
நல்லவர்களாக இருக்க, அனைவருமே விரும்புகிறோம். அதற்காக, யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி, அதன் அடிப்படையிலேயே செயல்படுகிறோம்.
விளைவு... என்னவாகும் என்று, 'யசோதர காவியம்' எனும் ஞான நுால் கூறுகிறது:
மகத நாட்டை, மாரி தத்தன் என்பவர், அரசாண்டு வந்தார். மிகவும் நல்லவர்; யார் என்ன சொன்னாலும், அப்படியே நம்பி செயல்படுவார்.
ஒருநாள், அழகான ஒரு சோலையில் நடந்து கொண்டிருந்தார், மன்னர். அப்போது, தேங்காய் ஒன்று, அவர் தலையில் விழுந்தது; வலியால் வருந்தினார்.
அதைப் பார்த்த ஊர் வம்பு பேசும் சிலர், 'மன்னா... விபரம் தெரியாதா, இது, இந்த சோலையில் இருக்கும் ஓர் அம்மனின் ஏவல். அந்த அம்மனை குளிரச் செய்ய வேண்டும். ஆடு, பன்றி, கோழி முதலானவைகளை அவளுக்கு பலியிட்டு படைக்க
வேண்டும். அப்படி செய்தால், இனி, உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது...' என்றனர்.
அவர்களின் வார்த்தைகளை உண்மையென நம்பி, அதுபோலவே, பலியிட்டு, பூஜைகள் செய்தார்.
அந்த நேரத்தில், அந்தப்பக்கமாக, அபயருசி எனும் முனிவர் சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும், 'இவரையும் அழைத்து வந்து, நரபலி கொடுத்தால், அம்மன் பெருமகிழ்வு அடைவாள்...' என, மன்னரின் மனம் எண்ணியது.
உடனே, சண்டகருமன் எனும் பணியாளை அழைத்து, 'போய், அந்த முனிவரை பிடித்து, இங்கே அழைத்து வா...' என, ஏவினார், மன்னர்.
முனிவரை பிடித்து வந்து, மன்னரின் முன் நிறுத்தினான், பணியாளன்.
மன்னரும் மகிழ்வோடு, முனிவரை, அம்மன் முன் நிறுத்தி, பலி கொடுக்க, வாளை உருவினார்.
பலமாக சிரித்தார், முனிவர்.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
'முனிவரே... ஏன் சிரிக்கிறீர்கள்...' என, குழப்பத்தோடு கேட்டார்.
'மன்னா... விபரம் அறியாமல் தவறு செய்கிறாய், நீ. இளமைப் பருவத்தில், உன் கையில் இருந்த தேங்காய் ஒன்றை, ஓர் எளியவன் தலையில் வீசி அடித்தாய்; வலி தாங்காமல் வருந்திய அந்த எளியவன், மன்னரின் மகனாக இருக்கும் உன்னை ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டான்.
'அவ்வினைக்கு எதிர்வினையாக தான், உன் தலை மீது, இப்போது தேங்காய் விழுந்தது. அதை அறியாமல், பல உயிர்களை கொலை புரிந்தாய், இன்று. இந்த கொலை பாதகத்தின் பயனாக, இன்னும் பல பிறவிகளுக்கு கொடிய தொல்லைகளை அனுபவிக்கப் போகிறாய், நீ...
'உன் தலை மீது தேங்காய் விழுந்ததால் உண்டான வலியை, நீ அறிந்துள்ளாய். அப்படி இருந்தும், பிற உயிர்களை துன்புறுத்தி பலி கொடுத்து, அவைகளுக்கு வலி உண்டாக்கினாயே... இது எவ்வளவு அறியாமை. அதை நினைத்தேன்; சிரிப்பு வந்து விட்டது எனக்கு; சிரித்தேன்...' என்றார், முனிவர்.
முனிவரின் வார்த்தைகளால் உண்மையை உணர்ந்து, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், மன்னர்.
நமக்கு துன்பமானவை இவையென்று தெரிந்தும், அதை அடுத்தவருக்கு செய்வது சரியா என்று கேட்டு, பெரியோர் உணர்த்திய இக்கதை, 'யசோதர காவியம்' எனும் பழைய நுாலில் இடம் பெற்றுள்ளது.
பி. என். பரசுராமன்