PUBLISHED ON : ஏப் 10, 2011

பகவான், எங்கும் இருக்கிறார். நம் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம் கண்ணுக்கு அவர் தெரிந்தாலும், நம் முன் பிரசன்னமானாலும் பிரச்னைகள் தான் உண்டாகும்; அதனால்தான், அவர், நம் கண்களுக்கு தெரியாமலே, இந்த உலகை வழி நடத்துகிறார்.
'உன் நாராயணன் எங்கே இருக்கிறார்...' என்று, பிரகலாதனிடம் கேட்டான் இரண்ய கசிபு. அதற்கு, 'அவர் எங்கும் இருக்கிறார்; அவர் இல்லாத இடமே இல்லை...' என்றான்
பிரகலாதன். 'இந்த தூணில் இருக்கிறாரா?'
எனக் கேட்டு, அந்த தூணை, இரண்ய கசிபு வெட்ட, அதிலிருந்து, நரசிம்மமாக வெளியே வந்தார் நாராயணன்.
ஸ்ரீராமனை காண வேண்டுமென்று கபீர்தாசரிடம் சொன்னார் ராமதாசர். அவருக்கு, தாரக மந்திரத்தை உபதேசித்து, ஒரு சமாராதனை செய்யும்படி சொன்னார் கபீர்தாசர். 'அப்படி செய்தால், அங்கே பகவான் வருவாரா?' என்று கேட்டார் ராமதாசர். 'நிச்சயம் வருவார்; ஆனால், நாம் தான் கண்டு கொள்ள வேண்டும்...' என்றார் கபீர்தாசர்.
ராமதாசரும், ஒரு சமாராதனைக்கு ஏற்பாடு செய்தார். சமையல், பட்சண வகைகளை எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்து, பகவானை எதிர்பார்த்திருந்தார்; ஆனால், பகவானை காணவில்லை. அங்கே ஒரு எருமை மாடு வந்து, சமையலறையில் நுழைந்து, அங்கிருந்த அன்னம், பாயசம், பட்சணம் முதலியவைகளை தின்று, அதையெல்லாம் கீழே உருட்டி விட்டு, அதன் மேல் படுத்துப் புரண்டது.
ராமதாசரும், மற்றவர்களும் பெரும்பாடுபட்டு, அதை விரட்டி, வெளியே துரத்தி விட்டனர். நெடு நேரம் காத்திருந்த ராமதாசர், கபீர்தாசரிடம் சென்று, “பகவான் வர வில்லையே... என்ன காரணம் தெரியவில்லையே...' என்றார்.
அதற்கு, கபீர் தாசர் சிரித்துக் கொண்டே, 'பகவான் தான் வந்தாரே... நீர் அதை புரிந்து கொள்ளாமல், அடித்து விரட்டி விட்டீர்களே... அது, என் முன்னால் வந்தது; அதன் மீது நீங்கள் அடித்த காயங்கள் கூட இருந்தது. நான் அதை தடவி கொடுத்து, காயத்தின் மீது பச்சிலை தடவி அனுப்பினேன்...' என்றார்.
'அப்படியா... நாங்கள் அடித்து விரட்டியது ஒரு எருமை மாடு அல்லவா! அது சமையலறையில் புகுந்து, எல்லாவற்றையும் நாசம் செய்தது; அதனால், அதை அடித்து விரட்டினோம்...' என்றார்.
'அது தான் உங்களுக்கு புரியாத புதிர்; தெரியாத விஷயம். எருமையாக வந்தது பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே உங்கள் சமாராதனையை கண்டு மகிழ்ந்து, அவர் அதை சாப்பிட ஆசையோடு வந்தார்; வந்தவர் எருமை ரூபத்தில் வந்தார். நீங்கள் எருமையை தான் பார்த்தீர்கள்; அதன் உண்மை ரூபமான ராமச்சந்திர பிரபுவை பார்க்கவில்லை; ஏமாந்து விட்டீர்கள்...' என்றார் கபீர்தாசர்.
— இப்படியெல்லாம் நிறைய கதைகள் உண்டு. பகவான் எங்குமிருக்கிறார். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும். எங்கும், எதிலும் கடவுள் இருக்கிறார் என்றும், எல்லாமே கடவுளின் அம்சம் தான் என்ற ஞானம் இருந்தால், அவரை எந்த ரூபத்திலும் காணலாம்.
'இருக்கிறார்' என்பவருக்கு, அவர் இருக்கிறார்; 'இல்லை' என்பவருக்கு, அவர் இருப்பது தெரிவதில்லை; அவ்வளவு தான்.
இருட்டில் இருக்கும் பொருள்; கண்ணுக்கு தெரிவதில்லை, வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம். அந்த வெளிச்சம் தான் ஞானம்; இருட்டு தான் அஞ்ஞானம்; பொருள் தான் கடவுள். அஞ்ஞானம் என்ற இருட்டை, ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால், கடவுள் என்ற பொருளை காணலாம். முடியுமா பாருங்களேன்!
***
ஆன்மிக வினா-விடை!
துளசி மாடத்தை, ஆண்கள் வழிபடலாமா?
துளசி மாடத்தை, ஆண்களும் வழிபடலாம்.
***
வைரம் ராஜகோபால்
