
க. லதிகா, சேரன்மகாதேவி: கவிஞர் கண்ணதாசனை சந்தித்ததுண்டா?
உண்டே... ஒருமுறை, 'நவசக்தி' நாளிதழின் அச்சு இயந்திரத்தை பார்க்க சென்றிருந்தேன். அப்போது, அந்த நாளிதழின் ஆசிரியராக இருந்தார், கண்ணதாசன்.
இயந்திரத்தை பார்த்த பின், 'எடிடோரியல்' பிரிவுக்கு வந்தேன். அங்கே உட்கார்ந்து, 555 பிராண்ட் வெண்குழல் வத்தியை ஊதிக் கொண்டிருந்தார், கண்ணதாசன். சிறிது நேரம் அவர் அருகே அமர்ந்து, பேசி விட்டு வந்தேன்!
* க. கதிரேசன், சென்னை: மகள் திருமணம் நிச்சயம் செய்யும்போது, கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
நிச்சயதார்த்தத்தின் போது அல்ல... பெண் பார்க்க வரும் முன்பே, பிள்ளைக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா, வெண்குழல் வத்தி அடிப்பாரா, 'கேர்ள் பிரண்ட்ஸ்' உண்டா என்பதை அறிந்து கொண்டே, நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும்!
* டி. யாஷினி, திருப்பூர்: ஆளும் கட்சிக்கு, 'ஜால்ரா' போட்டால், அரசு விளம்பரங்கள் மற்றும் நுாலக அனுமதி என, பல ஆதாயங்கள் கிடைக்குமே... அதை தவிர்ப்பது ஏன்?
'தினமலர்' நாளிதழ், 'ஜால்ரா' தட்டுவது, அதன் முதலாளிகளான வாசகர்களுக்கு தான்; ஆளும் கட்சிக்கு அல்ல. அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் எதையும், நம் நாளிதழ் எதிர்பார்க்கவில்லை!
முருகு. செல்வகுமார், சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு, வடக்கே பிரசாரம் செய்ய, தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லாதது ஏன்?
ஸ்டாலினுக்கு தான் ஹிந்தி தெரியாதே. அவர், தமிழில் பேசினால், வட மாநிலத்தவர்களுக்கு எப்படி புரியும்... இவர் தமிழை, ஹிந்தியில் மொழி பெயர்க்க, யாரும் முன் வரவில்லையோ என்னவோ!
அஜித், சென்னை: 'சரக்கு' போட்டால், ஆங்கிலத்தில் பேசும் பழக்கம், லென்ஸ் மாமாவுக்கு உண்டா?
'சரக்கு' போடாமலேயே, சாதாரணமாகவே ஆங்கிலத்தில் தான் பேசுவார். 'சரக்கு' போட்டால், பிரிட்டிஷ் இங்கிலீஷில் பேசுவார். எனக்கு புரிவது, சற்று சிரமமானது தான்!
பி. கணேசன், சென்னை: என் நண்பன், தன் சம்பளம் முழுவதையுமே செலவு செய்கிறானே...
நண்பருக்கு, 'அட்வைஸ்' செய்யுங்கள்... அதாவது, ஒருவரின் சாதாரண செலவுகள், அவரின் வருவாயில் பாதி அளவில் தான் இருக்க வேண்டும் என்று!