/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: பாசக்கார திருவிழா!
/
விசேஷம் இது வித்தியாசம்: பாசக்கார திருவிழா!
PUBLISHED ON : ஜன 04, 2026

ஜன., 11 - பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி விழா
கூடாரவல்லி என்ற பெயரில் ஒரு விழா இருக்கிறது. ஒரு பெண்ணின் பெயர் போல தெரிகிறதே என்றால், அது உண்மை தான்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் உதித்த ஆண்டாளுக்கு, கூடாரவல்லி என்ற பெயர் பெரிதும் பொருந்தும். 'கூடாரை வெல்லும்' என்ற சொல்லில் இருந்து, இது பிறந்தது. பெருமாளைத் தவிர, கூடாத ஆசைகளை வென்றவள் என, இதற்கு பொருள் கொள்ளலாம். மார்கழி மாதம் ஆண்டாளுக்குரிய மாதம். இந்த மாதத்தில், பாவை விரதமிருந்த ஆண்டாளும், அவளது தோழிகளும் நல்ல கணவனை அடைய பிரார்த்தித்தனர். தன்னை கோகுலத்து கோபியாக கருதிக்கொண்ட ஆண்டாள், 'பெருமாளே! நீயே என்னைக் கைப்பிடிக்க வேண்டும்...' என, திருமாலைப் பிரார்த்தித்தாள்.
நம் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கு, ஏதாவது நேர்ச்சை செய்து கொள்வோம். அது போல், ஆண்டாளும் தன் திருமண ஆசை நிறைவேற ஒரு நேர்ச்சை செய்தாள்.
அவளது தந்தை பெரியாழ்வாரின் குலதெய்வம், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள். அவரிடம், 'பெருமாளே! நீ மட்டும் என்னை ஏற்றுக்கொண்டால், உனக்கு நுாறு பானை அக்காரவடிசலும், நுாறு பானை நிறைய வெண்ணெயும் படைப்பேன்...' என, வேண்டிக் கொண்டாள்.
அக்காரவடிசல் என்றால், அரிசியை பாலில் வேக வைத்து, அதிக அளவு சர்க்கரை, மிக அதிக அளவு நெய், முந்திரி, திராட்சை சேர்த்து செய்யும் மிக மிக இனிப்பான, பொங்கல்.
அவளது உண்மையான பக்தியை மெச்சி, கோரிக்கையை ஏற்றார், பெருமாள். 'ஸ்ரீரங்கத்துக்கு வா என்றார்...' அங்கு சென்ற அவள், ஜோதி வடிவில் பெருமாளுடன், கலந்தார்.
அவள் வேண்டிக் கொண்டபடி, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்குள், பெருமாளுடன் திருமணம் நடந்து, அவருடன் சென்று விட்டாள்.
இதை அறிந்தார், ராமானுஜர்.
'அம்மா ஆண்டாளே... உன் நேர்த்திக்கடனை நான் நிறைவேற்றுகிறேன்...' என்றவர், மார்கழி மாதம் 27ம் தேதி, அழகர்கோவில் சென்று, நேர்த்திக்கடனை நிறைவேற்றி, ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்தார். அன்று தான், திருப்பாவையின் 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...' என்ற பாசுரம் பாடப்படும். எனவே, ராமானுஜர் நேர்த்திக்கடனை நிறைவேற்றிய நாளுக்கு, கூடாரவல்லி திருநாள் என்ற பெயர் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்துாருக்கு வந்த, ராமானுஜரை, 'என் அண்ணனே வருக...' என வரவேற்றாள், ஆண்டாள். 'தங்கைக்கு சீர் கொடுப்பது அண்ணனின் கடமை. அதுபோல், என் திருமண சீராக, என் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தீர்...' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாள். ராமானுஜரும் நெகிழ்ந்து போனார். அன்று முதல் அவருக்கு, 'கோயில் அண்ணன்' என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
சகோதரிகளும், சகோதரர்களும் ஒருவருக்கொருவர் பரிசளித்து கொண்டாட வேண்டிய பாசத்திருநாள் இது. நம் முன்னோர்களால் நிறைவேற்ற முடியாமல் போன நேர்ச்சைகளையும், இந்த பாசக்கார திருநாளில் நிறைவேற்றலாம்.
தி. செல்லப்பா

