தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (9)

நானா போனதும்; தானா வந்ததும்! (9)

நானா போனதும்; தானா வந்ததும்! (9)


PUBLISHED ON : ஜன 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்திரிகை நிருபர்களின் கடின உழைப்பை, நிழலில் உட்கார்ந்து வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் புரிந்து கொள்வதில்லை என்று, ஒரு கருத்து, பொதுவாக நிருபர்கள் வட்டாரத்தில் உண்டு.

நாமே, கொஞ்சம் நிருபர் வேலை பார்த்தால் என்ன என்று, ஆசிரிய இலாகாவினருக்கு தோன்றியது.

எங்கள் ஆசை நிறைவேற, ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் ஆசிரியர்.

ஆசிரியருடன், எடிட்டோரியல் மீட்டிங் நடத்துவதற்காக, கடற்கரை நோக்கி போய்க் கொண்டிருந்தோம்.

வள்ளுவர் கோட்டம் அருகே வண்டி நின்றது...

'யாராவது ஒருத்தர் இறங்கிக்கலாமே?' என்றார்.

ஆசிரியர் இறங்க முடியாது; ஏனென்றால், அவர்தான் டிரைவ் செய்து கொண்டிருந்தார்.

சீனியாரிட்டிபடி நாங்களே தீர்மானித்து, ரா.கி.ர., இறங்கிக் கொண்டார்.

ஏன் இறங்க வேண்டும் என்பதுதான், சுவையான சஸ்பென்ஸ்.

இறங்கிக் கொண்டவர், தன் இஷ்டத்துக்கு, எங்கே வேண்டுமானாலும் போய், யாரை வேண்டுமானாலும் பார்த்து, பேட்டி காணலாம்.

மறுநாள் பேட்டி கட்டுரையை, எழுதிக் கொண்டு வர வேண்டும். ஒருத்தரே, ஒன்றுக்கு மேற்பட்டவர்களையும் பேட்டி காணலாம்; அது, அவரவர் சவுகரியம். பேட்டிக்கு ஒருத்தருமே தோதாக அகப்படவில்லை என்றாலும், பரவாயில்லை.

எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டார் புனிதன்.

நேரு ஸ்டேடியத்தில் இறங்கிக் கொண்டேன் நான்.

கால் போன வாக்கில், உற்சாகமாக நடந்து கொண்டிருந்தேன். ஒரு பஸ் ஸ்டாப்பில், பல பேர் காத்திருந்தனர்.

கும்பலில் நின்று கொண்டிருந்த என்னிடம், ஒரு டீசன்ட்டான பேர்வழி, 'பிரதர்... இரண்டு ரூபாய் தர முடியுமா?' என்றார்.

'ஹையா...' என்று குதூகலித்து, 'இவரே நம் பேட்டிக்குரியவர்...' என்று தீர்மானித்து விட்டேன்.

'உங்களுக்கு ஏதும் அவசரமா?' என்றேன்.

'நமக்கு ஒரு அவசரமும் இல்லை...' என்று மூக்குக் கண்ணாடியை எடுத்து, துடைத்து போட்டுக் கொண்டார்.

நான் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமே என்று, 'நான் ரூபாய் தருகிறேன்; ஆனால், நீங்கள் ஏன் இப்போது மூக்குக் கண்ணாடியை கழற்றி, துடைத்து போட்டுக் கொண்டீர்கள்?' என்றேன்.

தடுமாறிப் போய் விட்டார் அவர்.

'என்ன சார்... இதை போய் கேட்கறீங்க... துடைத்து போட்டுக் கொள்ளணும் போல் இருந்தது; துடைத்து போட்டுக் கொண்டேன்...' என்றார்.

'சரி... ஒரு நாளைக்கு, உங்களுக்கு எவ்வளவு வசூல் ஆகும்? எல்லாரிடமும், ரெண்டு ரூபாய்தான் கேட்பீர்களா... ஆளுக்கு தகுந்தபடி கேட்பீங்களா?'

'என்ன சார்... பத்திரிகை பேட்டி மாதிரி கேட்கறீங்க?'

'சரியா சொன்னீங்க... நான் பத்திரிகைக்காரன்தான். நான் கேட்டேனே, எவ்வளவு வசூல் ஆகும்ன்னு; பதில் சொல்லலையே...'

'ஆகும் சார்... பலவிதமாக ஆகும். நூறு ரூபாய் ஆனா போயிடுவேன்; ஹாஸ்டல்லே காத்திருப்பாங்களே!'

'ஹாஸ்டலா... என்ன ஹாஸ்டல்?'

'ஒரு அனாதை விடுதி இருக்குது நம்ம வூட்டாண்டை!'

'உங்க வீடு எங்கே... என்ன வாடகை?'

'நீங்க வேற, மரத்தடிதான் சார்!'

'நீங்களும், அனாதை விடுதியிலே இருக்கீங்களா?'

