PUBLISHED ON : ஜூலை 09, 2023

இன்று, தோழிகள் ராணியும், திலகாவும் விடுமுறை என்பதால், மதிய உணவு வேலையை சீக்கிரமாக முடித்தாள், கலா. அலுவலக வேலையும் சுலபமாக, சற்று முன் முடியவே, வீட்டுக்கு போன் செய்தாள்.
'ஒர்க் ப்ரம் ஹோம்' முறையில் வேலை செய்து வரும் கணவர் சந்திரன் போனை எடுத்ததும், ''சொல்லு கலா... ராத்திரிக்கு சப்பாத்தியா, அதுக்கு உருளைக் கிழங்கு வேகப் போடணுமா?'' என்றான்.
''இன்னிக்கு அரிசி உப்புமா பண்ணும்மான்னு, முகில் கேட்டான். அதையே பண்ணிடலாம். உங்க, 'மீட்டிங்' என்ன ஆச்சு, சந்திரன்?''
''பிரமாதம், சுலபமா போச்சு. சென்னை கிளை சாதனைகள பார்த்து, பாட்னா கிளை ஆட்கள் அசந்து போயிட்டாங்க. வெரி லவ்லி டே, கலா!''
''மகிழ்ச்சி சந்திரன். எனக்கும் இன்னிக்கு வேலை முன்னதாவே முடிஞ்சுடுச்சு. நல்ல படமா, 'செலக்ட்' பண்ணி வைங்க. முகில் கூட சேர்ந்து பார்க்கலாம்.''
''சரி, கலா... ஒரு விஷயம், ரெண்டு நாள் முன், பூ வாங்கும்போது, உங்க சித்தியை பார்த்தேன்.''
''அப்படியா... நானும் பார்த்து ரெண்டு வாரமாச்சுப்பா. எல்லாம் ஓ.கே., தானே?'' என்றாள்.
கிராமத்துப் பெண்மணி, சித்தி. சித்தப்பா மறைந்த பிறகு குழந்தைகளுடன் சென்னை வந்தார். மகள் சங்கீதா, நல்ல பெண். பொறுப்பாக படித்து, பொறியியல் முடித்து, வேலைக்குப் போகிறாள்.
தம்பியின் படிப்பு, சித்தியின் இதய நோய், வாடகை, செலவு என்று, அந்த சிறிய தோள்களில் பெரிய பாரங்களைச் சுமக்கிறாள்.
''சித்தி கொஞ்சம் சோர்வா இருந்தாங்க, கலா. 'எல்லாரும் வீட்டுக்கு வாங்கம்மா'ன்னு கூப்பிட்டேன். 'வர்றோம், முடிஞ்சா கலாவை வரச்சொல்லுங்க தம்பி, பார்த்து நாளாச்சு'ன்னு சொன்னாங்க. வர்ற வழிதானே, போயிட்டு வா,'' என்றான்.
''நிச்சயமா போறேன்,'' என்றாள், கலா.
நான்கரை மணி, வானத்தின் இளம் சூடு மற்றொரு சமயமாக இருந்தால், கலாவை கவர்ந்திருக்கும். சைக்கிள்களில் கூட்டமாகச் செல்லும் அரசு பள்ளி பெண் குழந்தைகளின் அழகும் ஈர்த்திருக்கும். தெரு ஓரங்களில் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கும் குப்பைமேனிக் கீரைகள் வரவேற்றிருக்கும்.
இன்று மனம் ஏதோ கனத்தது. சித்தி, சென்னைக்கு வர அவளும் ஒரு காரணம். படிப்பு, வேலை, திருமணம், குடித்தனம், குழந்தை என்று, சென்னை அவளுக்களித்திருந்த அழகிய வாழ்க்கை, தன் மகளுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான், சித்தியை இங்கே இழுத்து வந்தது.
கலாவுக்கும் அது தெரியும். சென்ற ஆண்டு கடைசி செமஸ்டர், கலா வீட்டில் தான் வந்து படித்தாள், சங்கீதா. ரிசல்ட் வந்து, வேலைக்குப் போன பிறகு, கலாவுக்கு மனது லேசாகி விட்டது. இனி, குடும்பம் மேலே வந்து விடும் என்கிற நிம்மதி.
இரண்டு வாரங்களாக கொஞ்சம் சளித் தொந்தரவு இருந்ததால், சித்தி வீட்டுப் பக்கமே போகவில்லை, கலா.
வண்டியை நிறுத்தி, இரும்புக் கதவு திறந்து, அழைப்பு மணியை அழுத்துவதற்குள், சித்தியே வந்து விட்டாள்.
''வா வா கலா... என்னவோ தோணித்து இன்னிக்கு நீ வருவேன்னு. வாடாம்மா,'' என்று கைபற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.
