/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: ஜெயித்துக் காட்டுவோம்!
/
விசேஷம் இது வித்தியாசம்: ஜெயித்துக் காட்டுவோம்!
PUBLISHED ON : செப் 07, 2025

செப்., 13 - சனி ரோகிணி
சனி பகவானை நம்மால் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக முடியும் என்கிறது, தசரதரின் வரலாறு. ஆனால், அதற்கு சில தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும். சனி ரோகிணி வர இருக்கும் வேளையில், ஒரு வித்தியாசமான வரலாற்றை அறிந்து கொள்வோம்.
சனி ரோகிணி என்றால், சனிக்கிழமையும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாள். இது, சுபநாள் அல்ல. நிஜத்தில், ரோகிணியை சனிக்கு பிடிக்கும். ஏனெனில், இது கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம். மேலும், ரிஷப ராசிக்குரியது.
ரிஷப ராசியும், சனிக்குப் பிரியமானதே. ஆனால், சனீஸ்வரனின் இயற்கை குணத்துக்கு மாறாக, ரோகிணி நட்சத்திரத்தினரே நடந்தாலும் கூட, சனிக்குப் பிடிக்காது. ரோகிணி நட்சத்திரத்தின் இயற்கை குணம், அழகை அதிகமாக்க அலங்காரம் செய்தல், வாழ்க்கை வசதிகளை பெருக்கி கொள்ளுதல் ஆகியவை.
இது, சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் அழகானவன். அவனது குணமும் அழகு, ஆடம்பர வாழ்க்கை முதலியவற்றைப் பேணுவது தான். அதற்காக செல்வத்தைப் பெற பல வழிகளிலும் உதவுவார்.
ரோகிணி நட்சத்திரத்தினர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற தடை ஏதும் செய்ய மாட்டார், சனி. ஆனால், அது நல்ல வழியில் சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என்பதில், கண்டிப்பாக இருப்பார். கடுமையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும். தொழிலில் தர்மம் வேண்டும் என்பது, சனியின் குணம்.
ஒருமுறை, ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார், சனீஸ்வரன். அப்போது, அயோத்தியில் தசரதரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
தசரதரிடம், 'அரசே! ரோகிணிக்குள் நுழைய இருக்கிறார், சனி. இவ்வாறு நுழையும் காலத்தில், நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்படும். 12 ஆண்டுகளுக்கு இது நீடிக்கும்...' என்றார், ஜோதிடர் ஒருவர்; இதை ஆமோதித்தார், குல குரு வசிஷ்டர்.
சற்றும் யோசிக்கவில்லை, தசரதர்.
'நியாயமும், தர்மமும் மிக்க என் ஆட்சியில், ஒரு சாதாரண கிரகத்தின் தாக்குதலால், மக்கள் அவதிப்பட விட மாட்டேன், அந்த சனியை...' என்ற தசரதர், சனீஸ்வரனின் லோகம் நோக்கி தேரை செலுத்தினார்.
சனீஸ்வரனிடம், 'ஐயனே! நீங்கள் ரோகிணிக்குள் நுழையக் கூடாது. அப்படி நுழைந்தால், உலகமே பட்டினியால் சிரமப்படும்...' என, பணிவாக வேண்டினார். சனீஸ்வரனை குறித்து ஸ்லோகம் ஒன்றையும் சொன்னார்.
மகிழ்ந்த சனி, 'உங்களுக்கென கேட்காமல், ஒரு நாடு சுகமாக இருக்க அருள் செய்யுமாறு, என்னிடம் வரம் கேட்டீர்கள். அதற்காக என்னையும் எதிர்க்க துணிந்து விட்டீர்கள். உங்களைப் பாராட்டி, அதை வழங்குகிறேன்...' என்றார்.
வரும் செப்., 13ம் தேதி, ரோகிணியில் மீண்டும் நுழைகிறார், சனி பகவான். உலகில் எங்கெல்லாம் கெட்டவர்களின் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் தன் கை வரிசையைக் காட்டி விடுவார், சனி.
இந்த நம்பிக்கையுடன், சனி ரோகிணி நாளன்று, 'உம்மை எங்கள் அருகில் நெருங்க விடமாட்டோம். ஏனெனில், நாங்கள் உம்மிடம் கேட்பது, நல்ல மனதை! அதை தந்து விட்டால், நீர் தரும் துன்பங்களை நெருங்க விடாமல், ஜெயித்துக் காட்டுவோம்...' என, சவால் விடலாம்.
தி. செல்லப்பா