
மே 22 - நரசிம்ம ஜெயந்தி
திருமால், தசாவதாரம் எடுத்த போது, ராமன், கிருஷ்ணன், பரசுராமன் ஆகிய அவதாரங்களெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டது. ஆனால், மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த நரசிம்ம அவதாரம், ஒரு துாணில் வெளிப்பட்டது. திருமாலே, மிகப்பெரிய மனக்கலக்கத்துடன் எடுத்த அவதாரம் இது.
ஒரே வீட்டில் இரு துருவங்கள். மகன் பிரகலாதன், திருமாலின் தீவிர பக்தன். அவனது தந்தை இரண்யனோ, தன்னையே மக்கள் வணங்க வேண்டுமென நினைத்தவன்.
ஊரே இரண்யனுக்கு பயந்து, அவனது உத்தரவுக்கு கட்டுப்பட்டது. 'ஓம் இரண்யாய நமஹ' என்ற கோஷம், அவனது தேசமெங்கும் ஒலித்தது. ஆனால், பிரகலாதனின் குரல், ஒட்டுமொத்த நாட்டின் கோஷத்தை மிஞ்சி, 'ஓம் நமோ நாராயணாய' என்று, முழங்கியது.
மகனே தன்னை மதிக்கவில்லையே என்று கோபமடைந்த இரண்யன், அவனை கொல்ல உத்தரவிட்டான். பொறுத்துப் பார்த்தார், திருமால். தேவர்களெல்லாம், பிரகலாதனைக் காப்பாற்றும்படி வேண்டினர். சாந்த மூர்த்தியான திருமாலுக்கே கடும் கோபம்.
இந்த நேரத்தில் தந்தையும், மகனும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
எந்த நேரமும் அவன் தன்னை அழைக்கலாம் என திருமால், முகத்தை மட்டும் சிங்கமாக மாற்றிக் கொண்டு உலகிலுள்ள எல்லாப் பொருட்களிலும் நிறைந்து நின்றார். தன் பக்தன் தன்னை எங்கிருப்பான் என சொல்வானோ என, காத்து நின்றார்.
'இதோ இந்த துாணில் என் ஹரி இருக்கிறார்...' என்று, பிரகலாதன் சொல்ல, அந்த துாணிலிருந்து மனித உடல், சிங்க முகத்துடன் தோன்றினார். மனிதனை, நரன் என்போம். சிங்கத்தை, சிம்மம் என்போம். இரண்டும் இணைந்து நரசிம்மர் ஆனது.
நரசிம்மர் எந்த துாணிலிருந்து வெளிப்பட்டாரோ, அந்தத் துாணை, 'உக்கு ஸ்தம்பம்' என்பர். ஆந்திராவில், அஹோபிலம் எனும் இடத்தில் இந்த துாண் இருக்கிறது. இந்த துாண் ஒரு பிளவுபட்ட மலையாக காட்சியளிக்கிறது. இதை, உக்கு ஸ்தம்பம் என்கின்றனர்.
தெலுங்கில் உக்கு என்றால், எஃகு. ஸ்தம்பம் என்றால் துாண். எஃகு போன்ற பலம் வாய்ந்த துாண் என்று பொருள். இந்த துாணை இரண்யன் உடைத்த போது, நடந்த விசேஷம் தெரியுமா?
துாண் உடைந்த போது, 172 ரக ஒலி அலைகளை எழுப்பியது. சங்கீதத்தில் உள்ள ராகங்களைக் கூட, இந்த ஒலி அலைகளைக் கொண்டு தான் உருவாக்கினாராம்.
இறைவன் ஓரிடத்தில் வெளிப்பட நினைத்தால் கூட, சங்கீதம் முழங்குகிறது. அதனால் தான், கோவில்களில் விழா நடக்கும் போது, மேள தாள, நாதஸ்வரத்துடன் இறைவன் பவனி வருகிறான்.
உக்கு ஸ்தம்பத்தை, உக்ர ஸ்தம்பம் என்றும் சொல்வர். உக்ரம் என்றால் கோபம். திருமால் கோபத்துடன் வெளிப்பட்ட இந்த துாண் பிளவுபட்ட நிலையில், அஹோபிலத்தில் காட்சியளிக்கிறது.
இங்குள்ள ஜ்வாலா நரசிம்மர் கோவிலிலிருந்து, 80 டிகிரி செங்குத்தான பாதையில், 4 கி.மீ., செல்ல வேண்டும். மலைப்பாதை பயணம் கடுமையானது. மன பலம் வாய்ந்தவர்கள் மட்டுமே துாண் அருகே செல்ல முடியும்.
இந்த உக்கு ஸ்தம்பத்தை தரிசிப்பது வாழ்வின் மிகப்பெரும் பேறு. அந்தப் பேறை நீங்களும் பெற முயற்சியுங்களேன்!
தி. செல்லப்பா