தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (3)

நானா போனதும்; தானா வந்ததும்! (3)

நானா போனதும்; தானா வந்ததும்! (3)


PUBLISHED ON : நவ 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருதரம் கொடைக்கானல் சென்றிருந்த போது, கொடைரோடு ஸ்டேஷனில் ஒரு பழக்காரரிடமிருந்து, ரயில் ஜன்னல் வழியே பழ வியாபாரம் செய்தேன். பச்சைப் பசேல் என்று, சிறு சிறு உருண்டையாக, அழகிய கொத்துக்களாக அடுக்கி வைத்த திராட்சை பழம் வந்தது.

கூடைக்காரன், சாம்பிளுக்கு ஒரு பழத்தை எடுத்துத் தந்தான். இனிப்பாகவே இருந்தது; பேரம் செய்ய நேரமில்லை. கிலோ, 60 ரூபாய் என்று சொன்னான். ரயில் அசைந்ததால், உடனே தந்து விட்டேன்.

பத்திரமாக அதை சென்னைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் பதவிசாக பையில் வைத்தேன். ஒரு திராட்சையை உதிர்த்து வாயில் போட்டுக் கொண்டேன்.

உச்சி முடி, 'செத்தேனே...' என்று கூவியது; உலக மகா புளிப்பு. ஜென்மத்தில் அப்படி ஒரு புளிப்பை நான் சாப்பிட்டதில்லை. பெருங்கவலை பிடித்துக் கொண்டது. ஊருக்குப் போனதும் மனைவியிடம் என்ன விதமாக, 'டோஸ்' வாங்குவது, எப்படி சமாளிப்பது என்று கவலையாகி விட்டது.

நான் அசட்டுக் காரியம் ஏதாவது செய்யும் போதெல்லாம், அதை செய்து விட்டுச் சற்று நிதானமாக, இரண்டு வகைகளில் யோசிக்கும் வழக்கம் உண்டு.

தலையா போய் விடும் என்ற சிந்தனை, முதல் வகை.

அடுத்தது, 'தலையும் போகாமல், அந்த நஷ்டத்தை நமக்கு லாபகரமாக எப்படிச் செய்யலாம்...' என்பது, அடுத்த வகை.

ஒரு மனோதத்துவ ஞானி கூறியது போல, நம் மூளை புதிதாக ஏதாவது யோசிக்க வேண்டுமானால், அதனிடம் உள்ள பழசு உடனே போயாக வேண்டும். ஒருத்தர் வீட்டைக் காலி செய்தால்தான், வேறொருத்தர் குடிபுக முடியும். இரண்டு வாள், ஒரு உறையில் இருக்க முடியாதல்லவா?

ஆகவே, முதலில் மனைவி பற்றிய பயத்தை நீக்கிக் கொண்டேன்.

இப்போது, மூளை காலியாக உள்ளது. அதாவது, புதிய யோசனைக்கு வரவேற்பு கொடுக்க இடம் ஒழித்து வைத்திருக்கிறது.

இந்த மாதிரி சமயத்தில் மாற்றி யோசிக்க வேண்டும். மனைவியின் கோபம் என்பதை, மனைவியின் மகிழ்ச்சி என்று மாற்றிக் கொள்வேன். மனைவி இந்த புளிப்பான பச்சை திராட்சையை பார்த்து சந்தோஷப்பட வேண்டும்.

மூளையுள்ள எந்த மனைவியாவது சந்தோஷ்பபடுவாளா? பட வேண்டும் நைனா! பின்னே, நம்ம மூளை எதற்கு இருக்கிறது? யோசி யோசி!

இந்தப் புளிக்கும் பச்சைத் திராட்சையை மனைவி விரும்புவது போல செய்ய வேண்டும்; அப்படி செய்ய முடியாது. இயற்கை பயங்கர புளிப்பாக படைத்து விட்டது. 'ரயிலில் எதிரிலிருந்த யாரோ ஒருத்தர் ஓசியில் கொடுத்தார்; வாங்கி வந்தேன். புளித்தால் வீசி எறிந்து விடு...' என்று சொல்லி, தப்பித்து விடலாம்.

'ஹூம்... அநியாயத்துக்கு, 60 ரூபாய் நஷ்டம்!

இன்னும் சற்றுக் கசக்கிக் கொண்டு ஆராய வேண்டும்; ஆராய்ந்தேன்.

அது எறியப்படக் கூடாது; மனைவியால் வெறுக்கப்படக் கூடாது; மனைவி விரும்புவதை போல மாற்ற வேண்டும்.

