PUBLISHED ON : ஏப் 14, 2013

ஏப்., 14 - சித்திரை விஷு
தமிழ் புத்தாண்டின் முதல்மாதம் சித்திரை. ஆண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதிமொழி ஏற்பர். இந்தாண்டு வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். கடந்த ஆண்டை விட, தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த வேண்டும். பதவி உயர்வை அடைந்தே தீர வேண்டும். இப்படியாக லாபம் கருதி, அந்த உறுதிமொழிகள் அமையும். ஆனால், 'எனக்கு கிடைக்க வேண்டிய உயர்ந்த லாபம் ஒன்றை, உலகத்துக்காக அளிக்கிறேன்...' என்ற தியாக மனப்பான்மை, யாருக்காவது வருமா! வந்ததே... ஒரு மாமுனிவருக்கு. உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், உள்ளத்தில் உயர்ந்த அந்த முனிவரே அகத்தியர்.
கயிலை மலையில், சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடாயிற்று. தென்னகமே திரண்டு அங்கே போயிற்று. இதனால், பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இந்த இடத்தில், ஒரு சந்தேகம் எழும். உருண்டையான உலகத்தில் உயர்வு தாழ்வு என்பது ஏது? தட்டையாக இருந்தால் தானே இது சாத்தியம் என்று கேட்பர்.
ஒன்றை சிந்திக்க வேண்டும். இந்தக் காலத்தில் நடக்க வில்லை என்பதற்காக, எந்தக் காலத்திலும் நடக்கவில்லை என, எதையும் சொல்ல முடியாது. டயனோசர் என்ற பெரிய விலங்கு பற்றி பேசுகிறோம். நம் கோவில் தூண்களில், யாழி என்ற வித்தியாசமான விலங்கைப் பார்க்கிறோம். அவை இப்போது இல்லை; அப்போதும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்! மனித முகமும், மிருக உடலும் கொண்ட புருஷாமிருகம் என்ற ஒன்று இருந்ததாகக் கூட புராணங்களில் இருக்கிறது. உயிரினங்களில் மட்டுமல்ல, பூகோள ரீதியாகவும், பூமி எப்படியோ மாறியிருக்கிறது. உலகம் என்பது அழியும் பொருள். சில யுகங்களுக்கு முன், இப்படி நிகழ்ந்திருக்கக் கூடும். அதையே முன்னோர் எழுதி வைத்துள்ளனர். இன்று நாம் எழுதி வைப்பதை, நம் எதிர்கால தலைமுறையினர் படித்து, இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா என்று ஆராய்ச்சி செய்வது இயல்பே. அதற்காக, இன்று நடந்த உண்மையை எதிர்காலத்தில் பொய் என்று சொன்னாலும் அது உண்மையே.
அயோத்தியில் பிறந்த ராமர், ராமேஸ்வரம் வரை வந்ததாகப் படிக்கிறோம். எங்கள் ஊருக்கு கிருஷ்ணர் வந்தார், முருகன் வந்தார், பிள்ளையார் வந்தார் என்று சம்பந்தமில்லாத இடங்களுக்கு கூட வந்ததாக தல புராணங்களில் எழுதியிருப்பர். அவ்வாறு சொல்வதன் மூலம், அந்த புண்ணிய தெய்வங்களின் பாதம், தங்கள் ஊரில் பட்டதாக பெருமைப்படுவர். இதுபோன்ற விஷயங்களில், மக்கள் பெறுகின்ற திருப்தியைக் கெடுத்து, அவர்களுக்கு புத்தி கலக்கத்தை உண்டாக்கக் கூடாது என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லி இருக்கிறார்.
இருக்கட்டுமே! அகத்தியர் என்ற மாமுனிவர், அவரவர் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் கயிலையில் தரிசிக்க வேண்டிய திருமணக் காட்சியை சென்னை துவங்கி, கோடியக்கரை போய், தெற்கே இருக்கிற பொதிகைமலை அடிவார பாபநாசம் வரை இழுத்து வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்.
அந்தக் கதை முக்கியமல்ல! அதில் புதைந்து கிடக்கும் சாராம்சமே முக்கியம். கடவுளின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது. 'அந்த அரிய சந்தர்ப்பத்தை நீ விட்டுக் கொடுத்தால், நீ போகுமிடமெல்லாம் என் திருமணக்காட்சியைக் காட்டுவேன்...' என்று ஒரு பரீட்சை வைத்தார் சிவன். உலக மக்களெல்லாம் அந்த காட்சியைக் கண்டு மோட்சம் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்
துடன், தான் பெற வேண்டிய அரிய காட்சியை தியாகம் செய்தார் அகத்தியர்.
அதுமட்டுமா... உலகத்தில் ஏழை, பணக்காரர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று, ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன; இன்றும் இருக்கின்றன. இவையெல்லாம் நீங்கி, உலகமக்கள் சம அந்தஸ்து பெற வேண்டும் என்ற உயர்ந்த தத்துவமும் இந்நிகழ்ச்சியில் புதைந்து கிடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில், சித்திரை விஷுஅன்று இரவில், சிவனின் கயிலைத் திருமணக்காட்சியை, அகத்தியர் காணும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நல்ல நாளில், பிறருக்காக தியாகம் செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம்.
***
தி. செல்லப்பா

