/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: பொங்கல் அம்மன்!
/
விசேஷம் இது வித்தியாசம்: பொங்கல் அம்மன்!
PUBLISHED ON : ஜன 11, 2026

ஜன.,14 - மகர சங்கராந்தி
'சங்கராந்தி' என்றால், இடம் பெயர்தல் என்று பொருள். சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் எல்லா நாளும், சங்கராந்தி தான். அது, மேஷ ராசியில் இருந்தால், சித்திரை மாதம். ரிஷப ராசிக்கு மாறினால், வைகாசி. இந்த மாறும் நாட்களையே நாம் தமிழ் மாதப்பிறப்பாக கொள்கிறோம். பிற மாநிலத்தவர்கள் அவரவர் மொழிக்கு தகுந்தாற் போல், இந்த மாதங்களுக்கு பெயர் சூட்டியிருக்கின்றனர்.
சூரியன், கடக ராசிக்கு வந்தால் அது, ஆடி மாதம். இந்த மாதத்தில் இருந்து மார்கழி வரையான காலம், தட்சிணாயணம்.- அதாவது, சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலம். இந்த மாதங்கள், பிதுர் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்றவை. சூரியன், மகர ராசிக்கு வந்தால் அது, தை மாதம். தை முதல் ஆனி வரையான காலம், உத்ராயணம். இது, சூரியனின் வடக்கு நோக்கிய பயண காலம். இந்த மாதங்கள் தெய்வ வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்ற காலம்.
சூரியன், தை முதல் தேதியில் மகர ராசியில் அடியெடுத்து வைக்கும் நாள், மகர சங்கராந்தி என்னும் புண்ணிய காலம். தமிழகத்தில் இது, பொங்கல் நாளாகவோ, அதற்கு முந்திய நாளாகவோ இருக்கும். மகர சங்கராந்தி நாளில் தான், ஐயப்பன், ஜோதியாகக் காட்சி தருவார். அதனால் தான் இதை, மகர விளக்கு என்பர்.
இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவதால் பாவங்கள் விலகும். இந்த புண்ணிய காலத்தை பாரதம் முழுவதும் வரவேற்பர். சூரியனால் தான் பயிர் பச்சைகள் விளைகின்றன. தன்னை உக்கிரமாகவும், மேகத்துக்குள் மறைந்து குளிர்ச்சியாகவும் மாற்றி, பயிர்களை விளைய வைப்பது சூரியன்.
இத்தகைய அரிய சக்தி கொண்ட சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதே, பொங்கல் விழா. மற்ற மாநிலங்களில் இதை, மகர சங்கராந்தி என்பர்.
இந்த நிகழ்வுக்கு, சங்கராந்தி என, பெயர் வர காரணம் உண்டு. பிரம்மனால் படைக்கப்பட்ட சங்கராசுரன், கிங்கராசுரன் என்னும் அரக்கர்கள், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், தேவர்களை துன்புறுத்தினர். அவர்களை அழிக்க, பார்வதியும், கங்காதேவியும் முடிவெடுத்தனர். அதாவது, ஆணவ மிக்க அவர்களை, சொர்க்கத்துக்கு இடம் பெயர செய்வதே, இந்த தேவிகளின் நோக்கம். அதன்படி பார்வதிதேவி, சங்கராசுரனை அழித்தாள். கங்காதேவி, கிங்கராசுரனை வதைத்தாள். இந்த நாளை, 'கரிதின்' என்றனர். அதாவது, கரிநாள். இதனால், பொங்கலை ஒட்டிய நாட்கள் கரி தினங்களாக உள்ளன. இந்த இரு தேவிகளையும் இணைத்து, சங்கராந்தி தேவி என்பர். இவளுக்கு வடமாநிலங்களில், முதலை வாகனம் தரப்பட்டுள்ளது.
தங்கள் ஆணவம் இடம் பெயர்ந்து, நல்லெண்ணெங்கள் குடிபுகுந்த நாள் என்பதால், இதை சங்கராந்தியாகக் கொண்டாட, தேவியிடம் வேண்டினர், இரு அசுரர்களும். இது நடந்தது, சூரியன் மகர ராசியில் நுழைந்த நாள் என்பதால், மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பது சமைக்கிற நாள் மட்டுமல்ல... பொங்கி வரும் ஆணவத்தை நல்லெண்ணெம் என்னும் நீரால் குளிர வைக்கும் நாளும் கூட!
தி.செல்லப்பா

