PUBLISHED ON : ஜூலை 03, 2011

கடவுளின் படைப்பில் பூமி, மரம், செடி, கொடி மற்றும் பல ஜீவராசிகளும் அடங்கும்; இவைகளில் தண்ணீரும் ஒன்று. எல்லாவித ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியமாகிறது. இது ஒன்று மட்டுமில்லையேல், உயிர் வாழ்வது முடியாததாகிறது. இந்த தண்ணீரும், பகவான் கருணையின் காரணமாக, ஜீவராசிகளுக்கு அளிக்கப்பட்டது; அதை, தீர்த்தம் என்று புனிதமாக கருதினர்.
தண்ணீரெல்லாம் தீர்த்தமாகி விடாது; அது போல், மனிதர்கள் எல்லாருமே மகான்களாக மாட்டார்கள். சரீரத்தின் தத்துவத்தில் மயங்காமல் உயிர், சரீரம் என்பதை பிரித்து, தனித்த மன இன்பத்தில் வாழ்பவன், 'ஆத்ம ஞானி' எனப்படுவான். அதாவது, சரீர சுகத்துக்கு முக்கியத்துவம் தராமல், இந்த ஆத்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த ஆத்மா நற்கதி பெற முயற்சி செய்வது தான் ஞானம் - ஆத்ம ஞானம் என்பதெல்லாம்.
இந்த ஆத்ம ஞானம் பெற, மூன்று வித சக்திகள் துணை புரிகின்றன. உடலை கருவியாக கொண்டு அடையும் கிரியைகளின் சாதனையும், அந்த சாதனையால் புத்தி ஒரு நிலைப்படுவதையும், அதனால், பெறும் பேரின்ப நிலையும், மூன்று சக்திகளால் கிடைப்பதாகும். இவைகளை பெறச் செய்யும் சக்திகள் தான் சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி என்ற வேதங்கள்.
சூரியனிடமிருந்து தோன்றும் கிரணங்களில் விளங்கும் பிராணனும், அக்கிரணங்களில் உள்ள சக்தியும், அதனால் ஏற்படும் வளர்ச்சியும், இம்மூன்று சக்திகளால் உண்டாவது தான். இம்மூன்று தேவியரை வழிபடுவதால் ஆத்மஞானம் ஏற்பட இவர்கள் வழி காட்டிகளாக உள்ளனர்.
பிரம்மதேவன் பழம்பெரும் ஆத்ம ஞானி. இவருடைய மனைவியர் சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி என்ற மூவர்! பிரம்மா செய்த யாகத்துக்கு, சாவித்ரி வராததால், 'சாவித்ரி இல்லாவிட்டால், காயத்ரியை கொண்டு வந்து பிரம்மதேவனின் பக்கத்தில் வைத்து யாகத்தை நடத்துங்கள்!' என்றார் விஷ்ணு.
காயத்ரியை, யாக பத்தினியாக வரித்து, யாகத்தை நடத்தினான் தேவேந்திரன். இது சமயம், அங்கு வந்து விட்டாள் சாவித்ரி. தன்னை நீக்கி, காயத்ரியை, யாக பத்தினியாக வைத்து, பிரம்மா, யாகம் நடத்துவது கண்டு கோபம் கொண்டாள். இதற்கு உடந்தையாக இருந்த ருத்ரன், விஷ்ணு, இந்திரன் ஆகிய மூவருக்கும் சாபம் கொடுத்தாள்.
அந்த சாபத்தின் பலனாக, ராமாவதாரத்தில் மனைவியை பிரிந்து அலையும்படியும், பிறகு கிருஷ்ணாவதாரத்தில் இடையர் குலத்தில் பிறந்து, மாடு மேய்க்கும்படியும், ருத்ரனுக்கு பங்கு இல்லாமலும், இந்திரனை தாருகா வனத்தில் ரிஷிகள் யாகம் செய்து அழிக்க முற்படுவர் என்றும், உலகில் ருத்ரனை லிங்க வடிவில் வழிபடுவர் என்றும், இந்திரனுக்கு அசுர பயம் ஏற்படும் என்றும்...
லட்சுமி ஓரிடத்தில் நில்லாது அலைந்து கொண்டிருப்பாள் என்றும், அக்னி எதை, எவ்வளவு தான் புசித்தாலும் பசி அடங்காது என்றும், ரிஷிகளும், ரித்விக்குகளும் இனி கை நீட்டி தட்சிணை வாங்கியும், பிறர் வீட்டு அன்னத்தை புசித்தே வாழ்வர், உமையவள் மலை நாட்டில் பிறப்பாள், தேவேந்திரன் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து அலைவான். அதனால், நகுஷன் இந்திர பதவி ஏற்பான், அவன் மனைவியும் பாதிக் கப்படுவாள் என்றெல்லாம் சாபம் கொடுத்தாளாம். பின்னர், விஷ்ணு, சாவித்ரி தேவியை சமாதானப் படுத்தி, மிகவும் புகழ்ந்து பாராட்டியதால், சாவித்ரி தன் சாபத்தை நல்லபடியாக மாற்றி, அருள் செய்தாள் என்பது கதை.
***
ஆன்மிக வினா-விடை!
ஸ்ரீ சுதர்சன ஹோமத்தை, வீட்டில் செய்வதால் என்ன நன்மை?
ஸ்ரீ சுதர்சன ஹோமத்தை வீட்டில் செய்யலாம், நன்மைகள் சித்திக்கும்; ஆனால், சுதர்சன மந்திரத்தை, குரு உபதேசம் பெற்றுத்தான் ஜெபம் மேற்கொள்ள வேண்டும்.
***
- வைரம் ராஜகோபால்
