தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (17)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (17)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (17)


PUBLISHED ON : ஆக 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கா கிறிஸ்தவ நாடு என்றாலும், அங்கே எல்லாருமே இன்புற்றிருக்க முடிகிறது. மசூதிகளுக்கு பஞ்சமில்லை. ரம்ஜான், ஈத், முறையான தொழுகை என, எல்லாம் சுமூகம்.

அவரவர்களின் காரியத்தை, அவரவர்கள் பார்த்துக் கொண்டு போகும் கலாசாரம் இருப்பதால், பிறரின் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை.

தீபாவளி, பொங்கல், நவராத்திரி, ஹோலி என, அமெரிக்கா முழுக்க, கோவில்களில் கோலாகலமாக இருக்கும்.

நியூஜெர்சியில், குஜராத்தியினர் வாழும் பகுதியில், ஒரு சாலை முழுக்க இந்திய கடைகள்!

அங்கே நவராத்திரி சமயம், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும், போலீஸ் வேன்கள் மின்னல் கொளுத்திக் கொண்டு, சாலையை மறித்திருந்தன. சாலைக்குள் திருவிழாக் கூட்டம்!

ஏதும் பிரச்னையா என்று பார்த்தால், நவராத்திரிக் கொண்டாட்டம். ஆட்டம், பாட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பாம்!

இரவு முழுக்க, தசரா பண்டிகையின் உற்சவம், உற்சாகம்! அவர்களும் எதிர்ப்பதில்லை; நம் ஆட்களும் சளைக்காமல் வேஷம் கட்டி ஆடுகின்றனர்.

'நவராத்திரி வந்து விட்டாலே, எங்களுக்கு சாப்பாட்டு பிரச்னை எழுவதில்லை...' என்கிறான், பேச்சிலராக இருக்கும் நண்பன் அருண்.

'அக்கம் பக்கம் கோவில்களில், கம கமவென வெண் பொங்கல், புளியோதரை என வழங்குவர். போதும் போதாதற்கு, எப்போதும் யாராவது அன்னதானம் செய்து கொண்டிருப்பர். அதனால், எங்களையும் அறியாமல், அந்த நாட்களில் பக்தி முத்தி விடுவதுண்டு!'

நியூஜெர்சி ஏறக்குறைய, இந்திய பகுதி போலத்தான். அதனாலோ என்னவோ, நகரம் முழுக்க அழுக்கு. தெருக்களில் குப்பைக் கூளங்கள்! பராமரிப்பில்லா சாலைகள், இடிந்து காரை பெயர்ந்த கட்டடங்கள்.

'நமக்கு எங்கு போனாலும், இந்த அவலம் தானா? அமெரிக்காவில் கூட இப்படி ஒரு நகரமா?' என்று வியப்பு தோன்றுகிறது. இந்தியப் பகுதி என்பதால் அலட்சியப்படுத்துகின்றனரா...

இல்லை... எவ்வளவு பராமரித்தாலும் நம்மாட்கள் இப்படி மாற்றி விடுகின்றனரா? தெரியவில்லை. மொத்தத்தில் சாக்கடை, கொசுக்கடி நிறைந்த அசுர நகரம்!

இந்திய பகுதிகளில் சரவணபவன், உடுப்பி உணவகங்களுக்கு, அங்கே ஏக வரவேற்பு.

தமிழ் பத்திரிகைகளெல்லாம் பெரும்பாலும், 'ஆன்-லைன்' தான்! ஆனால், 'தென்றல்' எனும் மாத இதழ், வண்ணமயமாய் கலை, இலக்கியத் தரத்துடன் அங்கே வினியோகிக்கப்படுகிறது.

கோவில்கள் என்று பார்த்தால், அமெரிக்கா முழுக்க அங்கங்கே அமர்க்களம்! எதிர்ப்புத் தெரிவிக்காமல், அரசும் இடங்களை ஒதுக்கித் தருகிறது.

நல்ல பசுமையான, மரங்கள் அடர்ந்த பகுதியில், இடத்தைச் செப்பனிட்டு, பளிங்குப் பதித்து, கோவில்களை உருவாக்கி இருக்கின்றனர்; உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயின், வெங்கடாசலபதி, சிவா - விஷ்ணு, முருகன் என, இஷ்ட தெய்வங்களுக்குப் பஞ்சமில்லை. அதுவும், அமெரிக்காவில் தெலுங்கர்கள் அதிகம் என்பதால், வெங்கடாசலபதி எல்லா இடங்களிலுமே, செழிப்பாய் இருக்கிறார்.

மெரிலாண்ட் பகுதியில், அடுத்தடுத்து சிவா - விஷ்ணு, முருகன் கோவில்கள் பிரபலம்.

