தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: ஆறுநாள் ரகசியம்!

விசேஷம் இது வித்தியாசம்: ஆறுநாள் ரகசியம்!

விசேஷம் இது வித்தியாசம்: ஆறுநாள் ரகசியம்!


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 22 ஆனி உத்திரம்

சிதம்பர ரகசியம் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆறுநாள் ரகசியம் பற்றி தெரியுமா?

நடராஜருக்கு, ஆண்டில் ஆறு நாட்கள், திருமஞ்சனம் என்னும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். சித்திரை மாத திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் நடப்பவை, நட்சத்திரம் சார்ந்தவை. ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் நடப்பவை, திதி சார்ந்தவை.

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்த ஏன், இந்த ஆறு நாட்களை தேர்ந்தெடுத்தனர்?

சிவன் உஷ்ணமானவர். நெற்றிக்கண் கொண்டவர். இதனால் தான், சிவாலயங்களில் லிங்கத்திற்கு மேல், துளையிட்ட ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, லிங்கத்தின் மேல் விழும்படி செய்வர். இதற்கு, தாரா அபிஷேகம் என, பெயர். தாரா என்றால், சொட்டு சொட்டாக என்று, பொருள்.

சிவனின் வடிவங்களில் ஒன்றான, நடராஜர், மிகவும் உக்கிரமானவர். அவரை அவ்வப்போது சாந்தப்படுத்த வேண்டும். இதில், மிக முக்கியமான நாள், மார்கழி திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரம், ராகுவுக்குரியது. இதை, ஆக்னேய கிரகம் என்பர். ஆக்னேயம் என்றால், நெருப்பு சார்ந்தது என்று பொருள்.

ஏற்கனவே, வெப்பத்தில் தகிக்கும், நடராஜர், இந்நாளில் இன்னும் உக்ரமாவார். எனவே, அவரை சாந்தப்படுத்த, அன்று அதிகாலையே சிறப்பு அபிஷேகம் செய்வர். மார்கழி குளிருடன் சேர்ந்து, இதை அனு பவிக்கும், சிவன், மனம் மகிழ்ந்து ஆனந்த தாண்டவமாடுவார். மார்கழி திருவாதிரை விழா கொண்டாடுவதன் நோக்கமும் இது தான்.

மார்கழி திருவாதிரைக்கு அடுத்து, முக்கியத்துவம் பெறுவது, ஆனி உத்திரம். உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம், சூரியன். சூரியன் கடும் வெப்பம் கொண்டது. இந்நாளிலும், நடராஜரின் உக்கிரம் அதிகரிக்கும். கோடை காலம் முடிந்து, இளவேனிலாக மாற்றம் பெறும் மாதம், ஆனி. கோடை உஷ்ணத்தில் கொதித்துப் போயிருக்கும், நடராஜருக்கு, ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் அபிஷேகம் செய்வர். நடராஜர் தலமான சிதம்பரத்தில் இந்த விழா மிக விசேஷம். இந்த இரண்டு அபிஷேகங்கள் மட்டுமே காலையில் நடத்தப்படும்.

ஆனால், சித்திரை மாத திருவோணம் மற்றும் மூன்று வளர்பிறை சதுர்த்தசி திதி நாட்களில் மாலையில் அபிஷேகம் நடக்கும். இதற்கும் காரணம் உண்டு. திருவோண நட்சத்திரத்திற்குரிய கிரகம், சந்திரன். சதுர்த்தசி திதி பவுர்ணமிக்கு முதல் நாள் வரும். அன்றும், சந்திரனுக்கே முக்கியத்துவம். இந்நாட்களில் சந்திரன் குளிர்ந்த கதிர்களை வீசும். அந்த குளிருடன் அபிஷேகமும் செய்யும் போது, நடராஜர் வெப்பம் தணிந்து மகிழ்வுடன் இருப்பார்.

இக்காரணங்களால் தான் இந்த ஆறு நாட்களை, நடராஜரின் அபிஷேகத்திற்கு தேர்ந்தெடுத்தனர், நம் முன்னோர்.

நடராஜர் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் அவரே அதிபதி என்பது இதன் மூலம் நீருபணமாகிறது.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us