sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (22)

/

குற்றம் குற்றமே! (22)

குற்றம் குற்றமே! (22)

குற்றம் குற்றமே! (22)


PUBLISHED ON : ஏப் 28, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: கள்ளக்கடத்தல் தொழிலில், பங்குதாரராக இருக்கும் ராமகிருஷ்ணனின் மகன் மோகனுக்கும், தனஞ்ஜெயனின் அக்கா சாந்திக்கும் அவசர அவசரமாக திருமணம் செய்து, தனஞ்ஜெயனை தன் வலையில் சிக்க வைக்க முயன்ற, தாமோதருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையில், ராமகிருஷ்ணனை போலீஸ் பிடியில் இருந்து தப்ப வைக்க, 'ஹார்ட் அட்டாக்' வந்தது போல் நடிக்க வைத்து காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

மருத்துவமனையில் நடக்க இருந்த, மோகன் - சாந்தியின் திருமணம், திடீர் மின் தடையால் நடைபெற முடியாமல் போனது. இனி, சாந்திக்கு திருமணம் நடைபெறாது என்று சவால் விட்டான், விவேக்.


தனஞ்ஜெயனை இனி வேலைக்கு வர வேண்டாம் என்று கார்த்திகா கூறினாலும், 'முன் வைத்த காலை பின்வைக்கக் கூடாது. சாந்தியை நான் திருமணம் செய்து கொள்கிறேன். கார்த்திகாவின் அப்பா கிருஷ்ணராஜுக்கு உதவி செய்வோம்...' என்று உறுதியாக கூறினான், தனஞ்ஜெயனின் நண்பன், குமார்.

குமார், அப்படி பேசுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தனஞ்ஜெயனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கார்த்திகா கூட ஸ்தம்பித்திருந்தாள்.

அங்கே, எல்லாரிடமும் ஒரு நெடிய மவுனம்.

அதை உடைக்க துவங்கினான், குமார்.

''என்ன தனா, மவுனமாயிட்ட; நான் எதாவது தப்பா பேசிட்டேனா. ஒரு கோடீஸ்வரனை மாப்பிள்ளைன்னு சொல்லிட்ட நிலையில, சாதாரண ஒரு டிரைவரான எனக்கு எப்படி, உன் அக்காவை தர்றதுங்கிற தயக்கமா?

''எதுவா இருந்தாலும் சொல், ஏதோ என் மனசுல பட்டதை தான், நான் சொன்னேன். மத்தபடி, என் விருப்பம், உனக்கு ஒரு பேராசையா தெரிஞ்சா விட்று,'' என்றான்.

அதைக் கேட்டு மெலிதாய் சிரித்தான், தனா; பின், சாந்தியை பார்க்க, பதிலுக்கு அவளும் பார்த்தாள்.

''சாந்தி, இப்ப நீ தான் பதில் சொல்லணும். குமாரை மணக்க, உனக்கு இஷ்டமா?''

அவன் அப்படி கேட்கவும், குமாரிடமும் ஒரு பிரமிப்பு.

''சாந்தி... சரின்னு சொல்லுங்க. குமார், இனி டிரைவர் இல்லை. எங்களுக்கு இருக்கிற கம்பெனிகள் ஒண்ணுல ஜெனரல் மேனேஜர். சம்பளமும் லட்சங்களில். நான் இன்னைக்கே, 'ஆர்டரை இஷ்யூ' பண்றேன்,'' என்றாள், கார்த்திகா.

அதைக்கேட்டு மலைத்து போனாள், சாந்தி.

அடுத்து, அம்மா சுசீலாவையும், தங்கைகள் ஸ்ருதி, கீர்த்தியையும் தான் பார்த்தாள்.

''நீ, பார்க்கிறதோட அர்த்தம் புரியுது, சாந்தி. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. குமாரை நமக்கு பல வருஷங்களா தெரியும். தங்கமான பிள்ளை,'' என்றாள், அம்மா.