முருகன் எங்கும், கோவனாண்டி தான் போலிருக்கிறது. அங்குள்ள குருக்கள் கூட, 'வசூல்' போதாமல், ஏக்கமாய் இருப்பது தெரிந்தது. முருகன் கோவிலில் நிகழ்ச்சி அரங்கம், சாப்பாடு என, எல்லா வசதிகளும் உண்டு.

ஆடிக் கிருத்திகை பண்டிகைகளுக்கெல்லாம், நம்மவர்கள், 'ஆன்-லைனில்' முன்பே, பதிவு செய்து பணம் செலுத்தி விட்டால், அபிஷேகங்கள் அதுபாட்டிற்கு நடக்கும்.

நாங்கள் போன போது, குழந்தை ஒன்றிற்கு அங்கே மொட்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

விசாரித்த போது, அந்தத் தம்பதியர் இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கிரீன் கார்டுக்கு மனு போட்டு, அது எந்த நேரமும் வந்து விடலாம் என்பதால், ஊருக்குப் போக முடியாத சூழல்.

'குழந்தைக்கு முடி நிறைய வளர்ந்து, கண்ணை மறைக்கிறது. வேறு வழியில்லாததால், சாம்பிளுக்குக் கொஞ்சம் முடி எடுத்து வைத்துவிட்டு, இங்கே மொட்டை போடுகிறோம்...' என்றனர்.

குலதெய்வம் எங்கிருந்தால் என்ன... நம் கலாசாரம் காக்கப்படுவதில் மகிழ்ச்சி. இந்த மொட்டை வைபவத்திற்குத் தேதி குறித்து, குருக்கள் மந்திரித்து, அருகிலுள்ள பகுதியில் இதற்காகவே சிறப்புச் சலூன்கள் உள்ளன.

அங்குள்ள அக்காக்கள், மிக நேர்த்தியாக, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டி, நோகாமல் மழித்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு காது குத்து கூட, ஜோராய் நடக்கிறது. பொற்கொல்லர்கள் போல, டாக்டர்களே நவீன ஆயுதங்களுடன் வந்து துளையிடுகின்றனர்.

மெரிலாண்ட் சிவா - விஷ்ணு கோவில், ரொம்ப விஸ்தீரணம். ஏக பளபளப்பு! கட்டடங்கள், கார் பார்க், பளிங்குத் தரை எல்லாமே அற்புதம்!

வஞ்சனையில்லாமல் விநாயகரில் ஆரம்பித்து, அத்தனை சாமிகளையும் அங்கு வைத்திருக்கின்றனர். பிரசாதம் மட்டுமின்றி, மலிவு விலையில் கிடைக்கும் நம் சிற்றுண்டி, நாவுக்கும், வயிற்றுக்கும் சுகம்.

சனி, ஞாயிறு என்றால், அந்தந்தப் பகுதியிலுள்ளவர்கள், கோவிலுக்கு வந்து தரிசித்து, அங்கேயே சாப்பாட்டையும் முடித்து கிளம்புகின்றனர்.

அதுவும், பிரிட்ஜ் வாட்டர் ஏரியாவில் உள்ள விஷ்ணு கோவில், மிகப் பிரபலம். அங்கு பூஜை செய்யும் குருக்களுக்கு, பக்கத்திலேயே சகல வசதிகளுடனும், 'குவார்ட்டர்ஸ்' கட்டி வைத்திருக் கின்றனர்.

நவராத்திரி கொலு, தகதக காளை, நாகம் என பிரமிக்க வைக்கிறது. கோவிலைச் சுற்றிக் காண்பித்த பின், நண்பர்கள் சரவணனும், அங்கே நியூயார்க் பிரபல வங்கியில் பணிபுரியும் அசோக்கும், 'இங்கே வா... உனக்கு ஒரு விசேஷம் காட்டுகிறோம்...' என்று அங்கிருந்த ரெஸ்டாரென்டிற்கு அழைத்துப் போயினர்.

டோக்கன் வாங்கி, வழக்கம் போல க்யூ!

'அங்கே பார் கிச்சனில்...'

'பெரிசு பெரிசாய் தோசைக்கல்! இட்லி, வடை, பூரி என வாசம் தூக்குது!'

'அதில்லை...தோசை போடும் ஆளைப் பார்!'

'அட, அது அமெரிக்கன்!'

அவன் என்ன லாவகமாய் தோசை வார்க்கிறான்! பிரமாதமாய் கையில் தட்டி, துளையிட்டு வடை! மசால் கமகமக்கிறது. அடை, அவியல், பிரியாணி, பொங்கல், ஆப்பம், இடியாப்பம் - குருமா என்று, நம் அயிட்டங்கள் எல்லாவற்றையும், அவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

நாமோ, எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டு, பீசா, பர்கர், சப், மேக்டொனால்ட் என அலைகிறோம்!

— தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us