''சாரி சித்தி. இப்பல்லாம் இந்த, 'கொரோனா' வேற வேற ரூபத்துல வருதாம். அதான் சளி, இருமல் எல்லாம் முழுசா குணமாகட்டும்ன்னு வரல. எல்லாரும் எப்படி இருக்கீங்க?'' என்றபடி கைகழுவி உட்கார்ந்தாள்.
''முதல்ல, இந்த காபியை குடி,'' என்று, கையில் கொடுத்து, எதிரில் உட்கார்ந்தாள், சித்தி.
''ஏதோ இருக்கோம். என்ன சொல்ல?''
''ஏன் சித்தி, 'டல்'லா பேசற? காபி சூப்பர். சரி சொல்லு, குணா எப்படி படிக்கிறான்?''
''எல்லாத்துலயும், 90 தான். இவன் தான், லீடர். இன்னிக்குக் கூட ஏதோ சயின்ஸ் கண்காட்சியாம்.''
''சூப்பர் சித்தி. உன் கால் வலி?''
''இப்ப பரவால்ல. நீ சொன்ன ராபர்ட் டாக்டர் கொடுத்த மாத்திரை நல்லா கேட்குது.''
''சந்தோஷம் சித்தி... சங்கீதா வேலை எப்படி போகுது. புது சுடிதார், குர்த்தின்னு வாங்கறாளா. பொண்ணுங்க ஆசையே டிரஸ், செப்பல், ஹாண்ட் பேக், ரெஸ்டாரன்ட் தானே?'' என்றாள்.
மவுனமாக இருந்தாள், சித்தி.
''என்ன சித்தி?''
''புடிக்கலையாம். அவ வேலையை விடப் போறாளாம், கலா.''
''ஆறு மாசத்துக்கு முன்புதானே அந்த வேலையை விட்டா? இப்போ போகிறது ரொம்ப நல்ல கம்பெனி ஆச்சே. இதையும் விடப்போறாளா? மை குட்னஸ்... என்ன சித்தி?'' என்றாள்.
''தெரியலடா... என்கிட்ட மனம் விட்டு எதையும் சொல்ல மாட்டேங்கிறா. போன்ல தோழிங்ககிட்ட 'கிசுகிசு'ன்னு பேசுவா. அதான் உன்னை வரச்சொன்னேன். நீ பேசு கொஞ்சம்,'' என்றார்.
''சரி சித்தி... வரட்டும், என்னன்னு கேட்கிறேன்.''
''அவ ரெண்டு நாளா வேலைக்கே போகலை. அறையில் தான் இருக்கா. கூப்பிடவா?'' என்றார்.
''இல்ல சித்தி... நானே போய் பார்க்கிறேன்,'' என்று அறைக்கதவைத் தட்டி, உள்ளே நுழைந்தாள், கலா.
தலைக்கு எண்ணெய் பூசியபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள், சங்கீதா.
கலாவை பார்த்ததும், ''அக்கா... நீங்களா? வாங்கக்கா,'' என்றாள்.
''சங்கீதா, எப்படி இருக்கே? முடி அடர்த்தியா வளர்ந்திருக்கே. இது என்ன ஸ்பெஷல் தைலமா?'' என்று கேட்டவாறு அமர்ந்தாள்.
''இல்லக்கா. ஏதோ ஒண்ணு,'' என்றாள்.
''முகம் கூட பளபளன்னு இருக்கு. தயிர் மாஸ்க் போட்டிருக்கியா?''
''அய்யோ இல்லக்கா. ஒரு உதவி பண்றீங்களா?'' என்றாள்.
''சொல்லு!''
''மாமாகிட்ட சொல்லி, ஏதாவது வேலை வாங்கி தரச்சொல்லு. நீயும் எனக்காக, 'டிரை' பண்ணு,'' என்றாள்.
''சரி, பண்ணிடலாம். இந்த வேலை என்ன ஆச்சு?''
''பிடிக்கலேக்கா!''
''சரி... போன வேலை?''
''அதுவும் தான்!''
''ஏன்னு காரணம் சொல்லு... அப்பதானே புது வேலை தேடும்போது, சரி பண்ணிக்க முடியும்?''
பெருமுச்சு விட்டாள். விழிகள் தரை பார்த்து நிமிர்ந்தன.
''சொல்லு, நான் தானே... எதுவானாலும் பார்த்துக்கலாம்,'' என்று, தலையை வருடினாள், கலா.
''எல்லாம் இந்த ஆம்பிளைங்கதான் அக்கா,'' என்று திடீர் சீறலுடன் வார்த்தைகள் வெடித்தன.
