/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: சிங்கப்பெண்!
/
விசேஷம் இது வித்தியாசம்: சிங்கப்பெண்!
PUBLISHED ON : செப் 21, 2025

செப்., 22 - நவராத்திரி ஆரம்பம்
ந வராத்திரியில் நாம் முக்கியமாக வணங்கும் தெய்வங்கள் சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி. இதில் பார்வதியை, துர்க்கையாக வழிபடுகிறோம்.
சாந்த குணமுள்ளவளான பார்வதி அல்லது கவுரிக்கு கோபம் வந்து விட்டால், காளியாக, துர்க்கையாக மாறி விடுவாள். அசுரர்கள், தன் பக்தர்களை துன்புறுத்தினால், அவள் எந்த எல்லைக்கும் போய், அவர்களை அழித்து விடுவாள்.
துர்க்கையின் அன்பைப் பெற வேண்டும் என்ற எண்ணம், வேடனின் மகனான தனுவா என்ற சிறுவனுக்கு ஏற்பட்டது. துர்க்கையை முறைப்படி வழிபட வேண்டும் என்ற, தன் விருப்பத்தை, தந்தையிடம் சொன்னான்.
வேடனும் மகனை அழைத்துக் கொண்டு, ஒரு குருகுலத்துக்கு சென்றார். அக்காலத்தில், சிறுவர்கள் படிக்கும் பள்ளியை, குருகுலம் என்பர். அங்கேயே தங்கி, குருவுக்கு சேவை செய்வதுடன், பாடங்களையும் கற்று வருவர், மாணவர்கள்.
தன் மகனை குருகுலத்தில் சேர்த்து, துர்க்கை வழிபாடு குறித்து போதிக்குமாறு வேண்டினான், வேடன். குருவும், மற்ற மாணவர்களும் இதை கேட்டு சிரித்தனர்.
'அடேய், விலங்குகளை கொன்று அதன் மாமிசத்தைப் புசிக்கும் உன் மகனின் மண்டையில், இதுபோன்ற அறிவு சார்ந்த விஷயங்களெல்லாம் ஏறாது. அது மட்டுமல்ல, இங்கே படிப்பவர்கள் செல்வந்தர் வீட்டு, உயர்தர குழந்தைகள். நீயோ ஏழை வேடன். உன் மகனை எப்படி இங்கே சேர்க்க முடியும்?' என்றார்; அங்கிருந்த மாணவர்களும் வேடனின் மகனை கேலி செய்ய ஆரம்பித்தனர்.
மனமுடைந்து போனான், தனுவா. குருவின் காலில் விழுந்து கெஞ்சினான்.
'சரிடா... நான் சொன்னதை செய்தால், உன்னை குருகுலத்தில் சேர்க்கிறேன். நீ, துர்க்கா தேவியின் சிலையை செய்து வாங்கி வா. அதை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜித்து வா. உனக்கு எந்தளவு பூஜை செய்ய தெரிகிறது என்பதை தெரிந்து கொண்டு, உன்னை சேர்க்கிறேன்...' என்றார், குரு.
'குருவே! அற்பனாகிய எனக்கு, இந்த உலகிலுள்ள ஒரு சிற்பி கூட சிலை செய்து தரமாட்டான். வேண்டுமானால், வேடனின் மகனான நான், ஒரு சிங்கத்தின் உருவத்தை மண்ணில் வடித்து, அதற்கு பூஜை செய்கிறேன்.
'என் பக்தி உண்மையானால், அந்த துர்க்கா தேவியே, என் சிங்க சிலையில் எழுந்தருளி, சிங்கப் பெண்ணாக காட்சி தருவாள்...' என்றான், தனுவா.
இதைக் கேட்டு சிரித்தனர், குருவும், மற்ற சீடர்களும்; அதை பொருட்படுத்தாமல், அங்கிருந்து அகன்றான், தனுவா.
'அம்மா துர்க்கா! என் பக்தி உண்மையானால், நான் வடிக்கும் சிங்கத்தில் நீ எழுந்தருள வேண்டும்...' என, வேண்டி, சிங்கத்தின் சிலையை வடித்தான். அதையே நவராத்திரியின் ஒன்பது நாளும் வணங்கினான்.
தனுவாவின் பக்தியை மெச்சிய, துர்க்கா தேவி, நவராத்திரியின் கடைசி நாளில், அந்த சிங்கத்தின் மீது காட்சி தந்தாள். அத்துடன், குருகுலத்துக்கு பவனியாக சென்றாள்.
தனுவாவையும், சிங்கத்தில் அமர்ந்த துர்க்கையையும் கண்ட குரு, தனுவாவின் கால்களில் விழுந்து, அவனிடம் மன்னிப்பு கேட்டார்.
அன்று முதல், சிங்கத்தையே தன் வாகனமாக கொள்வதாக வாக்களித்தாள், துர்க்கை.
துர்க்கைக்கு சிங்க வாகனம் கிடைத்தது பற்றி, பல வரலாறுகள் உண்டு. அதில், இதுவும் ஒன்று. நவராத்திரி காலத்தில் உண்மையான பக்தியுடன் வணங்கினால், சிங்கப் பெண்ணான துர்க்கை, நமக்கும் காட்சி தருவாள்.
தி. செல்லப்பா

