/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...
/
கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...
PUBLISHED ON : ஜூன் 02, 2024

* பேசுவதற்கான
பல கோடி வார்த்தைகள்
உங்கள் உள்ளத்தில் இருக்கின்றன...
ஆனால், அவற்றை
தனக்குத் தானே பேசிக் கொண்டால்
பார்ப்போர் சிரிப்பர் என்பதால்
பேசிட விரும்பும்
பிடித்தமான முகங்களுக்காக
காத்திருந்து பேசுவதே சரி!
* செய்து முடிப்பதற்கான
பல்லாயிரம் செயல்கள்
உங்கள் மனதில் இருக்கின்றன...
ஆனால், அவற்றை
தனக்காக மட்டுமே செய்து கொண்டால்
உலகத்தார் சாடுவர் என்பதால்
செய்திட எண்ணும்
ஒவ்வொரு செயலையும்
பொது நல உணர்வு கலந்து
செய்து கொண்டிருப்பதே சரி!
* திறந்த மனதோடு மட்டுமே
நம் வாழ்க்கை முழுவதும்
நாம் பயணப்பட வேண்டும்...
அவ்வாறு பயணப்படத் தயங்கினால்
திரும்பிய திசைகளில் எல்லாம்
மூடிய கதவுகளை மட்டுமே
நாம் பார்த்து திகைக்க வேண்டிய
பரிதாப நிலைமை ஏற்பட்டு விடும்!
* தனக்கான துறையை தேர்வதில்
உங்களுக்குள்ள அகலாத
ஆர்வம் தான் அடிப்படை...
ஆனால், ஆர்வம் இருக்கிறது
என்ற ஒரு காரணத்தாலேயே
யாருக்கும் திறமை வந்து விடாது!
* ஆர்வம் என்பதுதினமும் ஆடை மாற்றுவதைப் போல
மாறிக்கொண்டே இருக்கும்...
ஆனால், திறமை அப்படி அல்ல;
விடாமல் தொடர்ந்து
பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால்
வெற்றி சிகரத்தில் ஏற்றி வைக்கும்!
— எஸ்.வி.ராஜசேகரன், மதுரை.

