PUBLISHED ON : ஜூன் 09, 2024

உலகளவில் மிளகு உற்பத்தியில் இந்தியா, நான்காம் இடத்தில் இருந்தாலும், காரம், மணம், குணத்தில் முதலில் நிற்பது, இந்திய மிளகு தான்.
'பைப்பரேசியே' எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மிளகு, கறுப்புத் தங்கம் என்று போற்றப்படும் அருமருந்து. கரு மிளகு, வால் மிளகு என, இரு வகைகள் உண்டு. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள, 'பெப்பரைன்' என்ற வேதிப்பொருளால் உருவாகிறது.
இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
நெஞ்சுச்சளி, நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளைப் போக்குகிறது.
'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்' என்பது பழமொழி. உணவில் உள்ள நஞ்சை முறிக்கும் தன்மை, மிளகுக்கு உண்டு. உடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமான அமிலங்கள் அதிக அளவு சுரக்க உதவுகிறது.
இதிலுள்ள, 'பெப்பரைன்' மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ரத்தக் கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள செலினியம், குர்குமின், பீட்டா கரோட்டின், வைட்டமின் 'பி' போன்றவை, குடல் பகுதிகளில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது.
மிளகிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அன்றாடம் மிளகு ரசம் உண்டால், வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
அசைவ உணவு சமைக்கும் போது, கடைசியாக ஒரு தேக்கரண்டி மிளகு பொடி சேர்ப்பது உணவுக்கு சுவையையும், மணத்தையும் தரும்.
சளியால் ஏற்படும் இருமலுக்கு மிளகு நீரில், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். அதிகமாக சளித் தொல்லை உள்ளோர், மிளகை நெய்யில் வறுத்து பொடித்து, அதை தினம் மூன்று வேளை அரைத் தேக்கரண்டி சாப்பிட்டு வர குணமாகும்.
உடல் சூடால் வரும் இருமலுக்கு, மிளகுப் பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, சிறிதளவு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட, இருமல் நீங்கும்.
ஞாபக மறதி, உடல் சோம்பல், சளித் தொந்தரவுகளுக்கு, மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இரு வேளை சாப்பிட, பலன் தெரியும்.
சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு ஆகியவற்றை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும். மிளகைத் துாள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு, அதிலிருந்து வரும் புகையை இழுக்க, அடுக்குத் தும்மல் நின்று விடும்.
மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும். மிளகுடன் உப்புச் சேர்த்து பல் துலக்கினால், பல் வலி, சொத்தை பல், ஈறு வலி, ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் குணமாகும்; பற்களும் வெண்மையாக இருக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
மிளகை அரைத்து தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். மிளகைச் சுட்டு அதன் புகையை இழுத்தாலும் தலைவலி தீரும்.
மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால், செரிமான கோளாறு நீங்கும். ஏழு, எட்டு மிளகை ஒரு குவளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரை குடித்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
தினமும் பத்து மிளகை உண்டு வர, ரத்தம் சுத்தமாகும். கனிந்த வாழைப்பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.
தொகுப்பு : ஞானம் ராஜேந்திரன்.

