sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 14, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

'மணி... தெரியாத்தனமா, ரோஸ் கலர் பெயின்ட் அடித்த அரசு பஸ்சில் ஏறிட்டேம்பா...' என்றவாறு, அலுவலகத்தினுள் நுழைந்தார், 'திண்ணை' நாராயணன்.

'ஓய்... இளம் பெண்கள் அணிவது போன்று, டைட் பேன்ட் - குர்தா போடாதீர்ன்னு பலமுறை சொல்லி விட்டேன். நீர் கேட்பதாய் இல்லை. அதுவும், கலர் கலரா வேறு போட்டுள்ளீர்... உம்மையும், 'லேடி' என்று நினைத்து விட்டார்களோ, என்னவோ!' என்றார், லென்ஸ் மாமா.

'சும்மா இரும் ஓய்... என்னை கலாய்ப்பதே உமக்கு வேலையா போச்சு. நான் சொல்ல வந்ததே வேறு. அதாவது, ஆபிஸ் வர, 'லேட்' ஆகிவிட்டதே என்று, ரோஸ் கலர் பஸ்சில் ஏறிட்டேன். அந்த பஸ்சில் பெண்களுக்கு இலவசம் என்பதால், பெண்கள் கூட்டம் மொய்த்திருந்தது.

'அவசரம் கருதி ஏறி, காசு கொடுத்து, டிக்கெட் வாங்கிய என்னைப் போன்ற சில ஆண்கள், 'தேமே' என, அடங்கி ஒடுங்கி அமர்ந்தும், சிலர் நின்று கொண்டும் பயணம் செய்தோம்.

'ஒரு நிறுத்தத்தில், இரட்டை நாடி உடல்வாகு கொண்ட பெண்மணி ஒருவர் ஏறினார். உட்கார இடம் இல்லாததால், நின்று கொண்டிருந்தார். பஸ் குலுங்கும் போதெல்லாம், கீழே விழுவது போல் தடுமாறினார். ஆண்கள் இருக்கும் பக்கம் பார்த்து, 'இந்த அம்மாவுக்கு யாராவது எழுந்து இடம் கொடுங்களேன்...' என்றார், கண்டக்டர்.

'உடனே, அந்த அம்மாவுக்கு வந்த ஆவேசத்தை பார்க்கணுமே... கண்டக்டரை பார்த்து, 'உன்கிட்ட உட்கார இடம் கேட்டேனா...' என்று, 'காச்மூச்' என்று, கத்த ஆரம்பித்தார். இதற்கிடையில், ஒரு ஆசாமி இறங்க, அந்த இடத்தில் சட்டென்று அமர்ந்து கொண்டு, கண்டக்டரை வசைபாடியபடியே வந்தார்.

'இதோ நம் அலுவலக வாசலில், நான் இறங்கும்போது தான், அவரும் இறங்கினார்.

'எனக்கு, ஏன் அவர் அப்படி கத்தினார், என்று தெரிந்து கொள்ளாவிட்டால், தலை வெடித்து விடும் போல் ஆயிற்று. மெல்ல அவரிடம் விசாரித்தேன்.

'அதற்கு அவர், 'பின்ன என்னங்க, என்னை பார்த்து, அம்மாங்கிறாரே...' என்றார்.

'உடனே நான், 'அந்த அம்மாவுக்கு யாராவது இடம் கொடுங்கன்னு தானே சொன்னாரு. அதுல என்ன தவறு இருக்கு?' என்றேன். 'அதுதான் எனக்கு கோபம். இப்ப நீங்களே சொல்லுங்க, எனக்கு என்ன வயசு இருக்கும்?' என்றார், அப்பெண்மணி.

'நான் என்ன அந்த அளவுக்கு விபரமில்லாத ஆளா? மனசுல என்ன தோணிச்சோ அதுல, பாதிய குறைச்சு, 'என்ன ஒரு, 20லிருந்து 25க்குள் இருக்கும்...' என்றேன். 'நீங்க தான் சார், ஜீனியஸ்...' அப்படின்னு சொல்லிட்டு, ரொம்பவும் சந்தோஷமா போயிட்டாங்க.

'எதுக்கு இதை சொல்ல வந்தேன்னா, முதுமையை நாம யாரும் ஆசைப்பட்டு கூப்பிடறதில்லை. அதுவா ஆசைப்பட்டு நம்மை நெருங்கி வந்துக்கிட்டிருக்கு. அதிலும், பெண்கள்ன்னா கொஞ்சம் சீக்கிரமா வந்துடுது. ஆண்களோட ஒப்பிட்டுப் பார்க்கறப்போ பெண்களுக்கு முதுமை சீக்கிரமே வந்துடுது...' என்றார்.

'இது ஒரு பொதுவான அபிப்ராயம். விஞ்ஞான ரீதியா இது உண்மையா?' என்றேன், நான்.

'இதை தெரிஞ்சுக்கிறதுக்காக, அமெரிக்காவில், யேல் பல்கலைக் கழகம், ஒரு ஆராய்ச்சி நடத்தியிருக்கு. அதில், சில முக்கியமான தகவல்கள் கிடைச்சிருக்கு.

'மனித உடம்புல வயசு ஆக ஆக, செல்கள் தொடர்ச்சியா இறந்துகிட்டே இருக்கும்.

