
''சார்... போஸ்ட்!'' சத்தமாக குரல் கொடுத்தார், தபால்காரர்.
'டிவி' பார்த்துக் கொண்டிருந்த, தமயந்தி, எழுந்து அவசரமாக வாசலுக்கு வந்தாள்.
பதிவுத் தபாலை கையெழுத்துப் போட்டு வாங்கி, உள்ளே வரும்போதே, எங்கிருந்து வந்திருக்கிறது என பார்த்தவளுக்கு, ஆயிரம் மலர்கள் மழையாக மாறி பொழிந்ததைப் போலிருந்தது.
தஞ்சாவூரில், அவள் விண்ணப்பித்திருந்த கல்லுாரியில் இருந்து வந்திருந்தது. பரபரப்பாக படித்ததும், துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.
அவளுக்கு அந்த கல்லுாரியில் இடம் கிடைத்து விட்டது. வந்து சேர்ந்து கொள்ள வேண்டிய தேதி மற்றும் கட்டண விபரங்கள் எல்லாம் இருந்தன.
மகிழ்ச்சி தாளாமல், ''அம்மா... அம்மா...'' என, உள்ளே ஓட முயற்சித்தவளை, ''என்ன லெட்டர்?'' என, தன் அறையிலிருந்து வந்த, அப்பா சந்திரசேகரின் குரல், அதிகாரமாக ஒலித்தது.
ஒரு கணம் உள்ளுக்குள் இருந்த உற்சாகம் ஓடி ஒளிந்தாலும், முகத்திலிருந்த மகிழ்ச்சி மட்டும் மறைய மறுத்து, ஒளிர்ந்தது.
''தஞ்சாவூர்ல காலேஜுக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன். சீட்டு கிடைச்சிடுச்சு. சேர சொல்லி லெட்டர் வந்திருக்கு அப்பா,'' ஆவலுடன் கடிதத்தை தந்தையின் கையில் கொடுத்தாள்.
அப்போது, அவளுடைய கண்களில் ஆயிரம் நட்சத்திரங்களின் நடன ஒளி தெரிந்ததை காண விரும்பாதவராய், கடிதத்தை அப்படியே விசிறியடித்தார்.
''அப்பா?'' அதிர்ச்சியாய் அவரை பார்த்தாள். அவருடைய முகத்தில் தெரிந்த அகங்காரம், அவளை உலுக்கி விட்டதைப் போல் ஆடிப்போனாள். அந்த கடிதம், 'டிவி' ஸ்டாண்டிற்கு கீழே சென்று, தரையோடு தரையாக படிந்துக் கிடந்தது.
''நீ, படிச்சுக் கிழிச்ச வரைக்கும் போதும். போய் வேலையை பாரு,'' அவருடைய கர்ஜனை அந்த கூடத்தையே குடுமியைப் பிடித்து ஆட்டியதைப் போல், கிடுகிடுக்க வைத்தது.
அவருடைய காட்டுக்கத்தலான குரல், சமையலறை வரை பாய்ந்து, பூங்கோதையை, பதற்றமாய் வெளியே வரவழைத்தது.
கடிதம் பறந்ததை அறியாத, பூங்கோதை அவரைப் பார்த்தாள். அந்த முகம், ஆயிரம் செங்கற்களை வைத்து மூட்டி எரிய விட்ட சூளையாக தகதகத்தது.
என்னவென, அவள் கேட்க வாயெடுப்பதற்குள், விருட்டென வெளியேறி, தெருவில் இறங்கிய சந்திரசேகரின் கால்கள், தேவையில்லாத ஒரு வேகத்தில் நடந்தன.
நோக்கமில்லாத கால்களுக்கு, ஓடிப்போய் எதையோ பிடித்துவிட வேண்டும் என்ற வேகம், இருந்தது.
நெஞ்சு முழுவதும் அடைத்திருந்த அழுத்தம், அவர், முன்னோக்கி தெருவில் நடக்க நடக்க, அவரை பின்னோக்கி கொண்டு சென்றது.
படி படி என்று சொன்ன அதே வாயால், 'படிச்சு கிழிச்சது போதும்...' என்று, கூறி விட்டார்.
