/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: பேசாமல் இருப்போமா!
/
விசேஷம் இது வித்தியாசம்: பேசாமல் இருப்போமா!
PUBLISHED ON : ஜன 26, 2025

'சும்மா இருப்பதே சுகம்' என்று, தன், 'திருமந்திரம்' நுாலில் சொல்கிறார், திருமூலர். அக்காலத்தில், அமைதியைத் தேடி காட்டுக்குள் போய் விடுவர், முனிவர்கள். இப்போது கூட, யாராவது வாயடித்தால், 'வளவளவென்று பேசாதே...' என்பர், பெரியவர்கள். 'சாப்பிடும் போது, என்ன பேச்சு வேண்டி கிடக்கு...' என்று குழந்தைகளை கண்டிப்பர், தாய்மார்கள்.
இதையெல்லாம், காரணம் இல்லாமல் சொல்லவில்லை. அதிகம் பேசப் பேச, நம் உடலில் பிராணசக்தி குறையும் என்கிறது அறிவியல். வள்ளுவர் கூட, இதனால் தான், 'யாகவாராயினும் நா காக்க...' என்றார்.
வியாழன்தோறும் மவுன விரதம் அனுஷ்டிப்பார், காஞ்சிப் பெரியவர். மகான்களுக்கு இது சாத்தியம். ஆனாலும், பாமரர்களும் சில நாட்கள் பேசாமல் இருக்க, சில விரதங்களை வகுத்துள்ளனர், முன்னோர். அதில், ஒன்று தான் மவுனி அமாவாசை விரதம்.
வடமாநிலங்களில், மாக மாதம், ஜன., 25 -- பிப்., 19ல் வருகிறது. இந்த மாதத்தில் வரும் அமாவாசைக்கு, மவுனி விரதம் என, பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த அமாவாசையன்று சாதுக்களும், பெரியவர்களும் மவுன விரதம் அனுஷ்டிப்பர். பணி செய்யும் இளைஞர்கள், அன்று விடுமுறை எடுத்து மவுனம் கடைப்பிடிப்பர். இந்நாளில், அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். சிவனையும், பெருமாளையும் வணங்குவர்.
காசியிலுள்ள கங்கையிலும் புனித நீராடுவர், ஏராளமான மக்கள். இந்நாளில், கங்கை நதி நீர், அமிர்தமாக மாறி விடும் என்பது ஐதீகம். அமிர்தம் என்பது சாகாவரம் தரக் கூடியது. சாகாவரம் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காமல், இறைவனுடன் கலந்து விடும் நிலை. பிறப்பென்ற ஒன்று இல்லாவிட்டால், பூலோகத்தில் எந்தக் கஷ்டமும் பட தேவையில்லை என்பது, இதன் பொருள்.
இந்நாளில், வியாசரின் தாயான சத்தியவதியின் கதை படிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், முற்பிறப்பில், இவள் பிதுர்களின் மானச புத்திரியாகப் பிறந்தவள். அதாவது, அவர்களின் மனதில் இருந்து உருவானவள். அச்சோதம் என்ற தெய்வீக தடாகத்தில் பிறந்ததால், அச்சோதை என பெயர் பெற்றாள்.
அச்சோதை என்றால், தெளிந்த நீரோடை போன்றவள் என பொருள். இவள், 8,000 ஆண்டுகள் பிதுர் தேவதைகளை நினைத்து தவமிருந்து, அளவில்லாத வரங்களைப் பெற்றாள். இருந்தாலும், தேவ நிலைக்கு மாறாக, ஒரு தேவனைக் காதலித்ததால், பூமிக்கு தள்ளப்பட்டாள். அவளே சத்தியவதி.
பராசர முனிவர் மூலம், வியாசரைப் பெற்றாள். அவரே வேதங்களை வகுத்தவர். மகாபாரதம் என்ற இதிகாசத்தை உலகுக்கு அருளியவர்.
தமிழகத்தில், மவுனி விரதம், தை அமாவாசை விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாசி மாத மகாளய அமாவாசையில், கூட்டமாக வந்த நம் முன்னோர், விடை பெற்று பிதுர்லோகம் செல்லும் நாள், இது. இந்நாளில், புனித தீர்த்தங்களில் நீராடி, தர்ப்பணம் கொடுத்து வழியனுப்ப வேண்டும். அவர்களுக்கு, உணவு படைத்து வணங்க வேண்டும்.
தி. செல்லப்பா