'ஆமாக்கா... குமார், நல்ல அண்ணன். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...' என்றனர், தங்கைகள் இருவரும்.

''அப்படின்னா எனக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை...'' என்று சொல்லி, வெட்கத்தோடு தலை குனிந்தாள், சாந்தி.

அடுத்த வினாடியே, குமாரை நெருங்கி, மார்போடு கட்டி அணைத்து, உணர்ச்சி வயப்பட்டான், தனா.

பின் மெல்ல விலகி, ''ஆமா, இங்க நாங்க, ஓ.கே.,ன்னா ஆச்சா... உன் அப்பா - அம்மாகிட்ட கேட்க வேண்டாமா?'' என்றும் கேட்டான்.

''கல்யாண விஷயத்துல, என் விருப்பம் தான் இறுதியானதுன்னு, என் அப்பா - அம்மா எப்பவோ சொல்லிட்டாங்கடா. அதோட, சாந்தி தான் பொண்ணுன்னா மறு பேச்சே பேச மாட்டாங்க. உன் அம்மாவுக்கு நான் எப்படியோ அப்படியே தான், என் அம்மாவுக்கு நீயும்...'' என்ற குமாரை நெருங்கி வாழ்த்து சொன்னபடி, கை குலுக்கினாள், கார்த்திகா.

''இந்த கல்யாணத்தை, அந்த விவேக் இல்லை, யாராலையும் இனி தடுக்க முடியாது. இந்த கல்யாணம் சீரும் சிறப்புமா நடக்க, என் வாழ்த்துகள். இனி, நீங்க எல்லாரும், சந்தோஷமா இருக்கணும்ன்னா எங்ககிட்ட வேலை செய்யக் கூடாது.

''நான் இப்ப ஜெனரல் மேனேஜர் ஆக்கிறேன்னு சொன்னது கூட, கல்யாணம் நடக்கணும்ங்கிற ஆசையால தான். வேற காரணங்கள் இல்லை. இதுவரை, நீங்க, என் அப்பாவுக்கும், எனக்கும் செய்த உதவிகளே போதும். அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

''நீங்களும் இப்பவே, 'ரிலீவ்' ஆயிடுங்க. எப்ப, எந்த உதவின்னாலும் கேளுங்க. செய்யத் தயாரா இருக்கேன்,'' என்று சொல்லி நெகிழ்ந்து, கண் கலங்கவும் செய்தாள், கார்த்திகா.

அது, சுசீலா, சாந்தி, ஸ்ருதி மற்றும் கீர்த்தி என்று, எல்லாரையும் பதிலுக்கு கண் கலங்க வைத்தது.

''அப்ப நான் வரேன்...'' என்று புறப்பட்டு அகலத் துவங்கிய கார்த்திகாவை, ''நில்லும்மா...'' என்ற தன் குரலால் தடுத்தாள், சுசீலா.

கார்த்திகாவும் நின்றாள்.

''கொஞ்சம் இப்படி வாம்மா,'' என, சுசீலா அழைக்கவும், நெருங்கி வந்தாள்.

அவளை உற்றுப் பார்த்து, ''நீ, உன் பெருந்தன்மையையும், இந்த குடும்பத்து மேல இருக்கிற அக்கறையையும் காட்டிட்ட. அதனால, எங்களை நன்றிக்கடன் படச் சொல்றியா?'' என்று இதமான குரலில் கேட்டாள், சுசீலா.

கார்த்திகாவின் விழிகள் பதிலுக்கு படபடத்தது.

''சொல்லும்மா... எங்களை, உன்னோட கடன்காரர்களா ஆக்க பார்க்கறியா?''

''அம்மா... என்ன சொல்றீங்க, சத்தியமா எனக்கு புரியல.''

''புரியலியா... ஆமா, உன்னால தான் பெருந்தன்மையா நடந்துக்க முடியுமா. எங்களால முடியாதா?''