படிப்பைத் தவிர, அவள் எந்த வேலை செய்தாலும் மனைவியை அழைத்து திட்டி விட்டு, 'படிப்பது மட்டும் தான் உன் வேலை...' என்று சொன்னவர், 'போய் வீட்டு வேலையைப் பார்...' என்று, விரட்டுகிறார்.
பெண் அடிமைத்தனமான வார்த்தைகள் இல்லை இவை; பெண்ணால், அவர் பட்ட அடியால் வெளிப்பட்ட வார்த்தைகள்.
தமயந்தி, அவருக்கு ஒரே மகள். பெண் பிறந்ததால் லெட்சுமி பிறந்திருக்கிறாள் என்று கொஞ்சிய உறவுகளிடம், 'சரஸ்வதி பிறந்திருக்காள்னு சொல்லுங்க...' என சொல்லி, திருத்தியவர்.
சரஸ்வதியாகத் தான் வளர்த்தார். படிப்பு மட்டும் இல்லை, தன் மகள், ஆயக்கலை 64லும் பயில வேண்டும் என, உழைத்தார்.
'இந்தா, பொட்டப் புள்ள நாலெழுத்து படிக்கிறது நல்லது தான். படிப்போட நிப்பாட்டிக்க. பாட்டு படிக்க, பரதநாட்டியம் கத்துக்கன்னு எதுக்கு அனுப்பற?' அந்த கால பாட்டி நொந்துக் கொண்டாள்.
'ந்தா... வெத்தலையைப் போட்டுக்கிட்டு, வெட்டி நியாயம் பேசிக்கிட்டே காலத்தை கழிச்ச உன்னை மாதிரி, இந்த காலத்துல வாழ முடியாது. எம்பொண்ணு சகலகலா வல்லியாக்கும்...' என சொல்லி, தாய் கிழவியை தட்டி வைப்பார்.
'என்னங்க... இந்த கராத்தே கிளாசெல்லாம் எதுக்காம்? செலவு கையைக் கடிக்குது. அந்த காசை ஒரு ஆர்.டி.,யா போட்டாக் கூட, அவ கல்யாணத்துக்கு உதவும்...' மனைவி கவலைப்பட்டபோது...
'இதப்பாரு... என் பொண்ணு கல்யாணத்துக்கு, நான் தரப்போற, சீர் என்ன தெரியுமா? அவ வாங்கி வச்சுருக்கிற கோப்பை, கேடயம் மற்றும் கருப்பு பெல்ட் தான் ஒட்டியாணம்...'
'ஆமா... புருஷன் ஏடா கூடமா ஏதாவது சொன்னா, அந்த கருப்பு பெல்ட் பேசும்...' அவளும் அப்பாவுடன் சேர்ந்து வாயாடுவாள்.
'இதெல்லாம் எங்க ஒருத்தன் வீட்டுல போய் குப்பைக் கொட்டப் போவுது...' தலையில் அடித்துக் கொள்வாள், தாய் கிழவி.
'நீதான் குப்பைக் கொட்டுறதுல, 'ஸ்பெஷலிஸ்ட்' ஆச்சே. என் வீட்டுக்கும் வந்து குப்பையைக் கொட்டு...' என, பாட்டியை கேலி பேசுவாள்.
அத்தனையும் அப்பா தந்த செல்லம்.
அப்படிப்பட்ட அப்பா, இன்று அதிரடியாய் தீர்ப்பு சொல்லி விட்டார், 'படிக்க வேண்டாம்...' என்று.
'என் பொண்ணை படிக்க வச்சு கலெக்டர் ஆக்குவேன் பாரு...' என, தோள் தட்டிய அப்பா, அவளை வெட்டிப் போட துணிந்து விட்ட நேரமும் ஒன்று வந்தது.
பிளஸ் 2 தேர்வை மிகவும் நன்றாக எழுதினாள், தமயந்தி.
எப்போது தேர்வு முடிவுகள் வரும், அதை ஒரு தீபாவளி அளவுக்கு கொண்டாட திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
தேர்வுக்கு பிறகு வந்த விடுமுறையைக் கூட, அவள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என, விரும்பினார்.
மயிலாடுதுறையில் ஒரு கணினி வகுப்பில் சேர்த்து விட்டார்.
