
இது நல்ல, 'ஐடியா!'
துணிக்கடை ஷோரும் ஒன்றில், சட்டை, பேன்ட் எடுக்க சென்றேன்.
அப்போது, 'சார்... சட்டை, பேன்ட், 'டிரையல்' பார்க்க செல்லும்போது, மொபைல்போனை தந்து, 'டோக்கன்' வாங்கி செல்லுங்கள்....' என்றார், கடை ஊழியர்.
'இது என்ன, புது விதமாக இருக்கிறதே...' என, அவரிடம் விபரம் கேட்டேன்.
'ஒருமுறை, கல்லுாரி மாணவர்கள், சட்டை, பேன்ட் அணிந்து பார்க்க, 'டிரையல் ரூம்' சென்றனர். அப்போது, ஏதேச்சையாக, அந்த பக்கம் சென்றேன். போட்டோ எடுக்கும் சத்தம் கேட்டது.
'திரும்பி வந்தவர்கள், 'எங்களுக்கு எதுவும் செட் ஆகவில்லை...' என்று கூறி, எடுத்துச் சென்ற, பேன்ட் - சட்டையை டேபிளில் வைத்தனர். 'கலர் பிடிக்கவில்லையா... இல்லை, அளவு சிறிதாக இருக்கிறதா...' என கேட்டு, வேறு ஆடைகள் காட்டுவதாக கூறினேன்.
'நான் சொல்வதை கேட்காமல், வெளியேறினர். போட்டோ எடுத்த விஷயத்தை, கடை நிர்வாகியிடம் கூறினேன். இவனுக, துணி எடுக்க வரவில்லை. சமுகத்தில் தன்னை பெரிய ஆள் என காட்டிக் கொள்ள, வித விதமாக அணிந்து, 'ஸ்டேட்டஸ், பேஸ் புக், இன்ஸ்டாகிராமில்' பதிவிட, இப்படி ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்துள்ளனர்.
'இனிமேல், 'டிரையல்' பார்க்க செல்பவர்களிடம், மொபைல் போனை வாங்கி, 'டோக்கன்' கொடுக்கவும். திருப்பி வந்ததும், 'டோக்கன்' பெற்று, மொபைல் போனை திருப்பி தருமாறு கூறினார், நிர்வாகி.
'அதையே நடைமுறைப் படுத்தினோம். நிஜமாக துணி எடுப்பவர்கள் போனை தந்து விட்டு, துணி எடுத்த பின், போனை வாங்கிச் செல்கின்றனர்...' என்றார், அந்த ஊழியர்.
இந்த முயற்சியை, மற்ற கடைக்காரர்களும் பின்பற்றலாமே!
- பி.என்.பத்மநாபன், கோவை.
ஏமாற்றாதே, ஏமாறாதே!
சமீபத்தில், அலுவலகத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.
பஸ் நிலையம் ஒன்றில், பழக்கடை இருந்தது. நான் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த நேரம், அந்த பழக்கடைகாரர் செய்த செயல், அதிர்ச்சியை அளித்தது.
தற்போது, கோடை காலம் என்பதால், பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், அன்னக்கூடை போன்ற அலுமனிய பாத்திரத்தில், பால் போன்ற திரவம் இருந்தது. அதில், டிரேயில் பச்சை நிறத்தில் இருந்த திராட்சையை அமிழ்த்தி எடுத்தார். சிறிது நேரம் தண்ணீர் வடிய டிரேயை வைக்க, திராட்சையின் நிறம், இளமஞ்சளாக மாறியது.
இளமஞ்சள் திராட்சை இனிப்பாக இருக்கும் என, வாங்கும் நிலையில், இந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனேன்.
வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களை பழுக்க வைக்க ரசாயன பொடிகளை பயன்படுத்தி வரும் நிலையில், திராட்சையிலும் இப்படி செய்வது வேதனையை அளித்தது.
எனவே, பழங்களை வாங்குவோர், அதை நன்றாக தண்ணீரில் ஊறவைத்து, கழுவி சாப்பிடுவது நல்லது.
--- ஆர்.கோகிலா, சென்னை.
இலவச கைத்தொழில் பயிற்சி!
ஞாயிறன்று, சித்தி வீட்டுக்கு சென்றிருந்தேன். பள்ளிக்கு சென்றிருந்தாள், சித்தியின் மகள்.
பள்ளியிலிருந்த மகளை அழைத்து வர, சித்தியுடன், நானும் கிளம்பினேன்.
அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், மாணவியருக்கு, தையல் தைப்பது, கூடை பின்னுதல், கோலப்பொடி, சாம்பிராணி, பினாயில் மற்றும் மெழுகுவர்த்தி செய்வது என, நிறைய கைத்தொழிலில் பயிற்சி தந்து கொண்டிருந்தார்.
அனைத்து மாணவர்களும் வரவேண்டும் என கட்டாயம் இல்லை; விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும், இலவசமாக பயிற்சி தருகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டேன்.
'எதிர்காலம் எல்லாருக்கும் எப்படி அமையும் என்று தெரியாது. அதனால், படிப்பு தாண்டி இது மாதிரியான விஷயங்கள், மாணவர்களுக்கு தெரிய வேண்டும். அதுவும் குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள் பெரிதும் உதவும். ஏதோ என்னால் முடிந்தது...' என்று கூறினார்.
அவர் கூறியதை கேட்டு, மனதார பாராட்டி, வந்தோம்.
ஆசிரியர்களே... உங்கள் மாணவர்களுக்கும், இதுபோன்ற பயிற்சிகளை கற்றுத் தரலாமே!
ப.லாவண்யா, விருதுநகர்.