ஒன்றும் புரியாமல் விழித்தாள், கார்த்திகா.

''என்ன திருதிருன்னு முழிக்கிற. நீ, உன் பெருந்தன்மையை காட்டிட்ட, நாங்க காட்ட வேண்டாம்?''

''அம்மா!''

''இனி, உன் குடும்ப பிரச்னை, எங்க குடும்ப பிரச்னை. என் மகன் தனா மட்டுமில்ல, மாப்பிள்ளையா வரப்போற இந்த குமார் மட்டுமில்ல... நாங்க அவ்வளவு பேருமே, உனக்கு இனி துணையா மட்டும் தான் இருப்போம். இதனால, எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, அதைப் பற்றி கவலையில்லை.

''தனா... தாராளமா இனி, உன் கடமையை செய்யுடா. இந்த அம்மா உனக்கு தடை சொல்ல மாட்டேன். நல்லதோ, கெட்டதோ எல்லாரும் சேர்ந்தே அனுபவிப்போம்,'' என்று உணர்வு பெருக்கோடு பேசின சுசீலாவை, வேகமாய் வந்து அணைத்து அழத் துவங்கினாள், கார்த்திகா.

எல்லாருமே உணர்ச்சிமயமாகிப் போயினர்.

ஒரு சில மணி நேரங்களுக்குள் தான் எவ்வளவு திருப்பங்கள்!

சிணுங்கிய திரையை விலக்கி பார்த்த, விவேக்குக்கு, விழிகள் இரண்டும் தெறித்து விடுவது போல அகண்டது. அந்த மொபைல் போனின், 'வாட்ஸ் ஆப்' திரையில், குமார், சாந்தி இருவரும், மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம்.

அதன் கீழே:

நிச்சயதார்த்தம் முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கும். ஆனால், அப்போது, நிச்சயம் நீ சுதந்திரமாக வெளியில் இருக்க மாட்டாய். கம்பி எண்ணிக் கொண்டிருப்பாய்...

என்ற அந்த குறிப்பு, விவேக்கை நிலைகுலைய வைத்தது.

மலேஷியா ராமகிருஷ்ணன் போலீசில் மாட்டிக் கொள்ளவுமே, தாமோதர் சென்னையை விட்டு, கொல்லிமலையில் உள்ள, தன் ரகசிய இருப்பிடத்துக்கு செல்லத் தயாராகி விட்டார்.

ஒட்டுத் தாடி, மீசை, 'மேக் - அப்' உடன், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவரின் மொபைலுக்கும் அந்த புகைப்படமும், குறிப்பும், சிணுங்கலோடு போய் சேர்ந்தது. தாமோதரும், அதைப் பார்த்து, முகம் மாறி போய், விவேக்கை அழைத்தார்.

''டாட்...''

''விவேக், இந்த தனஞ்ஜெயன் ரொம்ப ஆபத்தானவன். அவனால, நான் கூட தலைமறைவாகும்படி பண்ணிட்டான் பார்த்தியா?''

''எஸ் டாட், பேசாம கில்லர் டாணைக் கூப்பிட்டு, அவனை, 'ஷூட்' பண்ணச் சொல்லிடுவோம், டாட்.''

''நீ, திரும்ப திரும்ப சினிமா பாணியிலேயே யோசிக்கிற. நாம அப்படி எல்லாம் முடிவெடுப்போம்ன்னு அவனும் கணக்கு போட்டு வெச்சு, 'புல்லட் புரூப் ஜாக்கெட்' வாங்கி மாட்டிக்கிட்டிருப்பான். அவனை, நீ சீண்டறதை விடு. நான் சொல்றதை மட்டும் செய்.''

''சொல்லுங்க டாட்...''

''அவன் அடுத்து, கிருஷ்ணராஜோட அந்த நாளைய, 'ஸ்டெனோகிராபருக்கு' பொறந்த பையனைத் தானே தேடப் போறான்?''