உற்சாகமாக கணினி வகுப்பிற்கு போய் வந்தாள், தமயந்தி. வியாபார விஷயமாக மயிலாடுதுறைக்கு பொருட்கள் வாங்க சென்ற, சந்திரசேகர், சந்திக்க வேண்டிய நபர் வர, பல மணி நேரம் ஆகும் என்றனர். அதுவரை என்ன செய்வது என தெரியாமல் நேரத்தைக் கடத்த, ஏதோ ஒரு தியேட்டரில் நுழைந்து, டிக்கெட் எடுத்தார்.
திரையில் படம் ஓடிக் கொண்டிருந்தாலும், மனம் வந்த வேலை விஷயமாகவே யோசித்துக் கொண்டிருந்தது. அவரின் கண்களில், முன், இரண்டு வரிசை தள்ளி அமர்ந்திருந்த, அந்த ஜோடி அரை குறையான திரையின் வெளிச்சத்திற்கு ஏற்ப தெரிந்து கொண்டிருந்தனர்.
திரையரங்கில் இருட்டில் அவர்களின் நெருக்கம், அவரை படம் பார்க்க விடாமல் அலைக்கழித்தது.
கையோடு கை, முகத்தோடு முகம் என, சரச சல்லாபத்தில் திளைத்துக் கொண்டிருந்தது, அந்த ஜோடி.
'ச்சே... என்னதான் காதலர்களாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா?'
அவருடைய யோசனைகளுக்கு இடையிலேயே இடைவேளை விட்டதில், 'பளிச்'சென விழுந்த வெளிச்சத்தில், திரையரங்கே விழித்துக் கொள்ள, ஆடிப்போய் விட்டார்.
அது, அவருடைய லட்சிய மகள், தமயந்தி.
கடவுளே... கனவில் கூட இப்படி ஒரு காட்சியை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். வெளியே சென்று, ஐஸ் கிரீம் வாங்கி, சாப்பிட்டுக் கொண்டிருந்த மகளின் எதிரே போய் நின்றார்.
ஆடிப்போய் விட்டாள், தமயந்தி.
'வீட்டுக்கு வா...' என, ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி, திரையரங்கை விட்டு வெளியேறினார். வந்த வேலையை கவனிக்காமல், வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
எப்போதும் தொட்டு தொட்டு பெருமைப்பட்டுக் கொண்ட அவள் வாங்கிய கராத்தே பெல்ட்டை எடுத்து, விளாசினார்.
அன்றிலிருந்து கணினி வகுப்பு கட்டானது.
'இனி, இப்படி செய்ய மாட்டேன்...' என இரைஞ்சி, கால் பிடித்து அழுது, மன்னிப்புக் கேட்டாள், தமயந்தி.
உதறினார் கால்களை; மனதிலிருந்தும் தான். அன்றிலிருந்து பெரியதொரு மவுன திரை, அப்பா - பெண்ணுக்கு இடையில் விழுந்து விட்டது.
கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய மகளை, அவர் மனம் மன்னிக்கவில்லை.
இனி, அவள் படிக்க கூடாது என, முடிவு செய்து விட்டார்.
பழைய காட்சிகள் அவரை இயக்கியதில், பழக்க தோஷத்தில், கால்கள், தேநீர் அருந்தும் கடைக்கு கொண்டு வந்தன.
நெஞ்சு வலிப்பதைப் போலிருந்தது. கண்களை கீறி, அழுகை பெருக்கெடுத்தது.
தேநீருக்கு சொல்லி, தன் கண்ணீரை யாரும் கவனித்து விடாதபடி மறைத்துக் கொள்ள அங்கிருந்த செய்தித்தாளை எடுத்து, மறைத்துக் கொண்டார்.
'சார், டீ...' கடை பையனின் குரலுக்கு செய்தித்தாளை இறக்கியவர் எதிரே, 'டிப் டாப்'பாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தார்.
கை, தேநீர் கிளாஸை வாங்கினாலும், கண்கள், அவன் மீதே பதிய, மூளை திணறியது.
'யார் இவன்? எங்கோ பார்த்திருக்கிறேனே...' யோசிக்க யோசிக்க பிடிப்பட்ட போது, திகைத்து துணுக்குற்று, அதிரவும் செய்தார்.
'மாயாண்டி தானே இவன்? மாயவரத்தில் பெரிய ரவுடி. அரசியல் பிரச்னையில் கட்சிப் பிரமுகரை வெட்டியதில், கொலை வழக்காகி, ஜெயிலுக்குப் போனவன். அவனா இவன்?
