/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
புலியை, பூனையாகப் பார்க்க வேண்டுமா?
/
புலியை, பூனையாகப் பார்க்க வேண்டுமா?
PUBLISHED ON : ஜூன் 23, 2013

தாய்லாந்தின், கஞ்சன்பாரி பகுதியில், 'வாட்பா வாங்காதபா' என்ற புத்தர் கோவில் உள்ளது. இதை புலிக் கோவில் என்றும் சொல்கின்றனர்.
கடந்த 1994ல் அமைக்கப்பட்ட இக்கோவிலில், பிரார்த்தனை நிமித்தம் ஒரு புலிக் குட்டி விடப்பட்டது. ஆனால், அது இறந்து போனது. அதன்பின், பலர் அன்பளிப்பாக புலிக்குட்டியை வழங்க ஆரம்பித்தனர். இன்று, இந்த கோவிலில் நூறு புலிகள் உள்ளன. கோவில் நிர்வாகமே லாவோஸ் நாட்டிலிருந்து சில புலிக்குட்டிகளை வாங்கியுள்ளது. புத்த துறவிகளும், தன்னார்வ தொண்டர்களும் இப்புலிகளை பராமரித்து வருகின்றனர். ஒரு பக்கம் பக்தி, பிரார்த்தனை. மறுபுறம் புலிகள் நடமாட்டம். ஆனால், இந்த புலிகள் இங்கு பூனையாக நடமாடுகின்றன. துறவிகள் உதவியுடன் அதை தொடலாம்; புட்டி பால் புகட்டலாம்; அது தூங்கும் போது, மடியில் தூக்கிவைத்துக் கொஞ்சலாம்; இதற்கு, துறவிகளும், தொண்டர்களும் உதவுவர்.
இதை, கோவில் சரணாலயம் என்றும் கூறலாம். இதற்குள் நுழைய, ஒரு கண்டிஷன் உண்டு. கண்ணைப் பறிப்பது போன்ற வண்ணங்களில், ஆடைகளை அணிந்து வரக் கூடாது. மீறி வந்தால், அனுமதி இல்லை. வாசலில் விற்கும் மென்மையான வண்ணம் கொண்ட, உடைகளை வாங்கி, அணிய வேண்டும்.
இங்கு பெரும்பாலும், சீன புலிகளே உள்ளன. பெங்கால் புலி ஒன்றும், சிங்கப்பூர் புலி ஒன்றும் உள்ளன. புலி தவிர, மான், ஒட்டகம், எருமை மற்றும் குரங்குகளும் உள்ளன.
'இங்கு புலிகள் துன்புறுத்தப்படுகின்றன. அதனால், தடை செய்ய வேண்டும்...' என பல சர்வதேச வனவிலங்கு சேவை நிறுவனங்கள் வலியுறுத்தின. ஆனால், அது எதுவும் எடுபடவில்லை. தாய்லாந்திலிருந்து 38 கி.மீ., பயணம் செய்தால், இந்த கோவிலை அடையலாம்.
புலியை, பூனையாகப் பார்க்க வேண்டுமா? இந்த கோவிலுக்கு வாங்க!
— ஜோல்னா பையன்.