/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - நல்லதொரு குடும்பம்!
/
விசேஷம் இது வித்தியாசம் - நல்லதொரு குடும்பம்!
PUBLISHED ON : அக் 06, 2024

அக் - 11 சரஸ்வதி பூஜை
குடும்பம் என்றால் என்ன? விட்டுக் கொடுத்து வாழும் இடம். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பர். இப்படி ஒரு நல்ல குடும்பம் தான், தேவி சரஸ்வதியின் குடும்பம்.
படித்தால் மட்டும் போதாது. படித்ததை வாழ்வில் பின்பற்ற வேண்டும். சகல கலைகளையும் அறிந்தவள், சரஸ்வதி. அப்படிப்பட்டவளது குடும்பத்தில், விட்டுக் கொடுத்துப் போக சொல்லவா வேண்டும்! இதனால் தான், அவளைக் கல்விக்கே அரசியாக்கி அழகு பார்க்கிறது, ஆன்மிக உலகம்.
சரஸ்வதியின் கணவர் பிரம்மா பெற்ற சில சாபங்களால், அவருக்கு கோவில்கள் இல்லாமல் போனது. சிவனின் அடிமுடியைக் காணும் போட்டியில், பிரம்மாவும், விஷ்ணுவும் பங்கேற்றனர். அன்னப்பறவையாக மாறி, முடியைக் காணச் சென்றார், பிரம்மா.
வராக - பன்றி வடிவில், தரையை தோண்டி, அடியை காண சென்றார், விஷ்ணு. விஷ்ணுவால், அது முடியாததால் திரும்பி விட்டார். பிரம்மாவோ, முடியைக் கண்டு விட்டதாக பொய் சொன்னார். விளைவு, அவருக்கு வழிபாடே கிடையாது என சபித்து விட்டார், சிவன். இதனால், பிரம்மாவுக்கு கோவில்களே இல்லாமல் போனது.
பிரம்மாவுக்கு மூன்று சக்திகள். சரஸ்வதி, காயத்ரி, சாவித்திரி. சரஸ்வதி, அவரது நாக்கில் குடியிருக்கிறாள். ஏனெனில், படைப்புக் கடவுளான பிரம்மா, வேத மந்திரங்களை ஓதியே உயிர்களைப் படைக்கிறார்.
காயத்ரி என்பது, மந்திர சக்தி. காயத்ரி மந்திரம் என்று சொல்லும் மந்திரமே, மந்திரங்களில் மிக உயர்ந்தது.
மந்திரங்களில் ஜோதி வடிவில், மகத்துவ சக்தியாக குடியிருப்பவளே, சாவித்திரி என்னும் சக்தி. இந்த சக்திகளை பிரம்மாவின் துணைவியராக சித்தரிக்கின்றனர்.
இவர்களுக்கும் கோவில்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சிவபார்வதி, லட்சுமி நாராயணருக்கு ஏராளமான கோவில்கள் உண்டு. கணவருக்கே கோவில் இல்லாததால், தங்களுக்கு எதற்கு கோவில் என, மூன்று தேவியரும் பதிவிரதா தர்மத்தை கடைபிடிக்கின்றனர். மேலும், இவர்களின் மானச புத்திரரான நாரதருக்கும் கோவில்கள் கிடையாது.
தாய், தந்தைக்கே கோவில் இல்லாததால், தனயனான தனக்கு எதற்கு கோவில் என, ஒதுங்கிக் கொண்டார், நாரதர்.
ஏராளமான முனிவர்களுக்கு, கோவில்களில் சிலைகள் இருக்கும். ஆனால், நாரதர் சிலை என்பது அரிது தான். ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்ட ஒரே ஒரு சரஸ்வதி கோவில் மட்டும், திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் இருக்கிறது. வடக்கே, ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் பிரம்மாவுக்கு ஒரு கோவில் உள்ளது.
ஆக, கணவனுக்காக மனைவி விட்டுக் கொடுத்திருக்கிறாள். பெற்றோருக்காக, பிள்ளை விட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் தான் இந்த குடும்பம், கல்வியை உலகத்துக்கு போதிக்கும் தகுதியை பெற்றிருக்கிறது.
நாமும் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து, சரஸ்வதி பூஜையை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம்.
தி. செல்லப்பா