'நம்ப மாட்டீங்க... நமக்கு திருவாரூரிலே, ரெண்டு வேலி நிலம் இருக்கு சார். ஆனால், வில்லங்கத்துலே இருக்குது. கோர்ட்டுக்கு செலவு செய்ய, துட்டு இல்லை. எல்லாம், அண்ணன் - தம்பிங்கதான். கூட்டணியா சேர்ந்து, மோசடி பண்ணிட்டாங்க. கேஸ் நடத்தத்தான் இப்படி பிச்சை கேட்கிறேன். கிடைக்கிறதிலே பாதியை, விடுதிக்கு தந்திடுவேன். ஒரு நாளைக்கு, நூறு ரூபாய் சேர்ந்ததும், விடுதிக்கு போயிடுவேன். பாவம், நூறு குழந்தைங்க இருக்குதே. நானே கஞ்சி காய்ச்சி ஊத்திடுவேன். எல்லாம் ஒரு கீற்றுக் கொட்டாய்தான். மழையை நினைச்சால்தான் பயமா இருக்குது. கீத்து வேயணும்னா கூட, நூறு ரூபாயாச்சும் வேணுமே? நானே வேய்ஞ்சுடுவேன்; ஆனால், கீத்து வாங்கணுமே! எவன் சும்மா தருவான் சொல்லுங்க. ரெண்டு ரூபாய் தர்றதுக்கு, நீங்க, ஆயிரம் கேள்வி கேட்டு, என் டைமை வேஸ்ட் பண்றீங்க...'

'அவசரப்படாதீங்க சார்... நான் உங்களுக்கு உதவி செய்ய முடியுமான்னு யோசிக்கிறேன். நான் சொல்ற இடத்துக்கு, நாளைக்கு வர்றீங்களா? ஒரு டிரஸ்ட் இருக்குது. ஏழைங்க விடுதிக்கு, கூரை போடணும்னா நிச்சயம் உதவுவாங்க...' என்று விலாசம் எழுதித் தந்தேன். 'ஆமாம்... உங்க விடுதி விலாசம் சொல்லுங்க; எழுதிக்கிறேன்...'

'எழுதிக்குங்க... அர்ப்பணநாதன், உல்லாஸ் பாக்கம், அமிஞ்சிக்கரை...'

'நம்பர் கிம்பர் கிடையாதா? சரி... ஒரு காரியம் பண்ணலாம். நானே உங்களோடு இப்ப வர்றேன். அதோ, 15ம் நம்பர் வருது. அமிஞ்சிக்கரை போகும்; சீக்கிரம் வந்து ஏறுங்க. டிக்கெட் நான் வாங்கறேன்...'

அவர் ஏறவில்லை; நான் தான் ஏறினேன். பஸ்சில் போய் கொண்டே, 'ஏறுய்யா... சீக்கிரம் ஏறு ஏறு...' என்றேன்.

அந்த ஆசாமி, கீழே இருந்தவாறே கையை ஆட்டி, யாரிடமோ கை நீட்டியபடி, நகர்ந்து விட்டான்.

அமைந்தகரையில் இறங்கி, அர்ப்பணநாதனையும், உல்லாஸ் பாக்கத்தையும், இருட்டுகிறவரை தேடி, மறுநாள், வெறும் கையுடன் காரியாலயம் சென்றேன்.

நண்பர் புனிதன், ஏக உற்சாகமாக இருந்தார்; இரண்டு பேட்டி கட்டுரை எழுதி விட்டாராம்!

இறங்கிக் கொண்ட எழும்பூரில் ஒரு கட்டுரை.

அப்புறம், நேரு ஸ்டேடியத்து பக்கம் வந்தாராம்.

அமிஞ்சிக்கரை அர்ப்பணநாதன் என்ற நபரை சந்தித்தாராம். அந்த ஆள் பிச்சை எடுத்து, ஒரு பிச்சைக்கார விடுதி நடத்தி வருகிறாராம். மழைக்கு கீற்று போட, நூறு ரூபாய் திரட்டக் கஷ்டப்படுகிறார். நான், 50 ரூபாய் தந்து விட்டு வந்தேன். ஏதோ என்னால் ஆனது. அப்புறம், ஒரு சுவாரசியமான தகவல்...

'அந்த ஆசாமிக்கு, திருவாரூரிலே இரண்டு வேலி நிலம் இருக்கிறதாம். ஏதோ வில்லங்கமாம். இன்றைய விலையில், அது, 20 கோடி ரூபாய் பெறும். பாவம், இங்கே பிச்சை எடுக்கிறார்...'

'விடுதிக்கு போய் பார்க்கிறதுதானே!'

'அதை ஏன் கேட்கிறே? உங்களோடயே வர்றேன். உங்க விடுதிக்கு போகலாம்ன்னு பஸ் கூட ஏறிட்டேன்...'

'அவர் ஏறாமல், கீழேயே நின்னிருப்பாரே...'

'எப்படி உனக்கு தெரியும்?' என்றார் புனிதன்.

'இதெல்லாம் சகஜமப்பா...' என்று சொல்லி, சிரித்தேன்.

— தொடரும்.

பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us