'தாடியும், மீசையும், பரட்டைத் தலையும், கழுத்தில் கொத்து கொத்தாய் பித்தளையும் சில்வர் சங்கிலியுமாய்... கையில்லாத பனியன், லுங்கி என திரியும், மாயாண்டியா இவன்?
'ஏதோ கல்லுாரி பேராசிரியரைப் போல், 'பளிச்'சென்ற உடையும், பாந்தமான கண்ணாடியும், படிய சீவிய கேசமுமாய்...
'ஜெயிலிலிருந்து எப்போது விடுதலையானான்? ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் என்று பேசிக் கொண்டனரே... இவன் ஜெயிலுக்குப் போன பிறகு தானே, மாயவரமே தெளிவாக சுவாசிக்கத் துவங்கியது.
'இது என்ன புது வேஷம்? மாறு வேஷத்தில் மறுபடி எவனையாவது தீர்த்துக் கட்ட வந்திருக்கானா?'
இவ்வாறு பல யோசனைகள். அவருடைய தேநீர், ஆறிப்போய் இருந்தது. அடுத்து, ஈ விழும் நிலை தான்.
தேநீரை குடித்துவிட்டு எழுந்தான், மாயாண்டி. பக்கத்தில் வைத்திருந்த சில புத்தகங்களை எடுத்துக் கொண்டான்.
அந்த புத்தகங்கள் தான், அவரை இன்னும் நிலை குலைய வைத்தன. அவரைப் போலவே அந்த கடையிலிருந்த அனைவருக்குமே அவனை தெரியும்.
அவன் சென்ற பின், கடைக்காரர், இன்னொருவரிடம், ''அது யாருன்னு தெரியுதா?''
''அவனைத் தெரியாம என்ன... ரவுடி மாயாண்டி தானே? ஜெயிலிலிருந்து வந்துட்டான் போலிருக்கு; ஆளே மாறிட்டான். வாத்தியாரு மாதிரி கையில் புத்தகமெல்லாம் வச்சிருக்கான்?''
''வாத்தியாரே தான்!''
''என்னது வாத்தியாரா?''
''ஆமா... ஜெயில்ல படிச்சு, டிகிரி வாங்கி இருக்கான்; புத்தி வந்திருக்கு. வெளியில வந்ததும், கத்திய துாக்கிப் போட்டுட்டு, புத்தகத்தை எடுத்துட்டான். இப்ப, ரவுடித்தனம் எல்லாம் பண்றதில்லை.
''ஏதோ ஒரு, 'டியூஷன்' சென்டரில், வாத்தியாரா பாடம் சொல்லித் தந்து, வாழ்க்கையை நடத்துறானாம். எல்லாம் படிப்பு தந்த மாற்றம். ஜெயிலில், கைதிகளுக்கு சாப்பாடு, வசதின்னு நிறைய குறைகள் இருக்கலாம்; கொடுமைகள் இருக்கலாம்.
''ஆனா, நீ திருடன், கொலைகாரன் படிக்க கூடாதுன்னு யாருக்கும் கல்வி மறுக்கப்படலை. தப்பு செய்யிறவனுக்கு என்ன தண்டனைக் கொடுத்தாலும், கல்வி தராம தண்டனை கொடுக்கப்படறதில்லை.'' என்றார், டீ கடைக்காரர்.
சவுக்கால் யாரோ விளாசியதைப் போல் துடித்துப் போனார், சந்திரசேகர். ஆறிய தேநீரை குடிக்காமலேயே வைத்துவிட்டு எழுந்து, வெளியே வந்தார்.
'ஒரு கொலைகாரனுக்கே இந்த சமுதாயத்தில் கல்வி மறுக்கப்படாத போது... என் குழந்தை அப்படியென்ன பெரிய தப்பு செய்து விட்டாள்?'
உடைந்து வந்த அழுகையை, வீடு வரை கட்டுப்படுத்திக் கொண்டு வந்தவர், நாதியற்று கிடந்த கடிதத்தை தேடி எடுத்து, மகளின் கையில் கொடுத்தார்.
''நீ விரும்பிய வரை படி,'' என சொல்லி, குலுங்கி குலுங்கி அழத் துவங்கினார்.
ஆர். சுமதி