
எம்.ஜி.ஆரின்மெய்க்காப்பாளராக இருந்த, கே.பி.ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியது:
திரைப்படம் தொடர்பான தொழில் நுட்பங்களில் சகலமும் தெரிந்த சகலகலா வல்லவர், எம்.ஜி.ஆர்., என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, அவரது பேச்சில், சிந்திக்க கூடிய கலைநயமும் இருக்கும்.
எம்.ஜி.ஆரின் நல்ல நண்பர், இயக்குனர் தாதாமிராசி. எம்.ஜி.ஆரிடம் தமாஷாக பேசும் ஆற்றல் பெற்றவர்.
காவல்காரன் படப்பிடிப்பு, சத்தியா ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அங்கு அவரை சந்திக்க வந்தார், தாதாமிராசி.
பேச்சு வாக்கில், எம்.ஜி.ஆரிடம், 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., மனுஷனாய் பொறந்தா ஏதாவது கேளிக்கைகள் இருக்கணும். உங்ககிட்ட அப்படி ஏதும் இல்லை. 'ஸ்மோக்கிங்' இல்லை. காபி, டீயாவது சாப்பிடுறீங்களா என்றால் அதுவுமில்லை.
'என்னைப் போல, 'தண்ணி' கேஸாவது உண்டா என்றால், அது அறவே கிடையாது. சரி நல்ல அழகான ஏதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதைப் பத்தியும் தெரியல...' என்றார், தாதாமிராசி.
அதற்கு, வெறும் புன்முறுவல் பூத்தபடி, 'மிராசி, நான் நல்ல ரசிகன். அழகுகளை ரசிக்கலாம். அவைகளை அடைய நினைக்கிறது தப்பு...' என்றார், எம்.ஜி.ஆர்.,
எம்.ஜி.ஆரின் இந்த பதிலைக் கேட்டு, இயக்குனர் நீலகண்டன், தாதாமிராசி உட்பட அனைவரும் ரசித்தனர்.
*****
எஸ்.கே.கார்வேந்தன் எழுதிய, 'தமிழகத்தின் தியாகச் சுடர்கள்' நுாலிலிருந்து:
சுதந்திர இந்தியாவில், சென்னை ராஜதானியின், முதல் முதல்வர் என்ற பெருமை பெற்ற, ஓ.பி.ராமசாமி ரெட்டியார், 2 ஆண்டு, 3 மாதம், 13 நாட்கள் பதவியில் இருந்தார்.
அவரது அமைச்சரவையில், எம்.பக்தவத்சலம், டாக்டர் பி.சுப்பராயன், டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் உட்பட, 12 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பிரதம அமைச்சராக பொறுப்பேற்ற போது, சென்னை ராஜதானி அரசை வழி நடத்தியவர்களில் பெரும்பான்மையோர், 102 ஆங்கிலேய ஐ.சி.எஸ்., அதிகாரிகள்.
ராஜ வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சி முடியப் போகிறது என்பதை விட, கதராடை அணிந்து, நெற்றியில் விபூதி தரித்து, 'டிரஸ் கோடு' பின்பற்றாத ஒரு மனிதனுக்கு கீழ் வேலை பார்ப்பதை தான் அவமானமாக கருதினர்.
ஓ.பி.ராமசாமி ரெட்டியார் பதவி ஏற்ற இரண்டாது நாளில், மீன் வளத்துறை இயக்குனராகப் பொறுப்பு வகித்த, அப்பாஸ் கலிலி என்ற ஐ.சி.எஸ்., அதிகாரி சந்தித்தார்.
'உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், கடலில் மீன் உற்பத்தியை பெருக்க வேண்டும். அதற்காக, ப்ளூ ரெவல்யூஷன் துவங்கி, மீன் வளத்தை அதிகரிக்க வேண்டும்...' என்றார், ஓ.பி.ராமசாமி ரெட்டியார்.
'அது அவ்வளவு எளிதல்ல. கடல் என்றால் அதில் எல்லா இடங்களிலும் மீன்கள் கிடைத்து விடாது...' என, ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு ஒன்றும் தெரியாது எனக் கருதி மிக அலட்சியமாக பதிலளித்தார், அப்பாஸ் கலிலி.
'உண்மைதான், 'கான்டினென்டல் ஷெல்ப்' - கண்டத்திட்டு என்ற பகுதிகள் தான், மீன் பிடிக்க ஏற்றது. அதற்கும் பல புதிய முறைகளை, நார்வே போன்ற நாடுகள் கண்டுபிடித்துள்ளன...' என்று அது குறித்து தெளிவாக விளக்கினார், ஓ.பி.ராமசாமி ரெட்டியார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார், அப்பாஸ் கலிலி.
இவர், கிராமத்து சாதாரண விவசாயி அல்ல. படிக்காத மேதை என்ற செய்தி அடுத்த நாளே, தலைமைச் செயலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அரசு உயரதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்படத் துவங்கினர்.
ஒவ்வொரு கோப்புகளையும் முழுமையாகப் படித்து ஆங்கிலத்தில் குறிப்புகள் எழுதுவதை பார்த்து வியந்தனர், அரசு உயரதிகாரிகள்.
- நடுத்தெரு நாராயணன்