''ஆமாம் டாட்... அதுக்காக பத்திரிகை ஆபீஸ், கார்ப்பரேஷன் ஆபீசர்ன்னு எல்லாரையும் போய் பார்த்துட்டான்.''

''நான் இப்ப சொல்றேன், நிச்சயம் அவன் அந்த பையனை கண்டுபிடிச்சுடுவான். இந்த விஷயத்துல, நீ அவனை, 'ஓவர் டேக்' பண்ணியே தீரணும்.''

''கட்டாயம் டாட்... அவனை கண்டுபிடிச்சு காலி பண்ணணுமா?''

''முட்டாள்... அவனை, நம், 'கஸ்டடி'க்கு கொண்டு வந்துடு. பதிலுக்கு, நம் ஆட்களில் ஒருத்தன் அந்த இடத்துக்கு போகணும்.''

''என்ன டாட் சொல்றீங்க, எனக்கு புரியல.''

''மர மண்ட, நம் ஆள் தான் கிருஷ்ணராஜ் பையனா போய் நிற்கணும். இன்னுமா புரியல?''

''ஓ... நீங்க அப்படி வர்றீங்களா. புரியுது புரியுது...''

''இதுக்கு நான் எவ்வளவு பேச வேண்டியிருக்கு பார். சமயத்துல, நீ, என் மகன் தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. நான், 'கிரிமினல்'னா, நீ, 'சூப்பர் கிரிமினலா' இருக்க வேண்டாமா?''

''கோவிச்சுக்காதீங்க, டாட். நம் ஆள், கிருஷ்ணராஜ்கிட்ட போய் எல்லா சொத்தும் அந்த வாரிசுக்கு வந்துட்டா, அது உண்மையில, நமக்கு வந்த மாதிரி... கரெக்டா?''

''எக்ஸாக்ட்லி... இதுவரை ஏற்பட்ட எல்லா தோல்விக்கும் இந்த விஷயத்துல ஜெயிச்சு, தனஞ்ஜெயன் முகத்துல கரியைப் பூசணும்.''

''ஷ்யூர், டாட்.''

''வார்த்தையில சொல்லாத, செயல்ல காட்டு. தனஞ்ஜெயனுக்கு முந்தி, நீ, அந்த பையனை கண்டுபிடிக்கிற. அப்ப தான் நாம நினைச்சது நடக்கும்.''

''நடத்திக் காட்டறேன், டாட்.''

''நான் கொல்லிமலையில உள்ள அன்னாசி காட்டுல, நம்ப இடத்துல தான் இருப்பேன். தினமும், கொல்லிமலை டவுன்ஷிப்புக்கு வருவேன். அங்க போய், புது,'சிம்' வாங்கிப் போட்டு, உன்கிட்டதினமும் பேசுவேன்.''

''நீங்க, தலைமறைவாகித் தான் தீரணுமா, டாட்... அந்த மலேஷியா ராமகிருஷ்ணன் காட்டிக் கொடுத்துடுவார்ன்னு நீங்க நம்பறீங்களா... இல்லை, பயப்படறீங்களா?''

''போலீஸ் இப்ப புதுப்புது உத்திகளை கையாள்றாங்க. அதையெல்லாம் சமாளிக்க அசாத்திய மன உறுதி வேணும். மலேஷியா ராமகிருஷ்ணன்கிட்ட அந்த உறுதி இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

''அதுக்காக நாம, 'அசால்ட்டா' இருந்துட முடியுமா? அதனால தான், நான் இப்பவே ஒதுங்கிப் போறேன். என் இடத்துல, இனி நீ தான் எல்லாமே. உன்னோட சவாலான, 'அசைன்மென்ட்' தான், கிருஷ்ணராஜோட மகன் கேஸ்.''

''அதை முடிச்சு காட்டறேன், டாட்.''

அந்த உரையாடல் அத்தோடு நின்று போனது. விவேக்கும் தீவிரமாக யோசிக்க துவங்கினான்.

