
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 23 வயது பெண். இன்ஜினியரிங் படித்து முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளேன். எனக்கு ஒரு அண்ணன். வங்கி ஒன்றில் வேலை செய்கிறான்.
அண்ணனை விட நான், நன்றாக படிப்பேன். படிப்பு, விளையாட்டு என்று எதிலும் முதல் பரிசு வாங்கி விடுவேன். அண்ணனுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது.
என் அப்பா, அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் பணிபுரிவதால், பி.காம்., பட்டப் படிப்பு படித்த அண்ணனுக்கு, சிபாரிசில் வேலை வாங்கி கொடுத்து விட்டார்.
ஆனால், வீட்டில், அண்ணனுக்கு தான் எதிலும் முன்னுரிமை. அவன் மீது பொறாமையால் இதை சொல்லவில்லை. அவன் சின்னதாக செய்யும் விஷயத்தை கூட, பெரிதாக்கி பெருமையாக பேசுவர், பெற்றோர். அவனுக்கு தைரியம் அதிகம், புத்திசாலி என்று ஏகத்துக்கு புகழ்வர்.
இத்தனைக்கும், அண்ணனுடன் நான் இயல்பாக பழகுவேன். அவனுக்கு எது பிடிக்குமோ அதைதான் சமைப்பார், அம்மா. இதனால், என் பெற்றோர் மீது வெறுப்பும், கோபமும் அதிகமாக வருகிறது.
'ஆண் என்றால் உசத்தியா?' என, பலமுறை அவர்களிடம் சண்டை போட்டுள்ளேன். ஆனாலும், சிரித்தபடி போய் விடுவர்.
இதனாலேயே வீட்டிற்கு வந்ததும், என் அறைக்குள் புகுந்து கொள்கிறேன். யாரிடமும் பேச பிடிப்பதில்லை. மன அழுத்தம் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா!
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஆண் பிள்ளை உசத்தி,- பெண் பிள்ளை தாழ்த்தி என்ற மனோபாவம், 20 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஆணோ - பெண்ணோ ஒரு குழந்தை தான். மீறினால் இரு குழந்தைகள். இரு ஆண் அல்லது இரு பெண் அல்லது ஒரு ஆண், ஒரு பெண். அன்பிலும், வளர்ப்பிலும் சம பங்கு தான்.
மூத்த குழந்தை பிறக்கும் போது, வறுமையில் இருந்த குடும்பம், சுபிட்சம் ஆகியிருக்கும். அதனால், மூத்த குழந்தை ராசியானது என, விசேஷ சலுகை, சில வீடுகளில் கொடுக்கப்படுவது உண்டு.
சரி, உன் பிரச்னைக்கு வருவோம்...
அழகாலும், பணத்தாலும், அதிகாரத்தாலும் ஒருவரையொருவர் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது மனித இயல்பு. இந்த ஒப்பீடு, கொருக்குபேட்டையில் உள்ளவருக்கும், அலாஸ்காவில் உள்ளவருக்கும் இடையே நடப்பதல்ல.
நெருங்கிய உறவுகளுக்குள், நெருங்கிய நட்புகளுக்குள் நிச்சயம் ஒப்பீடு நடக்கும். கூட பிறந்தவர்களுக்கு, சிறு சிறு சலுகைகள் கொடுக்கப்படும் தான். இருக்கட்டுமே, யாருக்கு கொடுக்கப்படுகிறது? உடன்பிறந்த மூத்த சகோதரனுக்கு தானே. அவனது எச்சில் பாலைத்தானே நாம் குடித்தோம்.
படிப்பு, விளையாட்டுகளில், நீ கெட்டிக்காரி என்றால், அண்ணன் முட்டாளாகவா இருப்பான்?
அப்பாவின் சிபாரிசில் அண்ணனுக்கு வேலை கிடைத்தது சரி. தினசரி அவனது திறமையான செயல்பாட்டுக்கு, அந்த சிபாரிசு தொடர்ந்து செல்லுபடி ஆகுமா? பணியிட அரசியலில் கழைக்கூத்தாட தெரியாதோர், வெளியே துப்பப்பட்டு பரிதாபமாய் கிடக்கின்றனர்.
நீ, இப்போது தான் வேலைக்கு போயிருக்கிறாய். உனக்கு சம்பளம், அண்ணனை விட குறைவாக தான் இருக்கும். வேலை பார்த்துக்கொண்டே தொடர்ந்து படி. அண்ணனை விட உயர்ந்த பணியில் போய் சேர்.
பெற்றோர் மற்றும் அண்ணனுடன் முட்டி மோதிக்கொண்டே இருந்து, வெறுப்பை சம்பாதிக்காதே. உனக்கு, இந்திய குக்கிராம சமையலும், அண்ணனுக்கு, பிரெஞ்ச் சமையலுமா பண்ணப் போகின்றனர்? சமைப்பதை சாப்பிடு. ஏதாவது உணவு விருப்பமாய் இருந்தால், 'ஆர்டர்' பண்ணி வாங்கி சாப்பிடு.
அண்ணன் -- தங்கை, 'ஈகோ' போர், உறவுக்கார கழுகுகளுக்கு, ஒரு அண்டா பலாப்பழ பாயசம். ஒரு விஷயம் தெரிந்து கொள், அண்ணன் பொருளாதாரம், மன நலம், உடல்நலம் ரீதியாய் ஷேமமாய் இருப்பது உனக்கு நல்லது; அண்ணனுக்கும் நல்லது. உங்கள் இருவரின் வெற்றி, உங்கள் குடும்பத்துக்கு நல்லது.
அண்ணனும் - தங்கையும் ஒற்றுமையாக இருந்தால், நாளை வரும் உங்கள் வாழ்க்கை துணைகளும், வாரிசுகளும் ஒற்றுமையை தொடர்வீர்கள்.
உண்மையில் உன் பெற்றோர் ஒருபிடி தாழ்த்தி, உன் மீது அன்பு செலுத்துகின்றனர் என்றால், அவர்களை அன்பால் மன்னித்துவிடு. விட்டுக் கொடுத்தலும், சகிப்புதன்மையும், பகைமையும், பொறாமையும் இல்லாத பரிசுத்த மனமும், பேரானந்தத்திற்கான கடவுச்சீட்டு.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.