PUBLISHED ON : ஜன 12, 2020

உலகின் தென் துருவத்தில் உள்ள, மக்கள் யாரும் வசிக்காத, ஐஸ் கட்டிகளால் சூழப்பட்ட அண்டார்டிகாவிற்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்த விஷயத்தை, உறவிலும், நட்பிலும் சொன்னபோது, யாரும் நம்பவில்லை. ஆனால், உற்சாகமாக வழியனுப்பினர். அதிலும், 'ஹேபிடேட்' என்ற சிறுதானிய உணவகம் நடத்தி வரும், இவர் மனைவி பார்வதியின், 'சப்போர்ட்' மிக அதிகம்.
எப்படி பார்த்தாலும், 55 ஆயிரம் கி.மீ., பயணம் செய்ய வேண்டும்; கண்டம் விட்டு கண்டம் பறக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக கையில் காசு வேண்டும். நான் ஒன்றும் பணக்காரன் இல்லை. சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். வாங்குகிற சம்பளம், வீட்டு தவணைக்கும், குடும்பத்திற்கும், குழந்தைகள் படிப்பிற்கும், பெற்றோர் பராமரிப்பிற்குமே சரியாக இருக்கிறது.
ஆனால், இந்த காரணத்தை எல்லாம் சொல்லி, எனக்கான வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை, தனியாக உலக சுற்றுப்பயணமும், குடும்பத்துடன், உள்நாட்டு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு விடுவேன். அங்கோர்வாட் கோவில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, தென் கிழக்கு ஆசிய நாடான காம்போடியாவிற்கும்; 1,000 ஆண்டுகள் பழமையான மரங்களின் பிண்ணனியில் நடைபெறும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காண, ஆப்ரிக்காவின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவான, மடகாஸ்கருக்கும்...
பிரமிடு பார்ப்பதற்காக, மத்திய கிழக்கு நாடான எகிப்திற்கும், விண்ணில் தெரியும் பச்சை ஒளியை பார்ப்பதற்காக, வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்திற்கும்; எவரெஸ்ட், 'பேஸ் கேம்'பிற்கும் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள, மசை மாராவிற்கும் சென்று வந்துள்ளேன்.
உடம்பிலும், மனதிலும் தெம்பு இருக்கும்போதே, அண்டார்டிகாவை பார்த்து விட வேண்டும் என்பது, என் கனவு. ஆனால், அதற்கான பட்ஜெட் தான் அநியாயத்திற்கு பயமுறுத்தியது. இதற்காகவே ஒரு ஆண்டு திட்டமிட்டதில், எல்லாம் சாத்தியமாகியது.
சென்னை-, டில்லி-, ரோம்,- சாண்டியகோ (சிலி)- மற்றும் புண்டோ அரினா என்று, மாறி மாறி விமானத்தில் நீண்ட துாரம் பறந்த பின், புண்டோ அரினாவில் இருந்து, கப்பலில் அண்டார்டிகா நோக்கிய, பயணம் துவங்கியது.
கப்பலில் ஏறியதுமே, ஆர்வம் காரணமாக, 'அண்டார்டிகா எப்படி இருக்கும்...' என்று கேட்டேன்.
'அண்டார்டிகா நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு முன், பெரிய பிரச்னை இருக்கிறது. பசிபிக் பெருங்கடல், தென் கடல், அட்லாண்டிக் கடல் கலக்குமிடத்தை, 'பிரேக் பாசஜ்' என்போம். இந்த இடத்தை கடக்க, இரண்டு நாளாகும். எந்த நேரமும் கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
நுாற்றுக்கணக்கான கப்பல்கள் இப்பகுதியில் காணாமல் போயிருக்கிறது. அது ஒன்று தான் பிரச்னை...' என்று விவரித்தபோது, வயிற்றில் புளியை கரைத்தது.
'மிட்னாஸ்டோல்' கப்பல்!
அண்டார்டிகாவிற்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும், கப்பலில் தான் செல்ல வேண்டும்.
நான் சென்றது, 'மிட்னாஸ்டோல்' என்ற கப்பல். அது, கப்பல் இல்லை; தனி உலகம். பெரிய நுாலகம், உணவகம், கருத்தரங்கு கூடம், விளையாட்டு தலம் என்று, எல்லாமே இருந்தது.
அண்டார்டிகாவின் முக்கிய இடங்கள் வந்ததும், கப்பலில் இருந்து, சிறிய படகுகள் மூலமாக கரைக்கு அழைத்துச் செல்வர். அங்குள்ள பென்குயின்களை படம் எடுத்து முடிந்ததும், சிறிய படகிலேயே திரும்ப அழைத்து வருவர்.
பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். நடந்து செல்லும் ஐஸ் பாதை, எப்போது வேண்டுமானாலும் உடைந்து, குளிர்ந்த கடலுக்குள் இழுத்துக் கொள்ளும் என்பதால், அந்த மாதிரி இடங்களாக இல்லாமல், பார்த்து அழைத்துச் சென்றனர்.
ஏழு நாட்கள் கப்பலிலேயே இருந்தாலும், பயணியரை பல்வேறு நிகழ்வுகள் மூலம் போரடிக்காமல் வைத்துக் கொண்டனர். அவர்களது நிகழ்ச்சிகள், வெறும் பொழுது போக்காக இல்லாமல், சுற்றுச்சுழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்த அபாயகரமான கப்பல் பயணத்தில், ஒருமுறை செல்வதற்கே வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால், ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை பயணம் மேற்கொள்ளும், இக்கப்பலில் பணிபுரிந்தவர்களில் சிலர், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
— தொடரும்
எல். முருகராஜ்