PUBLISHED ON : டிச 29, 2013

உலக மக்களிடையே, பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டுவோரை சித்தர்கள் என்று போற்றுவர். இவர்களில் சிலர், அஷ்டமா சித்திகளைப் கைவரப் பெற்றவராய் இருப்பர். அஷ்டமா சித்தி என்பது, நினைக்கும் உருவம் எடுப்பது, நினைத்ததைப் பெறுவது, நினைத்த இடத்துக்கு ஆகாய மார்க்கமாய் போவது என்று, பலவிதம் உண்டு. இப்படிப்பட்ட சித்திகளில், ஏதாவது ஒன்றிரண்டை வசப்படுத்தி, பணம், பொருள், புகழ் பெறுவோரும் உண்டு. எல்லா சக்திகளும் கைவரப் பெற்று, எதிலும் பற்றுதலின்றி, தனிமையை நாடி, தவத்தில் ஈடுபடும் சித்தர்களும் உண்டு.
பார்க்கவா என்ற முனி வருக்கும், கனகாங்கி என்ற தேவ மாதுவுக்கும் பிறந்தவர் திருமழிசையாழ்வார். இவர் பல வித சித்திகள் கைவரப் பெற்றவர்.
ஒருமுறை இவர், யோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சுக்திஹாரன் என்ற சித்தர், புலி வாகனத்தில் ஆகாயமார்க்கமாக வந்து கொண்டிருந்தார். திருமழிசை யாழ்வார் அமர்ந்திருக்கும் இடம் வந்ததும், புலி வாகனம் தடைபட்டு நின்று விட்டது. இதற்கு காரணம், கீழே இருக்கும் யோகி தான் என்று அறிந்து, அவரிடம் வந்தார். 'முனிவரே... நீர் உடுத்தியுள்ள கந்தல் துணியை எறிந்து விட்டு, இந்த பீதாம்பரத்தை உடுத்திக் கொள்ளும்...' என்று சொல்லி, பீதாம்பரத்தை நீட்டினர். ஆழ்வார் அதை ஏற்காமல், தன் தவத்தினால் உண்டாக்கப்பட்ட மாணிக்க கவசத்தை, அவரிடம் நீட்டினார். ஆச்சரியப்பட்ட அவர், தன் கழுத்தில் இருந்த மணிமாலையை எடுத்து, 'இதை, ஜபமாலையாக தரித்துக் கொள்ளுங்கள்...' என்றான். ஆழ்வார் தன் கழுத்திலிருந்த துளசி, தாமரை மணி மாலைகளை எடுத்து அவரிடம் காட்ட, அவை நவரத்ன மாலை களாக விளங்குவதை கண்ட புலிவாகன சித்தன், வெட்கித் தலைகுனிந்து, விடைபெற்று சென்றார்.
ஒருசமயம், கொங்கன சித்தர், ஆழ்வாரிடம் வந்து, தான் ரசவாதி என்று கூறி, இரும்பைக் பொன்னாக்கும் குளிகையை கொடுத்து, 'இதைப் பெற்று மகிழ்வீர்...' என்றார். அதைக் கேட்ட திருமழிசையாழ்வார், தன் உடம்பிலிருந்த புழுதியை சேகரித்து, உருட்டி, அவரிடம் நீட்டி, 'இது பல கோடி கற்களைப் பொன்னாக்க வல்லது' என்று கொடுக்க, அவரும் அதைப் பரிசோதித்து பார்த்து, அது உண்மை என்றறிந்து, அவரை வணங்கி, விடை பெற்றுச் சென்றார்.
இங்கு கவனிக்க வேண்டியதுஎன்ன வென்றால், தவத்தின் மூலம், சிரமப்பட்டு பல சித்திகளை பெறலாம். ஆனால், அவைகளை, சுயலாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது. பொன்னையும், மண்ணை யும் ஒன்றாக நினைத்து, பற்றுதல் இன்றி, பகவானை ஆராதிக்க வேண்டும். தனக்குள்ள சித்திகளால், பிறருக்கு துன்பம் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதனால் தான், சித்தர்கள் மனித நடமாட்டமில்லாத தனி இடங்களுக்கும், காடுகளுக்கும் சென்று விடுகின்றனர். ஒரு சித்த புருஷர் வருகிறார் என்றால், அவரிடம் என்னென்ன கேட் கலாம் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டு, வந்து விடுகின்றனர் மக்கள்.இதனாலே அவர்கள் தனிமையை நாடி போய் விடுகின்றனர். எல்லா சித்திகளும் கைவரப் பெற்ற சித்த புருஷர்கள், பேராசைப்பிடித்து அலையும் மக்களின் கண்களுக்கு புலப்பட மாட்டார்களாம்!
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
'பாவ மன்னிப்பு' என்ற மதச் சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன்?
பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர். இந்து மதம் பாவத்தின் அளவுக்கு தண்டனையை விதிக்கிறது; பாவம் உணரப்படும் போது, குறைந்தபட்ச தண்டனை கொடுத்து மன்னிக்கிறது. ஆனால், அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு குருமார்கள் யாரையும் நியமிக்கவில்லை. இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.
வைரம் ராஜகோபால்

