PUBLISHED ON : ஜூன் 16, 2024

ஜூன் 16 - தந்தையர் தினம்
அன்புள்ள அப்பாவுக்கு
அன்றாட உழைப்பில்
அங்காடி வாழ்க்கையில்
என்னைப் பற்றிய
ஆகாயக் கனவுகளில்
மிதந்தவன் நீ!
காட்டாற்று வெள்ளம் போல்
யாருக்கும் கட்டுப்படாத
முரட்டு மனிதனாய் வாழ்ந்த நீ!
நான் பிறந்தபோதுஎன் பிஞ்சு முகம் பார்த்து
இனி குடிப்பதில்லை என்று
சத்தியம் செய்தாய்!
புகையிலை நாற்றம்
பிறந்த குழந்தைக்கு ஆகாதென்று
புகைப் பழக்கத்தையும்
புதைத்து விட்டாய்!
கடை வீதியில்
மூட்டை சுமந்து உழைத்தாய்...
வீட்டில் என்னை
உப்பு மூட்டை சுமந்து மகிழ்ந்தாய்!
என்னை வளர்ப்பதற்காக
கஷ்டப்பட்டு கடன்பட்டு
சுமை தாங்கியாய்
வாழ்ந்து காட்டினாய்!
கண்டிப்பு என்ற பெயரில்
மீசை முறுக்கினாலும்
ஆசையோடு அள்ளியெடுத்து
முத்தமிடும்போது
உனக்கு நிகர்
யாருமே இல்லை அப்பா!
வகுப்பறையில்
நான் செய்த தவறுக்காக
தன்மானத்தை அடமானம் வைத்து
நீ மன்னிப்பு கேட்டபோது
நெஞ்சம் உடைந்து செத்து விழுந்தேனப்பா!
உன் பாசமும்
சட்டையின் வியர்வை வாசமும்
என்னைக் கட்டிப்போட்டு
செக்கு மாடாய்
உன்னையே சுற்றி வரவழைத்தது!
உன் தொள தொள
சட்டையையும், செருப்பையும்
மாட்டிக் கொண்டு - நான்
நடந்து பார்த்த பொழுதுகள்
இன்னும் நெஞ்சுக்குள்
கவுரவமாய் நடை போடுகிறது!
வேதனையை மென்று விழுங்கி
அமைதியை முகத்தில் சுமந்து
அன்பின் வடிவாய்
பாசத்தின் உருவாய் வாழ்ந்தாய்!
என்னை
தோளில் சுமந்த உன்னை
வசந்த நாற்காலியில்
உட்கார வைக்க
நான் நினைத்த பொழுதில்...
உன் புகைப்படத்துக்குபூ மாலை சூட்டி, விளக்கும்
ஏற்றப்பட்டு விட்டது அப்பா!
இன்றும் - நீ
எனக்காக வாழ்ந்து
விட்டுச் சென்ற
வாழ்க்கைச் சுவடுகள் தான்
எனக்கு வழி காட்டியாக
இருக்கிறது அப்பா!
— என். ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை.