட்ட சொல்லிட்டேன். 'நாங்க தொந்தரவு செய்யாம இருக்கணும்ன்னா, 40 ஆயிரம் ரூபாய், 'ஆண்ட்ராய்ட் மொபைல் போன்' வாங்கித் தரணும்'ன்னு நிபந்தனை போட்டுட்டாங்கப்பா...' என்றார், சோகமாக குப்பண்ணா.
'சம்மர் கேம்ப், அது இதுன்னு நிறைய இருக்கே... அதில் எதிலாவது சேர்த்து விடலாமே...' என்று, யோசனை சொன்னார், அந்தோணி சாமி.
'போப்பா... ஸ்கூல் பீசை விட, அதில் அதிகமா வசூலிக்கிறாங்க. ஜூன் மாசம் ஸ்கூல் திறக்கிற வரை, சமாளிப்பது சற்று சிரமம் தான் போலிருக்கு...' என்றார், குப்பண்ணா.
'ரொம்ப புலம்பாதீங்க ஓய்... குழந்தைங்க போக்குல, 'ப்ரீ'யா விடுங்க. கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டா, பேட், பால் வாங்கி கொடுங்க... நீச்சல் பழகப் போவதாக கூறினால், 'ஸ்விம்மிங் டிரஸ்' வாங்கிக் கொடுங்க. அப்புறம் பாருங்க, நண்பர்களுடன் சேர்ந்து, தங்களை, 'எங்கேஜ்' செய்துக்குவாங்க. நிறைய விஷயங்களையும் கத்துப்பாங்க...' என்றார், லென்ஸ் மாமா.
'லென்ஸ் மாமா சொல்றதுலயும் அர்த்தமிருக்கு. பிள்ளைகள் தடம் மாறாமல் இருக்க, அவ்வப்போது கண்காணித்து, பக்குவமா எடுத்துச் சொன்னால், புரிஞ்சுப்பாங்க. குழந்தைகளை உற்சாகப்படுத்தி, பாராட்டி, தன்னம்பிக்கை ஊட்டுறதை விட்டுட்டு, நம் எண்ணத்தை அவர்கள் மீது திணிக்கும்போது தான், பிரச்னை ஆரம்பமாகிறது.
'இப்படி தான் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு சோதனை நடத்தினாங்க...' என்று, கூற ஆரம்பித்தார், 'திண்ணை' நாராயணன்:
ஒரு பள்ளிக்கூட குழந்தைங்க பாதி பேருக்கு, ஒரு சோதனை நடத்தினாங்க. அதாவது, அவங்களுக்கு, சுலபமான கேள்விகள் கேட்டு, பதில் எழுத வைச்சாங்க.
தேர்வு எழுதுவதற்கு முன், அவர்களிடம், 'நீங்கள்லாம் ரொம்பப் புத்திசாலி, கெட்டிக்கார பிள்ளைங்க, உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு. இந்த தேர்வு, உங்களுக்கு ரொம்ப சுலபமா இருக்கும்...' என்று சொல்லி அனுப்பினாங்க.
இந்த புகழுரையை கேட்டு சென்ற பசங்க, ஆர்வமா தேர்வு எழுதி, நல்ல மார்க் வாங்கினாங்க.
அதே பள்ளியில், இன்னொரு பாதி பேருக்கு, இன்னொரு தேர்வு வைத்தனர்.
தேர்வு எழுதப் போற பிள்ளைங்கள பார்த்து, 'இந்த தேர்வு ரொம்பக் கஷ்டமா இருக்கும். இதை திறமையா எழுதற அளவுக்கு, உங்களுக்கு புத்திசாலித்தனம் போதாது...' என, எதிர்மறையா பேசி அனுப்பினாங்க. தேர்வு சுலபமா இருந்தும், இவங்க ஒழுங்கா எழுதாம, மார்க்கும் ரொம்ப குறைஞ்சு போச்சு.
இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்?
புகழ்ச்சி தான்.
புகழ்ச்சியா பேசி அனுப்பினவங்க, தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதி, அதிக மார்க் வாங்கினாங்க. குறைகளை சுட்டிக்காட்டி, இகழ்ச்சியா பேசி அனுப்பினவங்க, குறைச்சலான மார்க் வாங்கினாங்க.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
'புகழ்ச்சிங்கிறது ஒரு அற்புதமான மருந்து...' என்கின்றனர், நிபுணர்கள்.
இந்த புகழ்ச்சி மருந்தை, நாம் சுலபமா தயார் பண்ணலாம்; மத்தவங்களுக்கும் கொடுக்கலாம் என்கின்றனர்.
