
மே 12 - ஆதிசங்கரர் ஜெயந்தி
'வேதம் படித்த குருவாக இருந்தாலும் சரி, பிணத்தை எரிக்கும் புலையராக இருந்தாலும் சரி, வாழ்வின் உண்மையை அறிந்திருந்தால், அவர்கள் இருவரும் என் குருவே...' என்று, 2800 ஆண்டுகளுக்கு முன்பாகவே, பெரும் புரட்சிக் கருத்தை அறிவித்தவர், மகான் ஆதிசங்கரர்.
இன்று வந்த சிலர், நாங்கள் தான் சமுதாய சீர்திருத்தத்தை கொண்டு வந்தோம் என, பெருமையடித்துக் கொண்டால், அது அறிவீனத்தின் உச்ச நிலை. புரட்சித்துறவி ஆதிசங்கரர், பல ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர்.
புரட்சித்துறவி ஆதிசங்கரர், கேரளாவிலுள்ள காலடி எனும் சிற்றுாரில் சிவகுரு - -ஆர்யாம்பா தம்பதியின் திருமகனாய் அவதரித்தார். இவர் பிறந்தது, பொது ஆண்டுக்கு முன், 788ல். அதாவது, அவருக்கு இவ்வாண்டு, 2812வது அவதார தினம்.
சிவனின் அம்சமாக பிறந்த இவர், வாழ்ந்தது வெறும், 32 ஆண்டுகள் தான். ஆன்மிகத்துக்கென்றே தன்னை அர்ப்பணிக்க நினைத்தார். இந்த மனநிலை அவருக்கு எட்டு வயதிலேயே உருவாகி விட்டது.
இவரது தாய்க்கோ, மகனுக்கு இல்லற வாழ்வை அளிக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், தன் தாயை சமாதானப்படுத்தி, எட்டு வயதிலேயே துறவறம் மேற்கொண்டார். மகனின் உயிருக்கே ஆபத்து வந்து விடும் என்ற இக்கட்டான நிலையில், துறவறத்துக்கு சம்மதித்தார், தாய்.
அதன்பின் அவர் செய்த புரட்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஜாதி வேறுபாடுகள் எக்காலத்திலும் இருக்கிறது. எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, புத்திசாலிகள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில், உறுதியாக இருந்தார், சங்கரர்.
அக்காலத்தில், துறவிகள் பவனி வரும்போது, பிற ஜாதியினர் எதிரே வர அனுமதிக்கப் படுவதில்லை. சங்கரரும், இவ்வாறு பவனி வரும்போது, தற்செயலாக, ஒரு பிணம் எரிக்கும் புலையர் வந்து கொண்டிருந்தார். அவரை ஒதுங்கி நிற்கும்படி, சங்கரருடன் வந்தவர்கள் கூறினர்.
'சுவாமி, என் உடல் ஒதுங்க வேண்டுமா அல்லது ஆத்மா ஒதுங்க வேண்டுமா?' என, ஒரு போடு போட்டார், அந்த மனிதர்.
அசந்து விட்டார், சங்கரர்.
அந்த புலையரின் காலில் விழுந்து, 'நீரே என் குரு...' என்றார்.
ஆம்... உடலை ஒதுங்க வைக்கலாம். அது அழிந்தால் எரிக்கலாம். ஆனால், எந்த ஜாதியாக இருந்தாலும், ஆத்மா ஒன்று தானே! அதை எப்படி காண முடியும்; அதை எப்படி ஒதுக்க முடியும்?
அத்வைதம் என்ற தத்துவத்தைக் கடைபிடித்தவர், ஆதிசங்கரர். ஜீவாத்மாவும், பரமாத்வும் வேறல்ல. இரண்டும் ஒன்றே என்பது, அவரது கருத்து.
எளிமையாகச் சொன்னால், உயிர்களும், தெய்வமும் வேறல்ல. மனிதனும் தெய்வமாகலாம் என்பதே, அவரது கொள்கை. அதை நிரூபிப்பது போல் அமைந்தது இந்த சம்பவம்.
'எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களும் மதிக்கத்தக்கவர்களே...' என்ற வித்தியாசமான கருத்தை, அன்றே தெரிவித்தவர், ஆதிசங்கரர்.
அவரது அவதார நாளில், ஜாதி பேதமற்ற சமுதாயம் படைக்க உறுதியெடுப்போம்.
தி. செல்லப்பா