/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
வெட்டிப்பேச்சாளர்களைக் கட்டிபோட என்ன வழி?
/
வெட்டிப்பேச்சாளர்களைக் கட்டிபோட என்ன வழி?
PUBLISHED ON : நவ 08, 2015

ஒரு செயலை, சத்தமின்றி சாதிப்பதில், சில நன்மைகள் இருக்கின்றன.
நம் வளர்ச்சியை, முட்டுக்கட்டை போடுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள். எவருக்கும், ஒரு கெடுதலைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றவும் செய்யாது.
சிலர் நம்புகின்றனரே... கண்ணேறு! (திருஷ்டி) அது நிகழவும் நிகழாது.
அதையும், இதையும் கேட்டு விட்டு, ஆளுக்கு ஆள், மாற்றி மாற்றி பேசி, நம்மைக் குழப்பி விடுகின்றனரே... இதுவும் நின்று போகும்.
சத்தமின்றி சாதித்த வெற்றிக்காக, உங்கள் அடக்கத்திற்கும், எளிமைக்கும் ஒட்டு மொத்தமான பாராட்டும், குவியலாகக் கிடைக்கும்.
'எங்களுக்கும் சொல்லித் தாருங்களேன்...' என்று வியக்கிற சிஷ்யர் கூட்டம், உங்களைச் சுற்றி உருவாகும்.
எங்கள் வட்டத்தில் ஓர் அப்பாவி நண்பர், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். மனைவிக்கு சற்று அடங்கினவர். சாதுர்யமாகவெல்லாம் பேசிவிட மாட்டார். குழந்தைத்தனமாக இருக்கும் இவரது அணுகுமுறை. இவருக்கு ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தது; போனார். விடுமுறைக்கு வருவார். அப்போது கூட, வெளிநாட்டுச் சம்பாத்தியத்திற்கான ஆடம்பரங்கள் அறிகுறிகள் எதுவும் தெரியக் காணோம்.
ஒருநாள் ஒரு கலந்துரையாடலின் போது, ஒவ்வொன்றாக எடுத்து விட்டார் பாருங்கள், சங்கதிகளை... நண்பர் கூட்டம் அசந்து போனது. அங்கிங்கெனாதபடி எல்லாத் திசைகளிலும் சிறு சிறு சொத்துகளை அவ்வப்போது வாங்கிப் போட, எல்லாம் கண்டபடி விலை ஏறி விட்டன. இப்போது, இவருக்கு எவ்வளவு தேறும் என்பது தெரிய வந்தது. 'அடேங்கப்பா...' என்றது நட்பு வட்டம். பொறாமைக்குள்ளாகாத வளர்ச்சி. இவர் விஷயத்தில் பொறாமையை மிஞ்சி விட்ட உணர்வு என்ன தெரியுமா? வியப்பு மேலிட்டதே அது தான்.
உறவினர் ஒருவர் நொடித்துப் போனார். இவரது விலை மிகுந்த ஆடைகள் கூட, கிட்டத்தட்ட சந்தை போல் ஆகிவிட்டன. உலோகக் கடிகாரம், சாதாரண தோள்பட்டைக் கடிகாரமாக ஆக, பிரேஸ்லெட் மாயமாகி, காசிக் கயிறாயிற்று. அங்கு கவரிங் அரங்கேறியது. ரயில்களில் உயர் வகுப்பில் பயணம் செய்தவர், சாதா ஸ்லீப்பருக்கு மாறினார். நல்ல தோல் செருப்பும், ரப்பர் ஸ்லிப்பர் ரகமாக ஆனது.
பின், இனியும் தலை காட்ட முடியாது என்று வெட்கப்பட்டு, தலைமறைவு வாழ்க்கைக்கு உள்ளானவர் போல் ஆனார்.
காலம் உருண்டோடியது. திடீரென ஒரு திருமணத்தில் தோன்றினார். எடுத்து விட்டார் பாருங்கள், தம் இன்றைய வளர்ச்சியை... வியந்து போனது உறவுக் கூட்டம். 'சாதித்தால் இப்படியல்லவா சத்தமின்றி சாதிக்க வேண்டும்...' என்று சொல்லாதவர் பாக்கி இல்லை.
காற்றாலைக்காரர்களுக்கு இடம் பார்த்துக் கொடுப்பது, இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அரசிற்கு விற்று, இதற்கான காசை வசூலித்துக் கொடுப்பது என்று சேவைத் தொழிலை எளிதாக ஆரம்பித்தவர், இன்றைக்கு, இவர் இன்றி காற்றாலை உலகம் இல்லை என ஆகிவிட்டது. சைக்கிள் வாகனம், ஸ்கோடா காராக ஆகிப் போனது. ஓட்டு வீடு, 4,000 சதுர அடி வீடாகிப் போனது, மகளுக்கும் பெரிய இடத்தில் சம்பந்தமாம்.
'வாழ்வில் நான் தோற்றதும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். எந்தச் சமூகத்தால் வெறுக்கப்பட்டேனோ, அதனால், அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், நான்கு காசு அல்ல; 40 காசு சம்பாதிக்க வேண்டும் என்று கோபம் வந்தது. அதைச் சாதிக்கும் வரை, சமூகத்தோடு தொடர்பே வேண்டாம் என, ஒதுங்கி நின்று உழைத்தேன். மார் தட்டுவதை விட, என்னைப் பட்டை தீட்டிக் கொள்வது என முடிவு செய்தேன்; உழைத்தேன். அறிகுறி காட்டாத வளர்ச்சி தான், நமக்குச் சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்தேன். நினைத்தது நிறைவேறியதும் தான், இப்போதெல்லாம் வெளியே வருகிறேன்...' என்று அசத்தினாரே பார்க்கலாம்!
சத்தமின்றி சாதிப்பவர்கள், ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கின்றனர். 'நான் யார் தெரியுமா?' என்று வீண் பேச்சுப் பேசாமல், தன்னை யார் என்று சமூகம் தானாகத் தெரிந்து கொள்ளும் வரை, பேச்சில் கவனம் செலுத்தி, இதில் வீணாக்கும் சக்தியை, செயலில் வடித்துக் காட்டுவோம் என்று இறங்கி விடுகின்றனர்.
கேலி பேசி, வார்த்தை அம்புகளால் தாக்கி, பிறரை உருக்குலைக்க முன்வரும் சமுதாயம், ஏனோ கை தூக்கி விட மட்டும் முன் வருவது இல்லை. மேலைநாடுகளில், அவரவர், தானுண்டு, தங்கள் கடமை உண்டு என வாழ்கின்றனர். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதே இல்லை.
முதுகில் குப்பையை சுமந்து, 'உன் சட்டையில், 'இங்க்' கறை இருக்கிறது; இப்படியா கவனிக்காமல் சட்டை அணிவது...' என்று பிறரைச் சுட்டு விரல் காட்டும் நபர்கள், இங்கு மிக அதிகம்.
வீண் வம்பு பேசும் இச்சமூகத்திற்கு, நீங்களும் உங்கள் செயல்களால், ஆற்றலால், திறமையால், உழைப்பால், திரண்டதொரு கும்மாங்குத்து விடத் தயாராகுங்கள்.
வெட்டிப் பேச்சாளர்களை கட்டிப் போட, இதுவே சிறந்த வழி!
- லேனா தமிழ்வாணன்