இதற்கு காசு, பணம் செலவில்லை; ஆனா, பலன் அதிகம்.
'பள்ளி குழந்தைகளிடம் இந்த மருந்தை கொடுங்க, அவங்க நல்லா படிப்பாங்க; நிறைய மார்க் வாங்குவாங்க. வியாபாரத்துல, உங்க கூட்டாளிக்கு இந்த மருந்தை கொடுங்க, நல்லா ஒத்துழைப்பாங்க; பணம் சம்பாதிக்க, உங்களுக்கு உறுதுணையா இருப்பாங்க.
'உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும், இந்த மருந்தைக் கொடுங்க, சந்தோஷப்படுவாங்க; பாசமா இருப்பாங்க. இந்த மருந்து உங்க கைவசம் இருந்தா, நீங்க எங்கே போனாலும், மகிழ்ச்சியை பரப்ப முடியும்.
'இந்த மருந்தை நீங்க இன்னொருத்தர்கிட்ட கொடுக்கும்போது, உங்களுக்கும் அது போதுமான அளவு கிடைக்குது. உங்களை சந்தோஷப்படுத்துது. புகழும், பணமும் சேர அது உதவுது...' என்கிறார், உளவியல் நிபுணரான, எம்.ஆர்.காப்மேயர்.
புகழ்ச்சிங்கிற மருந்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.
ஆல்பிரெட் ஆட்லர்ன்னு ஒரு மனவியல் நிபுணர். அவர், கவலை, பயம், கலக்கம்... இவற்றுக்கெல்லாம் இரையான தன் நோயாளிகளைப் பார்த்து, 'நீங்கள்லாம், யாரையாவது திருப்தி செய்யணும் அல்லது யாருக்காவது மன மகிழ்ச்சி உண்டாக்கணும்ன்னு தொடர்ந்து நினைச்சுக்கிட்டு இருந்தா போதும், 14 நாள்ல உங்க குறைபாடுகள்லாம் நீங்கி விடும்...' என்று சொல்வாராம்; அதுபோலவே நடக்குமாம்.
அடுத்தவங்கள திருப்திப்படுத்துவதற்கு என்ன வழி?
பொதுவா, அடுத்தவங்க, நம்மகிட்ட இருந்து, புகழ்ச்சியை, பாராட்டைத்தான் எதிர்பார்க்கிறாங்க.
'மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்...' என்கிறார், அமெரிக்க தத்துவ ஞானியும், மனோதத்துவ நிபுணருமான, வில்லியம் ஜேம்ஸ்.
இந்த தத்துவத்தை நாம புரிஞ்சிக்கிட்டா போதும், வாழ்க்கையில வெற்றியடையறது சுலபம்.
- இப்படி நாராயணன் கூறி முடிக்கவும், 'ஒரு நல்ல விஷயத்தை சொன்னப்பா. இப்பதான் நிம்மதியாச்சு...' என்றார், அன்வர் பாய்.
சூடாக மசாலா டீ குடித்து விட்டு, அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம்.
ப
'சக்சஸ்புல்' மனிதர்கள் செய்யும் முக்கியமான, 12 விஷயங்கள்!
* அவர்கள் நினைத்த இலக்கை அடையும் வரை, தொடர்ந்து முயற்சிப்பர்
* எதிலும் தீர்க்கமான முடிவுகளையும், உடனடி நடவடிக்கைகளையும் எடுப்பர்
* எதையும் உருவாக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்துவர். 'பிசி'யாக இருப்பது அவர்களது குறிக்கோள் அல்ல
* எந்த சூழ்நிலையிலும், அறிவுப்பூர்வமாக செயல்படுவர்
* எதையும் பொறி பறக்க, 'பெர்பெக்டாக' செய்வர்
* தங்களின் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியிலும் வேலை செய்வர்
* எதையும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிமையாகவே கையாளுவர்
* சின்ன சின்ன விஷயங்களிலும் தொடர் முன்னேற்றம் காட்ட, அதிகம் உழைப்பர்
* அவர்களின் மனதில் எப்போதுமே முன்னேற்றம் குறித்த சிந்தனைகளே சூழ்ந்திருக்கும்
* அவர்களிடம் எப்போதும், 'பாசிட்டிவ்' எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும். தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை எப்போதும் உண்டு
* சரியான நபர்களிடம் மட்டுமே நேரத்தை செலவிடுவர்
* தங்கள் வாழ்க்கையை எப்போதும் சம நிலையாகவே வைத்திருப்பர்!
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.