PUBLISHED ON : மே 05, 2013

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்... என்ற பாரதியின் பாடல் இன்றும் கனவாகவே இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 66 ஆண்டுகளாக பேசப்படும் திட்டம், நதிநீர் இணைப்பு. லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போது மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரமாக இத்திட்டம் அமையும். ஆனால், ஆட்சிக்கு வரும் கட்சிகளோ இத்திட்டத்தை கண்டுகொள்வது இல்லை. தண்ணீருக்காகவே, மூன்றாம் உலகப் போர் மூளும் என்கின்றனர் அறிஞர்கள். தேசிய ஒருமைப்பாடு பேணும் நாட்டில், ஒரு புறம் வாட்டி எடுக்கும் வறட்சி, மறுபுறம் அடித்து செல்லும் வெள்ளம் என, இயற்கை தாண்டவமாடுகிறது. இந்நிலை மாற நதிநீர் இணைப்பு முக்கியம்.
ஏற்கனவே, இத்திட்டத்தை கொடுத்த கே.எல்.ராவ், நீர் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டும் கூட, மின்செலவை காரணம் காட்டி திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கேப்டன் தஸ்தர் கொடுத்த திட்டமும், தொழில் நுட்ப ரீதியாக ஏற்க முடியாது என கைவிடப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த கோரிக்கையை அடுத்து, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, 'தேசிய நீர்வள மேம்பாட்டு ஏஜென்சி' ஏற்படுத்தப்பட்டது. 30 ஆண்டுகளாகியும் பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
'கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை' திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், நாட்டிற்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்கிறார், மதுரை மத்திய அரசின் நதிநீர் இணைப்பு உயர்மட்ட கமிட்டி உறுப்பினரும், தேசிய நீர்வள மேம்பாட்டு தொழில்நுட்ப ஏஜென்சி தலைவருமான ஏ.சி.காமராஜ். இவர் தலைமையில் 100 பொறியியல் வல்லுனர்களால் தொழில் நுட்ப ரீதியாகவும், பூகோள அமைப்பின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது, 'கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை' திட்டம்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வரப்பெற்ற, அனைத்து நதிநீர் திட்டங்களையும் மத்திய அரசு ஆராய்ந்த பின், இத்திட்டத்தை சிறந்தது என அறிவித்தது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை, ஏ.சி.காமராஜ் தலைமையிலான குழுவினர் சந்தித்து, இத்திட்டம் குறித்து தெரிவித்த போது, பாராட்டியுள்ளார். ஆனாலும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ, இத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டவில்லை.
இத்திட்டம் குறித்து ஏ.சி.காமராஜ் கூறியதாவது: தேசிய நீர்வழிச்சாலை திட்டம், இமயமலை நீர்வழிச்சாலைகள், மத்திய நீர்வழிச்சாலைகள், தெற்கு நீர்வழிச்சாலைகள் என வரைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான தண்ணீரும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் வீணாவதிலிருந்து தடுக்கப்படும். இமயமலை நீர்வழிச்சாலை திட்டத்தில், நீர்வழிச்சாலைகள் 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும்.
நீர்வழிச்சாலைகளில், ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீரை அனுப்பலாம். கங்கையிலிருந்து காவிரிக்கு அனுப்பலாம். பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளத்தை இதில் திருப்பலாம். நாட்டில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. நீர்வழிச்சாலைகள் திட்டம், பல்வேறு பொருட்களை படகு மூலம் கொண்டு செல்லவும், மனிதர்களுக்கு ஏற்ற போக்குவரத்தாகவும் அமையும். 15ஆயிரம் கி.மீ., நீளத்தில் அமையும்.
அறுநூறு மில்லியன் பேருக்கு, தடையின்றி குடிநீர் கிடைக்கும். 1,500 கோடி ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 2,500 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். 40 ஆயிரம் கோடி வெள்ளச்சேதம் தவிர்க்கப்படும். அரசு, தனியார் முதலீடு என திட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன் ஒரு பகுதியான தமிழக நீர் வழிச்சாலை மூலம் 900 கி.மீ., நீளமுள்ள நீர்வழிப்பாதை அமையும். ஐந்து கோடி பேருக்கு தண்ணீர், 17 ஆறுகள் இணைப்பு, 75 லட்சம் ஏக்கருக்கு கூடுதல் பாசன வசதி, 1800 மெகாவாட் மின் உற்பத்தி சாத்தியம்...' இப்படி அவர் கூறுகினார்.
காவிரி தீர்ப்பு குறித்து மத்திய அரசு இதழில் வெளியிட்டு சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதா, நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுக்க வேண்டும். முதற்கட்டமாக தமிழக நீர்வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாரதியின் கனவை நனவாக்க வேண்டும்.
எம். ரமேஷ்பாபு