
ஷங்கர் இயக்கும் சரித்திர படத்தில், அஜித்!
தற்போது, இந்தியன்-2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கியுள்ள, ஷங்கர், அடுத்து, இந்தியன்- 3 பட வேலைகளில் இறங்க உள்ளார். அதையடுத்து, ராஜமவுலியின், பாகுபலி படத்திற்கு இணையாக, ஒரு சரித்திர படத்தை இயக்கப் போகிறார்.
'வேள்பாரி' என்ற நாவலை தழுவி உருவாகும், அந்த படத்தில் நடிக்க, அஜித்குமாரிடம் பேசியுள்ளார். இந்த படத்திற்காக, சில சரித்திர கால போர் பயிற்சிகளை எடுத்து, களம் இறங்கப்போவதாக கூறுகிறார், அஜித்.
சினிமா பொன்னையா
மகளின் சாதனை!
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின், 12 வயது மகள், சித்தாரா, வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர், சமீபத்தில், ஒரு ஆடை நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். ஆனால், அந்த முதல் சம்பளத்திலிருந்து, ஒரு பைசா கூட தனக்காக எடுக்காமல், அப்படியே ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும், ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்திருக்கிறார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து, மகேஷ் பாபுவின் மகள், சித்தாராவுக்கு பாராட்டுக்கள், குவிந்து வருகிறது.
எலீசா
செருப்பின் விலை ரூ.1 லட்சம்!
விஸ்வாசம், நானும் ரவுடிதான் மற்றும் பிடி சார் என, பல படங்களில் நடித்த, அனிகா சுரேந்திரன், சமீபத்தில், மும்பை சென்றபோது, ஒரு செருப்பை பார்த்து அசந்து விட்டாராம். இந்த செருப்பை போட்டு நடந்தால், தன் நடையழகே தனி அழகாகும் என்று நினைத்து, அதன் விலையைக் கேட்டதும், 'ஒரு லட்சம் ரூபாய்...' என்று, 'ஷாக்' கொடுத்துள்ளனர். ஆனபோதிலும், 'ஒரு லட்சம் ரூபாயை விட, அந்த செருப்பு தான் எனக்கு பெரிது...' என்று, அதே விலை கொடுத்து, வாங்கி வந்து விட்டார். அந்த செருப்பை அணிந்து, தான் ஒய்யாரமாக நடக்கும் வீடியோக்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டுள்ளார், அனிகா சுரேந்திரன்.
— எலீசா
தமிழ் சினிமாவை நேசிக்கும், ரகுல் ப்ரீத் சிங்!
தற்போது தமிழில், கமல் நடித்துள்ள, இந்தியன்- 2 படத்தில் நடித்திருக்கும், ரகுல் ப்ரீத் சிங், திருமணத்திற்கு பின், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அதோடு, 'பாலிவுட்டில், நான் நடித்த படங்களில், என்னை வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழில், கிளாமரை விட, 'பர்பாமென்ஸ்' பண்ணுவதற்கு, எனக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர். அதன் காரணமாகவே, நான் பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழ் சினிமாவை, ரொம்பவே நேசிக்கிறேன்...' என்கிறார், ரகுல் ப்ரீத் சிங்.
— எலீசா
திருமணமான நடிகையரை ஜோடியாக்கும், ரஜினிகாந்த்!
சில ஆண்டுகளுக்கு முன் வரை, தன் மகள் வயது நடிகையருடன், 'டூயட்' பாடி வந்த, ரஜினி, தற்போது அந்த, 'ரூட்'டை அடியோடு மாற்றி விட்டார். ஜெயிலர் படத்தில், அவருக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணன் நடித்த நிலையில், தற்போது, வேட்டையன் படத்தில், மலையாள நடிகை, மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இதையடுத்து, ரஜினி நடிக்கப் போகும், கூலி படத்தில், முன்பு, கமலுடன், விருமாண்டி படத்தில் நடித்த, அபிராமி நடிக்க போகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* சீயான் நடிகரின், மகன் நடித்த, இரண்டு படங்களும் ஊத்திக் கொண்டதால், அவரை வைத்து படம் தயாரிக்க, எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இதன் காரணமாகவே, தற்போது, ஒரு பிரபல இயக்குனர் படத்தில், தன் மகனை நடிக்க வைத்திருக்கும், சீயான் நடிகர், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு, திரைமறைவில் பல கோடி ரூபாய்களை, 'பைனான்ஸ்' உதவி செய்திருக்கிறார். அதோடு, படத்தின் பட்ஜெட் அதிகரித்தால், திரை மறைவில் தானும் ஒரு, 'பார்ட்னர்' ஆகிவிடுவதாக,'டீல்' போட்டுள்ளார். அந்த அளவுக்கு, மகனுக்கு மார்க்கெட்டை உருவாக்க, பல கோடி ரூபாய்களை இறக்கி வருகிறார், சீயான் நடிகர்.
* புஷ்பா படத்தில், 'ஐட்டம் டான்ஸ்' ஆடிய, பாணா காத்தாடி நடிகை, புதிய பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். அதோடு, வேலை வெட்டி இல்லாததால், அம்மணி எந்நேரமும் போதையில் நீந்தி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி டோலிவுட்டில் பரவியதை அடுத்து, அம்மணியுடன் குடித்து, கும்மாளம் போடும் நோக்கத்தில், சில அபிமான, 'ஹீரோ'கள் அவரை துரத்தி வருகின்றனர். சரக்கடிக்க கம்பெனி கொடுத்தால், அதன்பின், தன்னை முழுநேர அந்தரங்க தோழியாக்கி விடுவர் என்று, அவர்களுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார், அம்மணி.
சினி துளிகள்!
* கோயம்புத்துாரை சேர்ந்த, நடிகை அதுல்யா ரவி, தமிழில் நடித்தபோது, கோடு போட்டு நடித்து வந்தார், தற்போது, டோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்ததையடுத்து, கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்.
* விடுதலை, கருடன் படங்களை அடுத்து கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ள, சூரி, ஒரு படத்தில் நடிக்க, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
* குஷி படத்திற்கு பிறகு, சமந்தா, கதையின் நாயகியாக நடிக்க இருந்த ஒரு படம், துவங்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
* ஆதித்ய வர்மா மற்றும் மகான் படங்களில் நடித்த, துருவ் விக்ரம், தற்போது, மாரி செல்வராஜ் இயக்கி வரும், பைசன் என்ற படத்தில், நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!