
நண்பனுக்கு கொடுத்த ஒரு பிடி அவல், ஒரு ஊரையே செல்வத்தில் திளைக்க வைத்தது. ஆம்... ஏழை கிராமமாக இருந்த சுதாமாபுரி, நவரத்தினங்களின் ஒளியால் ஜொலித்தது. ஒரு நல்லவரால், ஊர் மக்கள் அனைவரும் நன்மை பெற்றனர்.
இந்த சாதனையைச் செய்தவர் தான், சுதாமா. பகவான் கிருஷ்ணரின் ஆத்ம நண்பர். தன் நண்பனுக்கும் கோவில் எழ வேண்டுமென பகவான் திருவுள்ளம் கொண்டார். கிருஷ்ணாவதாரம் முடிந்து, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பின், 19ம் நுாற்றாண்டில் தான் அந்த கோவில் எழுந்தது.
குஜராத் மாநிலத்தில் இருந்த சிறு கிராமம், சுதாமாபுரி. இன்று, போர்ப்பந்தர் என்ற பிரசித்தி பெற்ற நகராக இருக்கிறது. மகாத்மாக்கள் இந்த ஊரைத் தேடி வந்து பிறப்பர் போலும். சுதாமாவையும் மகாத்மா என்று தான் சொல்வர்.
இவ்வூரில் வசித்த, மதுகா என்பவரின் மகன் தான், சுதாமா. அக்காலத்தில் கிழிந்த உடை உடுத்தியவர்களை, குசேலன் என்று அழைப்பது வழக்கம். குசேலன் என்ற சொல்லுக்கு, கிழிந்த ஆடை அணிந்தவன் என்று தான் பொருள்.
இந்த ஏழைக்கும் திருமணம் நடந்தது. மனைவி சுசீலா. ஏராளமான பிள்ளைச் செல்வங்கள். குடும்பத்தை சமாளிக்க பணத்தேவை இருந்ததால், மனைவியின் வற்புறுத்தலால், தன் நண்பன் கிருஷ்ணனைப் பார்க்கச் சென்றார், சுதாமா.
கிருஷ்ணரும், சுதாமாவும் மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனியில் இருந்த குருகுலத்தில், சாந்தீபனி முனிவர் என்பவரிடம் பாடம் படித்தவர்கள். 64 நாள் தான் பழக்கம். ஆனால், இருவரும் உயிருக்குயிரான நண்பர்களாகி விட்டனர்.
அதன் பின் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிருஷ்ணரோ, சுதாமாபுரியில் இருந்து, 104 கி.மீ., துாரத்திலுள்ள துவாரகையில் குடியிருந்தார். அவ்வூரின் மன்னரும் அவரே.
நடந்தே போய், நண்பனை சந்தித்தார், சுதாமா. அவரை கட்டியணைத்து வரவேற்றார், கிருஷ்ணன்.
ஒரு பரம ஏழையை தங்கள் மன்னர், இந்தளவு உபசரிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு பெரிய மகாத்மாவாக இருக்க வேண்டும் என நினைத்தனர், மக்கள். நண்பனுக்கு அவலை கொடுத்தார், சுதாமா. அந்த நிமிடமே, அவரது ஊரே செல்வத்தில் திளைத்தது. ஆனால், ஊர் திரும்பியதும், சுதாமா வேண்டியது என்ன தெரியுமா?
'கிருஷ்ணா, எனக்கு, அழியும் இந்த செல்வம் வேண்டாம். அதை என் குடும்பமும், ஊரும் அனுபவிக்கட்டும். நீ மட்டுமே எனக்கு வேண்டும். எனக்கு உன் பரமபதத்தில் இடம் கொடு...' என்றார். விரைவில் பரமபதமும் அடைந்தார்.
இப்படிப்பட்ட நண்பர்களுக்காக, 1902ல், ஜெத்வாக்கள் ஆட்சியின் போது, போர்ப்பந்தரில் சுதாமா மந்திர் கட்டப்பட்டது. இங்கே, கண்ணனும், சுதாமரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர்.
காலை, 5:00 மணி முதல் இரவு, 9:30 வரை, கோவில் திறந்திருக்கும். ஆமதாபாத்திலிருந்து, 395 கி.மீ., துாரத்திலும், ஜாம்நகரில் இருந்து, 120 கி.மீ., துாரத்திலும் போர்ப்பந்தர் உள்ளது.
தி. செல்லப்பா