PUBLISHED ON : செப் 10, 2023

முருங்கை காயை சமையலுக்கு பயன்படுத்துவது போல், முருங்கை இலையை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால், மற்ற கீரைகளை போலவே அதிகமான சத்துக்களைக் கொண்டது, இது. கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைய உள்ளன.
அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை, ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம்.
கொதிக்கும் நீரில் முருங்கை கீரையை போட்டு, ஐந்து நிமிடத்திற்கு பிறகு, உப்பு, மிளகு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி கிடைத்த சூப்பை, தினமும் காலையில் பருகி வந்தால், அனீமியா, ஜலதோஷம், ஆஸ்துமா குறைவதை காணலாம்.
சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி. மேலும், ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும்.
சுத்தமான புதிய முருங்கை இலைகளை மிக்சியில் சுற்றி சாறு எடுத்து, அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் நீரில் மிதக்க விடவும். சிறிது நேரம் கழித்து முருங்கை சாற்றின் தெளிவை மட்டும் வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து கலக்கவும். குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்து வர, எலும்பு நன்கு வளர்ச்சி பெற்று திடமாகும்.
பாலுாட்டும் பெண்கள், தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால், அதிகமாக பால் ஊறும். மேலும், அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு, முருங்கை கீரை உன்னத மருந்து.
முருங்கை சாறுடன், எலுமிச்சம் பழ சாற்றை கலந்து, முகத்தில் பூசி உலர்ந்த பின், நீரில் கழுவி வந்தால், பருக்கள் மறைந்து, முகம் பொலிவு பெறும். மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி, பயன் பெறலாம். காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால், வலி குறையும்.
