PUBLISHED ON : ஜன 26, 2020

அமைதியான, அழகான அண்டார்டிகா கடல், திடீரென ஒருநாள், தன் சுயரூபத்தைக் காட்டியதாக, கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.
நாங்கள் பயணம் செய்த கப்பல், பொதுவாக, ஒரு குறிப்பிட்ட துாரத்தில் நின்றுவிடும்; அங்கு இருந்து சிறிய கப்பலில் கரைக்கு செல்வோம். அங்கு சென்று, அழகான பென்குயின்களை அருகில் பார்த்து ரசிப்போம்; கூட நின்று, படம் எடுத்துக் கொள்வோம். சுத்தமான, சுகமான காற்றை ஆழமாக இழுத்து விடுவோம்; இரு கைவிரித்து, 'ஆகா என்ன அற்புதம்...' என்று மகிழ்வோம்.
மொத்தம் ஏழு இடங்களில், இது போல இறக்கி ஏற்றுவதாக ஏற்பாடு. முதல் இடத்தில், எவ்வித பிரச்னையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அடுத்த இடத்தில் எப்போது இறக்கி விடுவர் என்ற ஆர்வமே ஏற்பட்டது.
இரண்டாவது இடம், கொஞ்சம் உள்ளே போக வேண்டி இருந்தது. சிறிய படகில் இருந்து கரையில் இறங்கியதும், பனியில், பூட்ஸ் கால் புதைய நடந்து மகிழ்ந்தோம்; சிலர், பனியில் சறுக்கி செல்லும் சாதனத்தை எடுத்து வந்து, அதில் விளையாடி மகிழ்ந்தனர்.
எல்லாம் நன்றாகத்தான் நடந்தது. திடீரென வானம் இருண்டது; எங்களை அழைத்து வந்த கப்பல் ஊழியர்களின் முகமும் இருண்டது. அதுவரை அமைதி காத்து வந்த கடல், கொந்தளிக்க ஆரம்பித்தது.
'ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் கப்பலுக்கு திரும்புங்கள்...' என்று உத்தரவு வந்தது. அடித்துப் பிடித்து, சிறிய படகில் ஏறி, உட்கார்ந்தோம். அதற்குள், மழை போல பனி விழத் துவங்கியது. இது மாதிரி பயணத்திற்கு ஏற்ற, விசேஷ உடை வாங்கி அணிந்தோம்.
நாங்கள் வாங்கி சென்றது போதாது என்று, கப்பலில் இருந்தும், ஒரு கனமான உடை கொடுத்தனர். மொத்த உடம்பில் நான்கு லேயருக்கு கனமான உடை போட்டிருந்தோம். ஆனால், விழுந்த பனியின் காரணமாக, நான்கு லேயரையும் தாண்டி குளிர், குருத்து எலும்பு வரை ஊடுருவி, நடுக்கம் ஏற்படுத்தியது.
ஒரு வழியாக கப்பலுக்கு திரும்பவும், கடல் கொந்தளிப்பு அதிகரிக்கவும் சரியாக இருந்தது. 20 அடி உயரத்திற்கு கப்பலையே புரட்டி போட்டுவிடும் அளவிற்கு கடல் கொந்தளிப்பு இருந்தது. கொஞ்ச நேரத்தில், 'நானா கொந்தளித்தேன்...' என்பது போல, மீண்டும் அமைதியானது, கடல்.
கப்பல் ஊழியர்களும், 'இது கூட இல்லைன்னா, அப்புறம் என்ன அண்டார்டிகா...' என்பது போல, சகஜமாக சிரித்தனர்.
என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, வாரமலர் இதழில் வாய்ப்பு கொடுத்த, அந்துமணிக்கும், நான் சொல்ல சொல்ல தொகுத்து எழுதிய கட்டுரையாளர், எல்.முருகராஜுக்கும் நன்றிகள்.
எங்கேயுமே முதல் முறை போகும்போது தான், நிறைய தயக்கமும், தடைகளும் ஏற்படும். அதன்பின், அந்த இடம் நமக்கு பழக்கமாகி விடும்; அண்டார்டிகாவும் அப்படித்தான்.
இன்னொரு முறை அண்டார்டிகா போகலாம் வருகிறீர்களா என்றால், முதல் ஆளாக நான் வருவேன். காரணம், பயண அனுபவம் அப்படி.
அந்த அனுபவத்தை நீங்களும் பெற தயங்காதீர். கவலைகளையும், கடமைகளையும் காரணம் காட்டி, உங்கள் சந்தோஷத்தை குறைத்துக் கொள்ளாதீர். நம் அனைவருக்கும் சந்தோஷம் தரும் விஷயம் உண்டு என்றால், அது சுற்றுலா தான்.
அண்டார்டிகாவைப் பொறுத்தவரை, அழைத்து செல்லும் டிராவல் ஏஜன்சிகள், நம்மை மிக கவனமாக பார்த்துக் கொள்வர். ஒரு பிரச்னை என்றால், ஹெலிகாப்டர் வைத்து கூட மீட்டு விடுவர்.
அங்கே எப்போது போகலாம், எப்படி போகலாம், என்ன பட்ஜெட்டில் போகலாம் என்பதற்கு வழிகாட்ட, நான் தயார். என் மொபைல் எண்: 96771 21966. அலுவலக நேரத்தில், அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ramananselvam@gmail.com என்ற, மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
— முற்றும்