'ஒரு குறிப்பிட்ட வயசு ஆகறப்போ, ஆண்களுக்கும், பெண்களுக்கும் புது செல் உருவாகிறது மிகவும் குறைந்து விடும். அந்த சமயத்துல தான் உடம்புல தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்; வயசான தோற்றம் வந்து விடும்.

'இந்த செல்களின் இயக்கம் ஆண்களை விட, பெண்களுக்கு சீக்கிரமாகவே குறைய ஆரம்பித்து விடுவதாக, சமீபத்துல நடந்த ஆராய்ச்சிகளிலிருந்து தெரிய வந்திருக்கு.

'குறிப்பா, எந்த வயசுல இந்த இயக்கம் குறைய ஆரம்பிக்குது என்பதை துல்லியமா சொல்ல முடியலை. இருந்தாலும், ஆண்களுக்கு, 35 வயசுல இது ஆரம்பிக்கும்ன்னா, பெண்களுக்கு, 30 வயசுலயே இந்த இயக்கம் குறையலாம்ன்னு கண்டுபிடித்து இருக்காங்க.

'ஒரே வயசு உள்ள, கல்யாணமான தம்பதியரை கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கும்போது, கணவனை விட, மனைவிக்கு வயசு அதிகமா தோணும்.

'பலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, குழந்தை பிறக்கறதனால தான், பெண்களுக்கு முதிர்ச்சி அதிகமாகுதுன்னு. அது சரியில்லையாம், குழந்தை பேறுக்கும், முதுமைக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லுது, இந்த ஆராய்ச்சி...' என்றார்.

'அது இருக்கட்டும், பெண்கள் உடம்புல சீக்கிரமா குறையற இந்த செல்களின் தன்மையை மேம்படுத்துறதுக்கு ஏதாவது வழியுண்டா?' என்றேன், நான்.

'புது ஹார்மோன் எதையாவது கண்டுபிடிச்சாதான், அது முடியும். 'ஜெனிடிக் கோடிங்' எனும் புதிய துறையில இது சம்பந்தமா ஆராய்ச்சி மும்முரமாக நடந்துக்கிட்டிருக்கு. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். அதனால, பெண்கள் வயதாகிறதே என்று கவலைப்பட வேண்டாம்...' என்று கூறி முடித்தார், நாராயணன்.

தலையில் அடித்தபடி சென்றார், லென்ஸ் மாமா.

நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது, எனக்கு.



கிரேக்க நாட்டில், டயோஜனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் ஒருநாள், ஆற்றங்கரை மணலில் சும்மா படுத்திருந்தார்.

இந்தியா மீது படையெடுக்க கிளம்பும் முன், ஞானியை சந்தித்தார், அலெக்சாண்டர்.

'நீ எங்கே போற, எதுக்காக போற?' என்று கேட்டார், ஞானி.

'நான், ஆசியா மைனரை வெல்லப் போகிறேன்...' என்றார், அலெக்சாண்டர்.

'அதுக்கப்புறம் என்ன செய்யப் போற?'

'இந்தியாவை வெல்வேன்!'

'அதுக்கப்புறம்?' என கேட்டார், ஞானி.

'உலகத்தையே வெல்வேன்!'

'உலகம் பூரா ஜெயிச்சதுக்கு பின், என்ன செய்யப் போற?' என, மறுபடியும் கேட்டார், ஞானி.

'அதுக்கப்புறம் நான் நிம்மதியா ஓய்வெடுப்பேன்...' என்றார், அலெக்சாண்டர்.

இந்த பதிலை கேட்டதும், ஆற்று மணலில் படுத்திருந்த ஞானி, சத்தம் போட்டு சிரிச்சார்.

கொஞ்ச துாரத்துல படுத்திருந்த தன் நாயைக் கூப்பிட்டு, 'பார்த்தியா இவர் சொல்றதை, உலகத்தை எல்லாம் ஜெயிச்சதுக்கு அப்புறம், இவர் ஓய்வு எடுக்கப் போறாராம். ஆனா, நாம ரெண்டு பேரும் இங்கே ஒரு சின்ன இடத்தை கூட ஜெயிக்காம நிம்மதியா ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கோம்.

'இதோ பாருப்பா... ஓய்வு தான் உன்னுடைய கடைசி லட்சியம்ன்னா, இந்த அழகான ஆற்றங்கரையில எங்களோட நீ இப்பவே சேர்ந்துக்கலாம். கடைசியில ஓய்வு எடுக்கறதுக்காக வேண்டி, ஏன் உலகம் பூரா துன்பத்தையும், துயரத்தையும் உண்டாக்கணும்... இப்பவே, இங்கேயே நீ ஓய்வு எடுக்கலாம்...' என்றார், ஞானி,

'நீங்க சொல்றது நியாயம் தான். ஆனால், நான் ஏற்கனவே கிளம்பியாச்சு. பாதியில் பின் வாங்க மாட்டேன்...'

'நீ, பாதி வழியில் திரும்ப தான் போற. ஏன்னா, பயணம் முடிந்தால், யார் தான் இதுவரை திரும்பி வந்துருக்காங்க?' என்றார், ஞானி.

ஞானி சொன்ன தீர்க்க தரிசனம் பலித்தது. நாடு திரும்பும்போது, பாதி வழியிலேயே இறந்து போனார், அலெக்சாண்டர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us