நிதானம் நிதானம்! நிதானமாக யோசி! மனைவிக்கு என்னென்ன விருப்பமான செயல்கள்? பொழுதுபோக்குகள்?

'டிவி'யில் சமையல் குறிப்புகள், புது வகைச் சமையல் செய்வதை சலிக்காமல் பார்ப்பாள்; நடுநடுவே தானும் முயற்சி செய்வாள்.

அது பற்றி நிறைய பேசுவதில் ஆர்வம் உள்ளவள்.

டைரி போட்டு, சமையல் குறிப்பு எழுத உதவுவேன். ஐ-பாடில் பதிவு செய்து வருவேன்.

தெளிவு பிறந்தது. அவளுக்கு ஒரு சின்ன மப்ளர் வாங்கியிருந்தேன். சராசரி மகிழ்ச்சி.

'ஹூம்... அப்புறம்?' என்றாள்.

'ஒரு பிரமாத அபூர்வ, அதிசய, அதிர்ஷ்டமான விஷயம் உனக்காக...' என்று பீடிகை போட்டேன்.

'சொல்லுங்க சொல்லுங்க!'

சிரித்துக் கொண்டே வெளியே எடுக்காமல் அறிமுகம் செய்தேன். 'ரொம்ப அபூர்வமாம். கொடைக்கானல் ஸ்பெஷலாம். ஏதோ ஒரு சீசனில்தான் வருமாம். அடித்துக் கொண்டு சாகின்றனர். நான் சாமர்த்தியமாக எப்படியோ புகுந்து, வாங்கி விட்டேன். திராட்சைக்குப் பெயரே ஊறுகாய் திராட்சை. நம்ம ஊர் பச்சை திராட்சை மாதிரியேதான் இருக்கிறது. ஆனால், அந்த மாதிரி புளிப்பு இந்த உலகத்தில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

'புளி, எலுமிச்சம் பழம் இதெல்லாம் இந்த திராட்சைக்கு உரமாக போட்டு வளர்க்கின்றனராம்; ரொம்ப விலை. நீ சண்டைக்கு வராதே. ஒரு கிலோ, இருநூறு ரூபாய். நான் வாங்கியே வாங்கிட்டேன். யாருக்கும் ஒரு சின்ன திராட்சை கூட நீ கொடுத்து விடாதே. தனியாக ஒரு பெரிய கண்ணாடி ஜாடி வாங்கிடறேன். அதிலே போட்டு வச்சிடு. உதிர்த்துப் போடு.

'எப்படி உறுகாய் போடணுமோ அதே மாதிரி காரம், உப்பு இதெல்லாம் வழக்கம் போல்தான். ஒருத்தருக்கு ஒரு திராட்சைக்கு மேல் போடக் கூடாது. மாவடு மாதிரி... ஆனால், அதை விட, நூறு மடங்கு இது ஒஸ்தியானது...' பையிலிருந்து திராட்சையை எடுத்து வைத்தேன். அந்தப் புளிப்பு மலை அழகாக தட்டில் அமர்ந்தது.

மனைவி பயபக்தியுடன் அதைத் தொட்டுப் பார்த்தாள். 'ஒண்ணை வாயில் போட்டுப் பார்க்கட்டுமா?'

'வேண்டாம்... ஊறுகாய் போட்ட பிறகு ருசி பார்க்கலாம்...' இப்படியாகத்தானே வீட்டுக்கு வந்த கொடிய புளிப்பு திராட்சைக்கும் ஒரு மதிப்புத் தேடிக் கொடுத்தேன்.

ஒரு வாரத்தில் அந்த விஷயம் மறந்தே விட்டது. புறக்கடைப் பக்கம் சில காக்காய்கள் காரா பூரே என்று கலவரமாக கத்திக் கொண்டிருந்தன.

சில சமயம் காக்கைகளின் உள்நாட்டுக் கலவரத்தில் ஒற்றைக் காக்கையை வளைத்து, எல்லா ரவுடிக் காக்கைகளும் இம்சைப் படுத்துவது உண்டு. நான் தலையிட்டு விரட்டி விடுவேன்.

இந்தத் தடவை அந்த மாதிரி எதுவும் இல்லை. பச்சைப்பசேல் என்று எதுவோ கொட்டிக் கிடந்தது.

மனைவிகள் ஏமாறுவதில்லை.

— தொடரும்.

பாக்கியம் ராமசாமி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us