குரலை செருமியபடி, ''பழைய கம்பெனியில ஆதித்தன், பாபுராஜ்ன்னு ரெண்டு பேர். தப்பா பேசுறது, பார்க்கறது, சிரிக்கறதுன்னு ஒரே, 'டார்ச்சர்!' உடை பற்றி கமென்ட், வேலை சொல்லித்தர்ற சாக்குல நெருக்கமா வந்து உட்கார்றது. ரெட்டை அர்த்த ஜோக் அடிக்கிறது. மனசு வெறுத்துப் போய், இந்த கம்பெனிக்கு வந்தேன்.
''இங்கேயும் ஒருத்தன் அதே மாதிரி, 'டீம் லீடரா' இருக்கான். நான் புதுசு, அதுவும் ஜூனியர். 'சாயந்தரம் கொஞ்ச நேரம் இருந்து, வேலையை கத்துக்கோ. லீவு நாள்ல வந்து கத்துக்கோ'ன்னு பிரச்னை பண்றான்.
''அதுமட்டுமில்லா, 'டீம்'ல இருக்கற ஆளுங்களை குறைச்சுட்டான். நானும், ஒரு மேடமும் தான். அவங்களுக்கு கால் சரியில்ல, 'ஸ்பெஷல் பர்மிஷன்'ல, 4:00 மணிக்கே போயிடுவாங்க. தனியா இவன் கூட உட்கார்ந்து வேலை பார்க்கும்போது, மாரடைப்பு வர்ற மாதிரி இருக்கு.
''வேணாம் அக்கா இந்த வேலை. சம்பளம் நல்லா வருது தான். ஆனால், தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டியதா இருக்குக்கா. பிடிக்கல, ப்ளீஸ் அக்கா... எனக்கு நீதான் வேற வேலை வாங்கித் தரணும்,'' என்றாள்.
''சரி வா, தலை வாரி விடறேன்,'' என்று, சீப்பை வாங்கியவள், ''திரும்பு. சங்கீதா கண்ணு... நல்லா புரியுது. நானும் இதுபோன்ற சங்கடங்களை எல்லாம் கடந்து வந்தவள் தான். ஏன், வேலைக்கு போற எல்லா பெண்களும் சந்திக்கிற பிரச்னைகள் தான் இது. 'ஆக்குபேஷனல் ஹசார்ட்ஸ்!'
''ஆனால், தீர்வுகளும் இருக்கு. இடம் மாறிக்கிட்டே இருக்கிற தீர்வு இல்ல அது. தற்காலிக நிவாரணமும் இல்ல, நிரந்தரத் தீர்வு. அலுவலகம் மட்டுமில்ல, பெண்களின் வாழ்க்கைக்குமான தீர்வு...
''வெளில இறங்கி நடக்கிறோம். தெருவெல்லாம் குப்பையா இருக்கு. அய்யய்யோன்னு திரும்பி உள்ளேயா வந்துடறோம்? செருப்பு மாட்டிக்கிட்டு போறோம். காத்தெல்லாம் கருப்பு புகையா இருக்கு. 'மாஸ்க்' போட்டு தப்பிக்கிறோம்.
''உலகம் அப்படித்தான் இருக்கும், கண்ணு. போற வழியில நிறைய சங்கடங்கள் இருக்கும். அதுக்காக போகாம இருக்க முடியாது. புதுசா வேலைக்கு போற இடத்துலேயும், பத்து கெட்டவன் இருந்தா, நாலு நல்லவனும் இருப்பான். பார்த்து அறிஞ்சுக்கணும். எப்பவும் விழிப்புணர்வோட, தைரியமா இருக்கணும்.
''படிப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காய் இல்ல. அது வாழ்க்கைக்கும் உபயோகிச்சிக்கணும். கையில் மிளகாய், மிளகு ஸ்பிரே வெச்சுக்கோ. தற்காப்பு எப்படி செய்யணும்ன்னு நிறைய வீடியோக்கள் பார்த்து கத்துக்கோ. வம்பு பண்ண வர்றவன்கிட்ட கண்ணை பார்த்து பேசு.
''அரசாங்கமே பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்திருக்கு. பயந்து ஓட ஓட, நாய்கள் துரத்தும். நின்று, திரும்பி நேருக்கு நேர் பார்த்தால், ஓடிப்போயிடும். எல்லா பிரச்னைகளும் அப்படித்தான். நாமதான் உறுதியா நின்னு சமாளிக்கணும், கண்ணு...
''எல்லா இடத்துலயும் நல்லதும், கெட்டதும் கலந்து தான் இருக்கும். அதனால, இடத்தை மாத்தாம, தன்னம்பிக்கையா, பலமா, உறுதியா நம்மளைத்தான் மாத்திக்கணும். சரியா?'' என்றாள், கலா.
கலாவை பார்த்து சிரித்தாள். நம்பிக்கையின் ஒளி, சங்கீதாவின் விழிகளில் நட்சத்திரம் போல தெரிவதை பார்த்து, மனம் நிறைவாக உணர்ந்தாள், கலா.
வி. உஷா