படுக்கையிலிருந்த, கிருஷ்ணராஜ் முன், தனஞ்ஜெயனும், குமாரும் பணிவாக நின்றிருந்தனர்.

''அப்பா, குமாருக்கு கல்யாணம் நடக்கப் போகுது. உங்க ஆசீர்வாதத்துக்காக தான் இப்ப வந்துருக்கார்,'' என்றாள், கார்த்திகா.

''வாழ்த்துக்கள் குமார். நடந்த எல்லாவற்றையும், கார்த்திகா சொன்னாள். நீ, ஒரு நல்ல நண்பனா நடந்துகிட்டிருக்க. அந்த விவேக் முகத்துலயும் கரியை பூசிட்டே,'' என்று நெகிழ்ந்தார், கிருஷ்ணராஜ்.

''அப்பா, நமக்கு இப்ப பலம் கூடியிருக்கு. தனஞ்ஜெயன் குடும்பமே, இப்ப நம்ப பக்கம் தான். சீக்கிரமா, அண்ணனையும் கண்டுபிடிச்சுடுவோம்,'' என்ற கார்த்திகாவை, கலங்கிய விழிகளுடன் பார்த்தார்.

''மலேஷியா ராமகிருஷ்ணன் போலீஸ்கிட்ட எங்களை காட்டிக் கொடுத்துட்டா அவ்வளவு தான். என் வரையில போலீஸ் என்னை தேடி வந்து, 'அரஸ்ட்' பண்ணக் கூடாது. நான் போய், 'சரண்டர்' ஆகணும். அதுதான் ௦ளஎனக்கு அழகு.

''மலேஷியா ராமகிருஷ்ணன், போலீஸ், 'டார்ச்சரை' எவ்வளவு நாளைக்கு தாங்குவான்னும் சொல்ல முடியாது. நிச்சயம் தாமோதர் தலைமறைவாகி இருப்பான். அப்படி என்னால ஆக முடியாது. அசையக் கூட முடியாம நான் படுத்திருக்கிறதை தான் பார்க்கிறீங்களே?

''அதனால, என் பையனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீங்களோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடியுங்க. அவன் பேர்லயும், கார்த்திகா பேர்லயும் எல்லா சொத்தையும் எழுதி வெச்சுட்டு, நான் சரணடைய விரும்பறேன்,'' என்று கசிந்தார், கிருஷ்ணராஜ்.

''நிச்சயமா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம், சார். எப்ப நீங்க உங்க தவறுகளை திருத்திக்க துவங்கிட்டீங்களோ அப்பவே நீங்க ஒரு நல்ல மனுஷனாயிட்டீங்க. அப்படி இருக்க, இந்த உடல் நிலையில, நீங்க, 'சரண்டர்' ஆகத்தான் வேணுமா சார்?'' என்றான், தனா.

தனா அப்படி கேட்பான் என்று எதிர்பார்த்தது போல, பதில் சொல்லத் துவங்கினார், கிருஷ்ணராஜ்.

''தனா... தப்புன்னா அது கடவுளே செய்தாலும் தப்பு தான்னு சொன்னது, நம் பூமி. சிவன்னு தெரிஞ்சும், குற்றம் குற்றமேன்னு சொன்ன, நக்கீரரை கொஞ்சம் நினைச்சு பார்.''

''புரியுது சார்... உங்களை நினைச்சு, எனக்கு பெருமையா இருக்கு.''

''ஆனா, எனக்கு கூச்சமா இருக்கு. என் உடம்பெல்லாம் அழுகவும் தானே எனக்கு புத்தி வந்தது. மேல ஒருத்தன் இருக்கான், அவன் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கான்கிறது எவ்வளவு பெரிய உண்மை...'' என்று, கிருஷ்ணராஜ் கேட்க, பெண்டுலம் கடிகாரம் சத்தத்தோடு அதை ஆமோதித்தது.



— தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us