தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிரச்னை தீர வேண்டுமா?

பிரச்னை தீர வேண்டுமா?

பிரச்னை தீர வேண்டுமா?


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகத்தியரின் சீடர் தேரையர்.

'அப்பா, தேரையா... கடும் முயற்சி செய்து முக்கால் வைத்தியனாக ஆகி விட்டாய். முழு வைத்தியனாக ஆவாயா என்று பார்க்கலாம். இன்னும் சில நாட்கள் இங்கேயே இரு...' என்றார், அகத்தியர்.

'அப்படியே குருதேவா...' என்றார், தேரையர்.

ஒருநாள், தேரையரை அழைத்த அகத்தியர், 'சீடனே... எனக்கு கண் வெடிச்சான் மூலிகை கொஞ்சம் வேண்டும். எடுத்து வந்து தருகிறாயா...' என, கேட்டார்.

எடுத்து வருவதாக கூறி, ஆசிரம வாசலைக் கடந்தவரின் கண்கள், அவரை அறியாமலே கண்ணீர் சிந்தின. சற்று துாரம் சென்று, ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் மான்தோலை விரித்து, அதன் மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்தார்.

அம்பிகையின் திருவடி முதல் திருமுடி வரை, செக்கச் சிவந்த கோலத்தில் இருப்பதாக கற்பனை செய்து, மனமுருகி தியானம் செய்யத் துவங்கினார்.

சிவந்த திருவடிகள், சிவந்த ஆடைகள், சிவந்த ஆபரணங்கள், சிவந்த திருமேனி கொண்டவளாக அம்பிகையைத் தியானித்தால், தீராத பிரச்னைகள் கூடத் தீர்ந்து விடும், என்பது ஐதீகம்.

அவருக்கு அம்பிகை காட்சி கொடுத்தாள்.

அம்பிகையை வணங்கி, 'அம்மா, வரம்பில்லாமல் சோதனை வளர்ந்து கொண்டே போகிறது, தாயே... கண் வெடிச்சான் மூலிகை கேட்டிருக்கிறார், குருநாதர்.

'கண் வெடிச்சான் மூலிகைக் கொடியை உடைத்தால், உடனே அதிலிருந்து கிளம்பும் புகையால், கணப்பொழுதில் கண்கள் அவிந்து போய் விடும். குரு வார்த்தையை மீறவும் கூடாது. அருள் செய் அம்மா...' என வேண்டினார், தேரையர்.

'தேரையா, கவலைப்படாதே... கண் வெடிச்சான் மூலிகையை நான் உடைத்துத் தருகிறேன்...' என்று ஆறுதல் கூறிய அம்பிகை, அந்த மூலிகை கொடியை ஒடித்து, தேரையரிடம் அளித்தாள். அதை அகத்தியரிடம் ஒப்படைத்தார்.

'தேரையா... தேறி விட்டாய். என் மாணவர்களில் சிறந்தவனாக ஆகி விட்டாய். இன்று முதல் நீ, உடல் மற்றும் உயிர் நோய் தீர்ப்பவனாகவும் உயர்ந்து விட்டாய். இனி, நீ முழு வைத்தியன்.

'மருத்துவ தொழில் புனிதமானது. அதில் ஈடுபடுபவர்களுக்குப் பொறுமை தேவை. அது உன்னிடம் இருக்கிறது. நான் வைத்த கடுமையான தேர்வுகள் அனைத்திலும் நீ தேர்ச்சி பெற்று விட்டாய்...' என்று, வாழ்த்தினார்.

அத்துடன், எந்தெந்த மலைகளில் எந்தெந்த மூலிகைகள் கிடைக்கும்; அவற்றின் தனித்தன்மை என்ன; எதனுடன் எதைச் சேர்த்தால் பலன் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களைத் தேரையருக்குச் சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார், அகத்தியர்.

குருவிடம் விடைபெற்ற தேரையர், மானிடர்களின் உடல் மற்றும் உள்ளத்து நோய்க்கு மருத்துவம் பார்த்து, மனிதகுலம் தழைக்க பாடுபட்டார்.

கடவுளின் கருணை இருந்தால், தன் பிரச்னை மட்டுமல்ல, மற்றவர்களின் பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்பதை விளக்கும் கதை இது.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us