
எஸ்.கே.கார்வேந்தன் எழுதிய, 'தமிழகத்தின் தியாகச் சுடர்கள்' நுாலிலிருந்து:
கடந்த 1937ல், பிப்ரவரி மாதம், சென்னை மாகாண சட்டசபை தேர்தல் நடந்தது. அத்தேர்தலில், நீதிக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி.
அந்த தேர்தலில், சென்னையில் போட்டியிட்டார், தீரர் சத்தியமூர்த்தி. அவரை ஆதரித்து, தனக்கே உரிய பாணியில் கடுமையாக பிரசாரம் செய்து, வெற்றி பெறச் செய்தார், கே.பி.சுந்தராம்பாள்.
அது மட்டுமல்லாமல், தீரர் சத்தியமூர்த்தி, மட்டப்பாறை வெங்கட்ராம ஐயர், காமராஜர் ஆகியோருடன் இணைந்து, மூன்று மாதம் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் சென்று, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தார், கே.பி.எஸ்.,
அப்போது தேர்தலில், கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி, நீதிக் கட்சிக்கு பச்சை பெட்டி.
அதில் தான் வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டும். தமிழகம் முழுவதும், ஓட்டு சேகரித்த, கே.பி.சுந்தராம்பாள், 'மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு உங்கள் வாக்குகளை இட வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார்.
'ஓட்டுடையோரெல்லாம் கேட்டிடுங்கள் இந்த நாட்டின் நலத்தை நாடி போட்டிடுங்கள்...' என்ற பாடலை, அட்டணா ராகத்தில் உணர்ச்சி பொங்க, உரத்த குரலில் பாடி முடிப்பார்.
கட்டாயமாக மஞ்சள் பெட்டிக்கு ஓட்டளிப்பதன் மூலம் தான், வெள்ளையர் ஆட்சியை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும் என்பதை மக்கள் மத்தியில், தன் வெண்கலக் குரலால் பதிய வைத்தார்.
கே.பி.சுந்தரம்பாளின் கடின உழைப்பு வீண் போகவில்லை. 215 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 159 இடங்களில் வென்றது. நீதிக்கட்சி வெறும், 18 இடங்களை மட்டும் கைப்பற்றியது.
****
முன்பு, வானொலியில், 'மலரும் நினைவுகள்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, நடிகை சாவித்திரி கூறியது:
பொருளாதாரத்தில் பாதாளச் சரிவில், அண்ணா நகரில், பிளாட்டில் ஒடுங்கிவிட்ட சாவித்திரியிடம், 'மலரும் நினைவுகள்' என்ற, வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அவரை அழைக்கச் சென்றிருந்தார், நிகழ்ச்சி தயாரிப்பாளர்.
அவர் நடிப்பில் உச்சம் தொட்ட காட்சிகள், பாடல்கள் இவற்றைப் படபடவென, 10 நிமிடங்களிலேயே பட்டியல் போட்டு சொல்லி, நிகழ்ச்சியில் சேர்க்குமாறு கூறினார், சாவித்திரி.
வீட்டில் உதவிக்கு ஆள் இல்லாத நேரம். சமையலறையில் நின்று, உரத்த குரலில், நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் பேசிக் கொண்டே, காபி தயாரித்து ஒரு தட்டில், நாலைந்து உப்பு பிஸ்கெட்டுகளையும் எடுத்து வந்து உபசரித்தார்.
அந்த நேரத்தில் அவர் தெரிவித்த ஆதங்கம்...
'சம்பாதிக்க தெரிஞ்ச அளவுக்கு அதை காப்பாத்திக்கற சாமர்த்தியம் எனக்கு இல்லாமல் போச்சு. சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவுகள் என்னைக் கவுத்து வுட்டுடுச்சு.
'கண்ணை மூடுற காலம் வரைக்கும் நடிக்கணும், சம்பாதிக்கணும், சாப்பிடணும்ங்கிற கட்டாயத்தில் இருக்கேன்.
'எப்பவோ நடிச்ச படங்கள் இப்பவும் தியேட்டரில் சக்கைப்போடு போடுது. 'ரீ - ரிலீஸ்' பண்றதுல அந்த தயாரிப்பாளர்களுக்கு பிரின்ட், பப்ளிசிட்டி தவிர வேற செலவுகள் அதிகமில்லே.
'அவங்கள்லாம் பெரிய மனசு பண்ணி, அந்த வசூலில் இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடினவங்க, எங்களை மாதிரி நடிகர், நடிகைகள், கேமரா மேன், எடிட்டர்ன்னு ஆளுக்கு 1, 2 சதவீதம் பங்கு கொடுத்தாங்கன்னா, 'பென்ஷன்' வர்ற மாதிரி சந்தோஷப்பட்டு வயிறார சாப்பிட்டு, மனசார வாழ்த்துவோம். இனிமே நாங்க ஏன் கேமரா முன்னாடி நிக்கணும்...' என்றார், வருத்தத்துடன்.
- நடுத்தெரு நாராயணன்