தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத, உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத, உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத, உணவுகள்!


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில், 'ப்ரிஜ், மைக்ரோவேவ் ஓவன்' போன்ற நவீன மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டன. விளைவு, தேவையானபோது சமைத்து சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவை சமைத்து, 'ப்ரிஜ்'ஜில் வைத்துக் கொள்கிறோம்.

விரும்பும்போது, அதை மீண்டும், 'மைக்ரோவேவ் ஓவனி'லோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது, வழக்கமாகி விட்டது. எப்போதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும் தான், இதற்கு காரணம்.

'உணவுகளை இப்படி சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துகள் குறைந்து போய் விடும். அதுவே, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக மாறி விடும்.

'மேலும், இது, 'புட் பாய்சனிங்'ல் துவங்கி, இதய நோய், புற்று நோய் வர, வழி வகுத்து, உயிருக்கே உலை வைத்து விடும்...' என, எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த வகையில்    மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத, உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிக்கனை சூடுபடுத்தும்போது, இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால், 'புட் பாய்சன்' ஆக மாற காரணமாக அமைந்து விடும்.

எனவே, இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஒருமுறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாக சாப்பிட வேண்டும் என்றால், 'சாண்ட்விச்' செய்து சாப்பிடலாம்.

கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது, நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது.

கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

முட்டை

அதிக புரோட்டீன் நிறைந்த உணவு, முட்டை. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, எக்காரணம் முன்னிட்டும், முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது.

காளான்

காளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது, விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாதம்

நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஓர் உணவு பொருள், அரிசி. சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, 'புட் பாய்சன்' ஆக மாறி விடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து, 'ப்ரிஜ்'ஜில் வைத்து, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு.

அப்படி செய்யும்போது, சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நச்சுத் தன்மை உள்ளதாக மாறி, வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதை திரும்ப திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. இதனால், அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இது, புற்றுநோய், இதய நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமையும்.

எஸ். மேரி ரஞ்சிதம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us